search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரைசிங் உரிமையாளர்கள் சங்கம்"

    • தமிழக ஜவுளித்துறையினருக்கு இன்னும் திட்டங்கள் தேவை.
    • போட்டி நாடுகளை சமாளிக்கும் அளவுக்கு பலம் கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி திருப்பூர் வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருப்பூர் பின்னலாடைத்தொழில் மேம்படுவதற்கான கோரிக்கைகள் குறித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது- தற்போது தங்களின் சீரிய முயற்சியால், பின்னலாடை மற்றும் ஜவுளி வர்த்தகம் வளர்வதற்கான பல சாதக சூழ்நிலைகள் உருவாகிவருகின்றன. இந்த நிலையில் தமிழக ஜவுளித்துறையினருக்கு இன்னும் சற்று தேவையான திட்டங்களை அறிவித்தால், போட்டி நாடுகளை சமாளிக்கும் அளவுக்கு பலம் கிடைக்கும். சர்வதேச அளவில் ஏற்றுமதியை உயர்த்த முடியும். எங்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:

    ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம் சீராக வளர்ச்சி பெற வேண்டுமானால், பருத்தி, பஞ்சு விலை நிலையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு சார்பில் தனிக்கமிட்டி உருவாக்கப்பட்டு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் அத்தியாவசியப்பட்டியலில் பஞ்சு நூல் பொருட்களை சேர்த்து, உள்நாட்டு தேவைக்குப்போக மீதமுள்ள பஞ்சு நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வலியுறுத்த வேண்டும்.

    நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, தமிழகத்தில் அதிகளவில் பருத்தியை விளைவிக்க அனைத்துவிதங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடாக பஞ்சுநூலை பதுக்கிவைத்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கள்ளச்சந்தையில் லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் மற்றும் சமூகவிரோதிகள்மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நூல்விலை உயர்வு, பஞ்சு பற்றாக்குறையால் கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகத்தில் பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மானிய விலையில் எரிவாயு (பைப்லைன் கேஸ்) திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால், தொழில் மற்றும் உற்பத்திக்கூடங்களின் செலவினங்கள் குறையும். விலையை குறைத்து சர்வதேச போட்டியாளர்களுடன் திறந்தவெளிச்சந்தையில் நமது சரக்குகளை எளிதில் விற்பனை செய்ய முடியும். மாவட்ட தொழில் மையத்தின், மானிய எந்திரத்தொழில் கடன்களை பெறும் வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.

    மின்சார கட்டணத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கும் மானியம் மற்றும் சலுகை விலை வழங்கப்பட வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்த தனி அதிகாரி மூலம் கண்காணிப்புத்துறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதனால் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து தமிழக ஜவுளித்தொழில் துறையினருக்கு பலம் சேர்க்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் சர்வதேச அளவில் தமிழக தொழில் துறையினர் மேலும் பல சாதனைகளை புரிவார்கள் என்பதில் சந்தேகமில்லை.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.  

    ×