என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகேஷ் சந்திரசேகர்"

    • குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு பெற்றுத்தர ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்.

    இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், "ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்யேந்திர ஜெயின், 2019-ம் ஆண்டு, எனக்கு சிறையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்னை மிரட்டி ரூ.10 கோடி பணம் பெற்றார்" என்ற குற்றச்சாட்டை 3 ஆண்டுகளான நிலையில் இப்போது எழுப்பி உள்ளார்.

    இது குறித்து சிறையில் இருந்தவாறு சுகேஷ் சந்திரசேகர், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு ஒரு கடிதம் எழுதி, அந்த கடிதத்தை தனது வக்கீல் அசோக் சிங் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளார் என தகவல்கள் வெளியாகி புதிய சர்ச்சை வெடித்து உள்ளது.

    இதுபற்றி டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "குண்டர் வீட்டில் குண்டர் நடமாட்டம் நடந்துள்ளதாக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த குண்டரின் பெயர் சுகேஷ் சந்திரசேகர். அவரை ஏமாற்றியவர் ஆம் ஆத்மி கட்சி தலைவர் சத்யேந்திர ஜெயின். இவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி என காட்டுகிறது" என சாடினார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்கையில், "மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் செயல் இது" என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, "பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக குமார் பிஷ்வாஸ் மீது குற்றச்சாட்டு கூறினார்கள். குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது. இப்போது சுகேஷ் கதையை உருவாக்கி உள்ளனர்" என குறிப்பிட்டார்.

    • ஆம் ஆத்மிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர் கூறியிருந்தார்.
    • கெஜ்ரிவால் மீதும் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி துணை நிலை கவர்னருக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

    அதில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மற்றும் திகார் சிறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். சிறையில் தனது பாதுகாப்புக்கு டி.ஜி.பி. ரூ.12.50 கோடி பெற்றதாகவும், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், கவர்னருக்கு கடிதம் எழுதியதால் சத்யேந்தர் ஜெயின் மற்றும் முன்னாள் டி.ஜி.பி.யால் தான் மிரட்டப்படுவதாக தனது வக்கீலுக்கும், ஊடகங்களுக்கும் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த கடிதத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீதும் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.500 கோடி திரட்டுமாறு கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக ஆம் ஆத்மிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர், தன்னை 'குண்டர்' என்று கூறிய கெஜ்ரிவாலை 'மகா குண்டர்' என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகரின் இந்த கடிதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியுள்ளார்.

    டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட்டின் பண்ணை வீட்டில் வைத்து சுகேஷ் சந்திரசேகரை கெஜ்ரிவால் சந்தித்தது உண்மையா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மந்திரி சத்யேந்தர் ஜெயினை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

    ஆம் ஆத்மிக்கு பணம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என கூறியுள்ள டெல்லி பா.ஜனதா தலைவர் அதேஷ் குப்தா, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. "குஜராத் மற்றும் டெல்லி உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயம் காரணமாக பா.ஜனதா ஒரு குண்டரை ஆம் ஆத்மிக்கு எதிராக ஒப்பந்தம் செய்துள்ளது" என டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

    • இந்த குற்றச்சாட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.
    • சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உள்பட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தற்போது ஆம் ஆத்மி கட்சி மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி திகார் சிறையில் தான் இருந்தபோது தனது சொகுசு வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தியதாக டெல்லி கவர்னர் வினய்குமார் சக்சேனாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடியும், சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ரூ.12.5 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    மேலும் தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ஆம் ஆத்மி கட்சி தன்னிடம் ரூ.500 கோடி கேட்டதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மந்திரிகள் சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் "இந்த குற்றச்சாட்டுகள் கற்பனையானவை, குஜராத் தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜனதா நடத்தும் வேலை இது' என கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தனது வக்கீல் மூலம் மீண்டும் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    அதில், 'சிறையில்தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று டெல்லி கவர்னரை வலியுறுத்தியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

    சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது. சுகேஷ் கூறியபடி சி.பி.ஐ. விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமாறு டெல்லி கவர்னரை பா.ஜனதா வலியுறுத்த உள்ளது. இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க இருப்பதாக டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

    • குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    • இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் வெளியானது.

