என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய விளையாட்டுப் போட்டி"

    • தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    37-வது தேசிய விளையாட்டுப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார். மொத்தம் 49 விளையாட்டுகள் நடைபெறும் இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். 116 அதிகாரிகளுடன் இந்த குழு பங்கேற்கிறது.

    அதிகபட்சமாக தடகளத்தில் இருந்து 80 பேரும், கால்பந்து, கூடைபந்து போட்டியில் தலா 40 பேரும் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பினர்.

    • தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்டின் டேராடூனில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
    • பேட்மிண்டன், ஹாக்கி, டென்னிஸ், கபடி, உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.

    டேராடூன்:

    38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை நடக்கிறது.

    டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூதெக்ரி ஆகிய 7 நகரங்களில் 18 நாட்கள் அரங்கேறும் இந்தப் போட்டியில் 38 அணிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இதில் தடகளம், நீச்சல், துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, கோ-கோ உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.

    இந்நிலையில், டேராடூனில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற்ற கோலாகல தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அது இந்திய விளையாட்டுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல. ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடந்தாலும் எல்லாத் துறைகளும் ஆதாயம் அடைகின்றன. இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை உருவாக்குகிறது. இது கட்டுமானத்தை ஊக்குவிக்கிறது, புதிய இணைப்பு, போக்குவரத்து வசதிகளை உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுலாவை மேம்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் உள்பட உலகெங்கிலும் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வருவார்கள்.

    21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என உலகம் இன்று சொல்லிக்கொண்டிருக்கிறது. பாபா கேதாரை வணங்கிவிட்டு, இது உத்தரகாண்டின் தசாப்தம் என்று என் வாயிலிருந்து வந்தது.

    உத்தரகாண்ட் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நேற்று உத்தரகாண்ட் மாநிலம் சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்காக உத்தரகாண்ட் அரசை நான் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

    கடந்த தேசிய விளையாட்டு போட்டி 2023-ம் ஆண்டு கோவாவில் 5 நகரங்களில் நடந்தது. இதில் மகாராஷ்டிரா 82 தங்கம் உள்பட 230 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தாலே நோய்களிலிருந்து விடுபடலாம்.
    • தினமும் உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்த வேண்டும்

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் குழுமியிருந்த அக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மாறிவரும் வாழ்க்கை சூழல், உடற்பயிற்சி இன்மை, துரித உணவு பழக்கங்களால் நம் நாட்டில் உடன் பருமன் உள்ள நபர்கள் அதிகரித்து வருகின்றனர். சமையல் எண்ணெயை அதிகமாக உட்கொள்வது, உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது. முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் கூட இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அன்றாட உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொண்டாலே உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.

    ரேஷனில் கிடைக்கும் 2 லிட்டர் எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தாலே போதும் நாம் பலவிதமான நோய்களிலிருந்து விடுபடலாம்.

    தினமும் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் சமச்சீரான மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    கடுகு எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளது.

    கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் என்று ஒவ்வொரு முறையும் சுழற்சி முறையில் சமையலில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் எனவும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவுறுத்தி உள்ளன.

    • ஆண்கள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
    • தியா ரமேஷ், லட்சுமி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

    டேராடூன்:

    38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அபினவ் சஞ் சீவ், மனீஷ் சுரேஷ் குமாா், நிக்கி பூனச்சா உள்ளிட்டோா் அடங்கிய அணி 2-0 என்ற கணக்கில் கா்நாடகத்தை வீழ்த்தியது. தியா ரமேஷ், லட்சுமி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.


    நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 13 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 49 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் 39 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    கா்நாடகம் 30 தங்கம், 12 வெள்ளி, 16 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், மராட்டியம் 23 தங்கம், 39 வெள்ளி, 45 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

    • ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
    • தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

    புதுடெல்லி:

    குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள இகேஏ அரீனா டிரான்ஸ் ஸ்டேடியாவில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு ஞாயிறு மாலை நடைபெற உள்ளது. விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம் என்ற மையப்பொருளில், ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை, 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

    இந்த முன்னோட்ட நிகழ்வில், விளையாட்டுக்கள் கீதம் மற்றும் சின்னம் வெளியிடுதல், இணையதளம் மற்றும் செல்பேசி செயலி வெளியிடுதல் ஆகியவையும் இருக்கும். 9,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் இந்த வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    "தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், இதை எப்போதும் இல்லாத வகையில் சிறந்த விளையாட்டுகளாக மாற்ற எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை" என்று பூபேந்திர படேல் கூறினார்.

    பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உட்பட 36 போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 7,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்லகம்பம், யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டுகளும் முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும்.

    ×