search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணைவேந்தர்கள் மாநாடு"

    • ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன.
    • அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

    மாநாட்டில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 48 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரும்பாலான துணை வேந்தர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன. மேலும் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமி யங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.


    இன்றைய முதல் நாள் மாநாட்டில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வைத்திய சுப்பிரமணியம் எழுதிய நிறுவன மேம்பாட்டு திட்டம்- பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவு எதிர்காலம் குறித்து விளக்கப்பட்டது.

    மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினர். யு.ஜி.சி. சி.ஐ.எஸ்.ஆர். தேர்வுகளில் தகுதி பெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்றுமுன்தினம் மாலை ஊட்டிக்கு வந்தார். வருகிற 30-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். மாநாடு நிறைவுக்கு பின் 29-ந் தேதி கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சி முனையை பார்வையிடுகிறார். பின்னர் 30-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    • பட்டம் வாங்கும் இளைஞர்களை அல்ல, எவரோடும் போட்டியிடும் தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டுக் கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது.
    • மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும் அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது.

    தமிழகத்தில் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்-பதிவாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் தலைமை செயலாளர் இறையன்பு தொடக்க உரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பேசினார்கள். பல்கலைக்கழக துணைவேந்தர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அனைவருக்கும் கல்வி, அவர்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிடக் கொள்கை. உயர்கல்வியால், ஒருவருக்குச் சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கிறது. வேலை கிடைக்கிறது. வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. சமூக வாழ்வில் புகழ் கிடைக்கிறது.

    இவை அனைத்துக்கும் உயர்கல்வியே அடிப்படையாக அமைகிறது. அதனால் தான், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக அதிகமான உயர்கல்வி நிறுவனங்கள், அறிவியல் கல்லூரிகளாக, பொறியியல் கல்லூரிகளாக, மருத்துவக் கல்லூரிகளாக, சிறந்த கட்டமைப்பு வசதியுடன், தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதில் எல்லோரும் பெருமைப்படுகிறோம்.

    வெறும் வேலைவாய்ப்பு மட்டும் தருவதை, உயர்கல்வியின் நோக்கமாக நான் கருதுவதில்லை. அந்த எண்ணங்களை உங்களிடம் பரிமாறிக் கொள்வதற்காகத்தான் இந்த கருத்தரங்கம் அமைந்திருக்கிறது.

    நாம் எப்போதும் உயர்ந்து நிற்கிறோம். இதுபோதாது, இன்னும் உயர்ந்தாக வேண்டும்.

    * தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்ற பலர் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து நல்ல முறையில் உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.

    * உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 தான். ஆனால் தமிழ்நாடு, 51.4 விழுக்காடு மாணாக்கர்கள் சேர்க்கை விகிதத்துடன் உயர்ந்து நிற்கிறது.

    * ஒரு முழுமையான மனிதனை, அனைத்துப் பண்புகளிலும் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை உயர்கல்வி உருவாக்க வேண்டும் என்பதுதான் என் கனவு.

    இந்த கனவை, தமிழ்நாட்டில் இயங்கும் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    * அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின்படி, தமிழக பல்கலைக்கழகங்கள், சேர்க்கை வீதம், இடஒதுக்கீடு மற்றும் பேராசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்குகிறது.

    * கட்டமைப்பு, ஆசிரியர் தரம் மற்றும் நியமனம், கற்பித்தல் மற்றும் கற்றல், ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழக பல்கலைக்கழகங்கள் சிறப்பாக உள்ளன.

    * இதன் வெளிப்பாடு தேசிய தர நிர்ணயக் குழுவின் மதிப்பீட்டில் தமிழகப் பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ள A++, A, B+ ஆகிய மூன்று தரச்சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    * அகில இந்திய அளவில் தேசியத் தர வரிசைகட்டமைப்பில் முதல் ஆயிரம் இடங்களில் 164 இடங்களை அதாவது சுமார் 16 விழுக்காடு இடங்களை தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அடைந்து சாதனை படைத்துள்ளன.

    * எண்ணிக்கை, தரம் என்ற இரண்டிலும், தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் உயர்ந்த இடத்தில் இருப்ப தைத் தேசிய தர வரிசை பட்டியல் காட்டுகிறது.

    * தேசிய தர வரிசையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் வரிசையில், 6 பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகங்கள் வரிசையில், 8 பல்கலைக்கழகங்களும் இடம்பெற்று, நம் மாநிலத்தை உயர்கல்வியில் முதல் மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளன.