    புதுடெல்லி :

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது சமீபத்திய கடிதத்தில், டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது உண்மை இல்லை என்றால், தனது முந்தைய புகாரை வாபஸ் பெறுமாறு சிறை நிர்வாகம் ஏன் என்னை வற்புறுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அவர் நேற்று வெளியிட்ட மற்றொரு கடிதத்தில், ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானால் என்னை தூக்கிலிடுங்கள். அதேநேரம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் நேற்று வெளியானது. அதில், 'நான் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் புறக்கணித்தேன். ஆனால் உங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் சிறை நிர்வாகம், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகியோரது அச்சுறுத்தல்கள் என்னை திருப்பிவிட்டிருக்கின்றன' என்று சுரேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    தனது முந்தைய புகாரில் உண்மை இல்லை என்றால், சிறை நிர்வாகம் தன்னை ஏன் வற்புறுத்துகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • சுகேஷ் சந்திரசேகர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
    • காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் முதல் கோரிக்கையை வைத்துள்ளார்.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்த நிலையில் இந்த புகார் குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    அந்த வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் அதற்கான முதல் கோரிக்கையை வைத்துள்ளார். ஒரு முதல்-மந்திரிக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கியதை ஒருவர் தெளிவாக ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறை என்று கூறியுள்ள அவர், எனவே அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    • சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள்.
    • சிறையில் என்னை உடல்ரீதியாக தாக்கினார்கள்.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கு, தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் சுகேஷ் சந்திரசேகர். இவரும், இவருடைய மனைவி லீனா பவுலோசும் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ரூ.500 கோடி தருமாறு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கேட்டதாகவும், தனக்கு மாநிலங்களவை பதவி வழங்க ரூ.50 கோடி அவர் பெற்றதாகவும், சிறையில் தனது பாதுகாப்பு மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடி, சிறைத்துறை டி.ஜி.பி. ரூ.12.5 கோடி பெற்றதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பண பரிமாற்ற விவகாரங்கள் டெல்லி போக்குவரத்துத்துறை மந்திரி கைலாஷ் கெலாட் வீட்டில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவாலும், அமைச்சர்களும் மறுத்தனர். தேர்தலுக்காக பா.ஜனதா நடத்தும் வேலை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், தான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை இல்லையெனில் தன்னை தூக்கிலிடலாம், மாறாக உண்மை என்றால் கெஜ்ரிவால் என்ன செய்வார்? என்றும் சுகேஷ் சந்திரசேகர் சவாலாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையே, தனது குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவும் கவர்னரை வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் அவர் தன் வக்கீல் அசோக் கே.சிங் மூலம் கவர்னருக்கு மேலும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக மிக முக்கியமான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். இதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் எனக்கும், என் மனைவிக்கும் தீங்கு விளைய நேரிடும். இதற்கிடையே எனக்கு சமரச தூது வருகிறது. சமரசம் ஆகாவிட்டால் சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள். 2 நாட்களுக்கு முன்புகூட சிறையில் என்னை உடல்ரீதியாக தாக்கினார்கள். எனவே, நீதியின் நலனுக்காக இதில் விசாரணை முடியும்வரை என்னையும், என் மனைவியையும் டெல்லிக்கு வெளியே உத்தரபிரதேசம், அரியானா அல்லது உத்தரகாண்டில் உள்ள சிறைக்கு மாற்றுங்கள். நாங்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறோம்" என்று கெஞ்சலாக சுகேஷ் சந்திரசேகர் கேட்டுள்ளார்.

    இந்த தகவல்களை அவருடைய வக்கீல் நேற்று தெரிவித்துள்ளார்.

    • சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்து இருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்ற குற்றாச்சாட்டு எழுந்திருந்தது.
    • ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் நேற்று மீண்டும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

    இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்தது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

     

    ஜாக்குலின் 

    ஜாக்குலின் 

    சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்து இருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் விளக்கம் அளித்து வந்தார். மோசடி வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீனும் பெற்றார். அந்த ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.


     


    நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் 

    நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் 

    இந்த நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் நேற்று மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    • டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து வெளியே வந்த அவரிடம், ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சுகேஷ், ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி ரூபாய் வழங்கியதாக மீண்டும் கூறினார்.

    ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழு சுகேஷின் வாக்குமூலத்தை எடுத்து, தீவிரமான இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக் வலியுறுத்தினார். எனவே இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அமைத்த குழுவிடம் சுகேஷ் அளித்த வாக்குமூலத்தில், சிறையில் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெறுவதற்காகவும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் எனக்கு இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளார்.
    • எனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வந்தன.

    புதுடெல்லி :

    டெல்லி திகார் சிறையில் இருந்தவாறே, ரூ.200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவரோடு ஏற்கனவே நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர் பேசப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய நடிகைகள் உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் சமீபத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.

    அதைப்போல நடிகை சாகத் கன்னாவும் ஆஜராகி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சுகேஷ் சந்திரசேகருடனான சந்திப்பு குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. நடிகை கூறிய தகவல்கள் வருமாறு:-

    கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் டெல்லியில் உள்ள ஒரு பள்ளி விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. அங்கு செல்ல நான் மும்பை விமான நிலையம் வந்தேன். அப்போது ஏஞ்சல் என்கிற பெண் எனக்கு அறிமுகம் ஆனார். இவர்தான் சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர் பிங்கி இரானி என்பது எனக்கு பின்னர்தான் தெரியும். அவரும் என்னோடு டெல்லி வருவதாக கூறினார்.

    நாங்கள் டெல்லியில் இறங்கியதும் காரில் பள்ளிக்கு புறப்பட்டோம். ஆனால் வழியில் மற்றொரு காரில் ஏஞ்சல் என்னை ஏற்றினார். அந்த கார் திகார் சிறைக்கு சென்றது. நான் இது தவறான வழி என கூறினேன். அதற்கு ஏஞ்சல், இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் எனக்கூறி சுகேசின் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

    அந்த அறையில் விலைஉயர்ந்த ஆடம்பர பொருட்கள் இருந்தன. அங்கிருந்த நபர் (சுகேஷ்) தன்னை சேகர் ரெட்டி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் விலைஉயர்ந்த வாசனைத்திரவியம் அடித்து இருந்தார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும், டி.வி. சேனல் வைத்திருப்பதாகவும் கூறினார். தேர்தலின்போது மின்னணு எந்திரத்தை சேதப்படுத்திய வழக்கில் சிறையில் இருப்பதாகவும், பெரிய புள்ளி என்பதால் ராஜமரியாதை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

    நான் நடித்த டி.வி. சீரியல்களை விரும்பி பார்த்ததாகவும், என்னை மிகவும் பிடித்துப்போனதாகவும் கூறினார். பின்னர் திடீரென என் முழங்காலில் மண்டியிட்டு என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். நான் எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதை சொன்னேன். அதற்கு அவர், "உன் கணவன் சரியானவன் அல்ல, நான் உன் குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறேன்" என்றார். உடனே நான் சத்தம் போட்டு அலறினேன். ஆனாலும் சிறை என்பதால் எனக்கு பயமாக இருந்தது. எப்படியாவது அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். பின்னர் எப்படியோ ஏஞ்சல் என்னை வெளியே அழைத்து வந்துவிட்டார்.

    பிறகு என்னிடம் அவள் ரூ.2 லட்சம் பணம் அன்பளிப்பாக தந்தாள். அவளுடைய கைக்கடிகாரத்தையும் கழற்றித் தந்தாள். நான் மும்பைக்கு சென்றபிறகு எனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. திகார் சிறைக்காட்சிகள் தங்களிடம் வீடியோவாக இருப்பதாகவும், அதை வெளியிட்டு விடுவதாகவும் கூறி ரூ.3 லட்சம் பணத்தை என்னிடம் பறித்து விட்டனர்.

    சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் எனக்கு இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளார். என் குழந்தைகளை அக்கறையாக விசாரித்து, எனக்கு ஏதாவது தேவையா? என்றும் கேட்டுள்ளார். இந்த சம்பவங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் ரூ.200 கோடி மோசடி பற்றிய செய்திகள் வந்தன. அதன்பிறகே சுகேஷ் யார்? ஏஞ்சல் யார்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன்.

    இவ்வாறு சாகத் கன்னா கூறியுள்ளார்.

    • அமலாக்கத்துறையால் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
    • சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மண்டோலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் அவர் சொகுசாக வாழ்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது அறையில் போலீசார் நடத்திய சோதனையில், பணம், ஆடம்பர ஆடை, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. சிறையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.

    • ஆம் ஆத்மி அரசு மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசினார்.
    • சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைதானவர் பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளார். இவர் முன்பு திகார் சிறையில் இருந்தார்.

    அப்போது அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். இதற்காக டெல்லி மந்திரிகளுக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இவருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே பின்னர் மோதல் போக்கு உருவானது. இதனால் ஆம் ஆத்மி அரசு மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசினார்.

    குறிப்பாக தென் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளர்ப்பதற்கு தன்னிடம் அந்த கட்சி நிர்வாகிகள் குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பணம் கேட்டதாகவும், தனக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக கூறி பணம் பெற்றதாகவும் கூறினார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கோரினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைக்கு புறம்பானவை என அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தலைவர்கள் மறுத்தனர்.

    இந்தநிலையில் டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இன்னும் விசாரணை போய்க்கொண்டு இருக்கிறது.

    இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது செய்தியாளர்கள் அவரிடம் மணிஷ் சிசோடியா கைது பற்றி கேட்டனர். அதற்கு சுகேஷ் சந்திரசேகர், "உண்மை வென்றது" என்று பதில் கூறினார். மேலும் அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால்தான். விரைவில் அவர் சிக்குவார்" என்றும் தெரிவித்தார்.

    • ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனது இதயம் வலிக்கிறது.
    • 400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற உதவி இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி :

    பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    கைதிகளுக்கு உதவும் விஷயத்தில் நீதித்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விசாரணைக் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ முயற்சி எடுக்கவில்லை. அன்பான உறவுகள் சிறையில் இருப்பதால் பல குடும்பங்களில் தற்கொலைகள் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே, உறவுகளிடம் இருந்து விலகி இருக்கும் கைதிகளுக்கு ஒரு மனிதனாக ரூ.5 கோடியே 11 லட்சம் நிதி வழங்க இருக்கிறேன்.

    இது முறையான வருவாய் மூலம் வந்த நிதியாகும். குற்றப்பின்னணியில் வந்தது அல்ல. அதற்கான ஆதாரங்களை காட்டுகிறேன். மார்ச் 25-ந் தேதி என்னுடைய பிறந்தநாள் என்பதால் எனது பிறந்தநாள் பரிசாக இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

    தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான பேருக்கு உணவளிக்கும் சாரதாம்மா தொண்டு நிறுவனம் மற்றும் சந்திரசேகர் புற்றுநோய் அறக்கட்டளை மூலம் பல நலத்திட்டங்களில் நானும், என் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளோம். ஏழை நோயாளிகளுக்கு மாதம்தோறும் இலவச ஹீமோதெரபியும் அளிக்கிறோம். ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனது இதயம் வலிக்கிறது. அவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் குடும்பங்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. எனவே நான் என்னால் இயன்ற இந்த குறைந்தபட்ச உதவியை செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிருந்து தற்போதுவரை அவர் 400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற உதவி இருப்பதாக கூறப்படுகிறது.

    ×