search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நச்சுக்கழிவு"

    • விராலிமலையில்பாசன குளத்தில் நச்சுக்கழிவு கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • நச்சுக்கழிவுகளால் இக்குளத்தில் உள்ள மீன், தவளை, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அம்மன் குளக்கரையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பட்டமரத்தான் கோவில். இக்குளக்கரையில் தான் புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    பாசனக்குளமான இந்த குளத்தில் தண்ணீரை தேக்கி வைத்தே விராலிமலை, கலிங்கிப்பட்டி, சின்னபழனிப்பட்டி, மாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு இக்குளமே முக்கிய வாழ்வாதாரமாகவும் திகழ்ந்து வருகிறது.

    மேலும் இந்த குளத்தை சுற்றி அருண் கார்டன், கிருஷ்ணா நகர், சண்முகா நகர், ரத்னா கோல்டன் சிட்டி, சீனிவாச நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கும் இக்குளமே முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்தநிலையில் விராலிமலை பகுதியில் இயங்கி வரும் ஒரு சில தொழிற் சாலைகளிலிருந்து உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக் கழிவுகள் மற்றும் எண்ணைக் கழிவுகள் அனைத்தும் இந்த குளத்தில் கொண்டுவந்து கொட்டப்பட்டு வருகிறது. அந்த கழிவுகள் நீரில் கலந்து மிகவும் கடுமையாக குளம் மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    இதனை கிராம சபை கூட்டம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் தற்போது மிகக்கடுமையாக நீர், நிலம், காற்று மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது.

    மேலும் நச்சுக்கழிவுகளால் இக்குளத்தில் உள்ள மீன், தவளை, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இந்த பாதிப்பின் தொடர்ச்சியால் இந்த குளம் மற்றும் இதனைச்சுற்றி உள்ள நிலங்களின் தன்மை மாறி புல், மரம், செடி கொடிகள் ஏதும் வளர தகுதியற்று மண்ணிற்கு மலட்டு தன்மை ஏற்படும் அபாய நிலை உருவாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×