    * வரும் ஆண்டுகளில் இந்நிலை மேலும் சிறப்பாக உயரும். மாணவர்களின் எண்ணிக்கைக் கூடும்போது, உயர்கல்வியின் தரம் குறைந்துவிடுகிறது என்ற வாதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நமக்குக் கல்வித் தரமும் வேண்டும்; மாணவர்களின் எண்ணிக்கையும் குறையக்கூடாது! இதில் நமது அரசு உறுதியாக இருக்கிறது.

    எடுத்துக்காட்டாக, சென்னை மாநிலக் கல்லூரியில் சுமார் 5000 மாணவர்கள் பயில்கின்றனர். அதேநேரத்தில் தேசியத் தர வரிசையிலும், மூன்றாம் இடத்தை மாநிலக் கல்லூரி பெற்றுள்ளது என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பாடத்திட்ட மறுசீரமைப்பில், நமது அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

    வளர்ந்துவரும் தொழில்கள் மற்றும் அதற்குத் தேவையான திறன்களை வளர்க்கும் பொருட்டு, தொழில் நிறுவனங்களின் முழுபங்கேற்புடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பட்டப்படிப்புகளை, உலகத்தரத்திற்கு இணையாகச் சீரமைத்து, மேம்படுத்தி பாடத்திட்டம், ஆராய்ச்சி மற்றும் புதுமையாக்கலில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்பதை இலக்காக வைத்துள்ளோம். உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை நமது மாநிலத்தில் செயல்படுத்தவும், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணாக்கர்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை மாணாக்கர்களையும் ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்தவும், ஆண்டுதோறும் ரூ.50 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இதற்கான திட்ட அறிக்கைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு நிபுணர் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அவர்களின் பரிந்துரையின்படி நிதி வழங்கப்படும்.

    நம்முடைய மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் "முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை" திட்டம் தொடங்கப்படும். இதற்கான மாநில அளவில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தொழில்துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய திறன் சார்ந்த பயிற்சி வழங்க ஏதுவாக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து "ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி" வழங்கப்படும்.

    பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இது எங்களது முழுப் பொறுப்பு.

    அதேநேரத்தில், மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.

    பல்கலைக்கழகங்களின் உண்மையான நோக்கம் என்பது அனைவருக்குமான அறிவுத்தளத்தை செம்மைப்படுத்துவது!

    சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தில், பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துவதாக, நம்முடைய கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும்.

    அறிவியல் சிந்தனை கொண்ட சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், உருவாக்கக்கூடிய கடமையைத்தான் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும்.

    நாட்டின் மற்ற மாநிலங்களைவிட நாம் முன்னேற்றம் அடைந்ததற்கும், தனித்துத் தெரிவதற்கும் இத்தகைய கொள்கை விழுமியங்கள்தான் காரணம்.

    "ஒன்றிய-மாநில அரசு உறவுகள்" குறித்து ஆராய 2007-ல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி அவர்கள் தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு "துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்" மசோதைவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம்.

    ஏனென்றால், இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்சினை மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை.

    ஆகவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணைவேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

    பட்டம் வாங்கும் இளைஞர்களை அல்ல, எவரோடும் போட்டியிடும் தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டுக் கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது. 'நீட்' தேர்வுக்கு எதிராக நாம் இருக்கிறோம். அந்தத் தேர்வுக்குப் பயந்து அதனை நாம் எதிர்க்கவில்லை.

    அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது,

    இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி. இதனால் தான் எதிர்க்கிறோம். கல்வி உரிமையைப் போராடிப் பெற்ற சமூகம் நாம் என்கிற காரணத்தால் எதிர்க்கிறோம்.

    போராடி சுயமரியாதையை நிலைநிறுத்திய சமூகம், இந்தத் தமிழ்ச்சமூகம் என்பதால் எதிர்க்கிறோம்.

    கல்வியால் முன்னேறுகின்ற சமூகம் நாம் என்பதால் எதிர்க்கிறோம். பின்னால் வரக்கூடிய தீமைகளை கடந்தகால வரலாறுகளின் அடிப்படையில் எடை போட்டு எதிர்க்கிறோம்.

    எந்தப் படிப்பாக இருந்தாலும், அதனை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும் திட்டமிடுதலும் இருக்க வேண்டும். மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும் அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும்.

    அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய தேசியக் கல்விக் கொள்கையையும் நாம் எதிர்க்கிறோம். மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதே, அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ் சமூகத்தைக் கட்டமைக்க அதற்காகத்தான் அமைத்திருக்கிறோம்.

    ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படைக் கடமை. அந்தக் கடமை எனக்கும் உண்டு. பல்கலைக்கழக துணைவேந்தர்களான உங்களுக்கும் உண்டு. கல்வியாளர்களான உங்களுக்கும் உண்டு. புதிய புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள். புதிய புதிய பட்டப்படிப்புகளைக் கொண்டு வாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×