search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைரஸ் மிஸ்த்ரி"

    • டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

    மும்பை :

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு தொழில் அதிபர் ஜகாங்கிர் பண்டோலேவும் பலியானார். ஜகாங்கிர் பண்டோலேவின் சகோதரர் டாரியஸ் பண்டோலே (60), இவரது மனைவியான டாக்டர் அனகிதா (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டாக்டர் அனகிதாதான் விபத்துக்குள்ளான காரை ஓட்டினார்.

    பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் குஜராத் மாநிலம் வாபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் நேற்று மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

    கார் விபத்தில் பலியான சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். ரத்தன் டாடா பதவி விலகியதை அடுத்து 2012-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பதவி ஏற்று, அந்த பொறுப்பில் 2016-ம் ஆண்டு வரை நீடித்தார்.

    பிரபல தொழில் அதிபரான அவர் கார் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சைரஸ் மிஸ்திரியுடன் காரில் உடன் பயணம் செய்தவர்கள் அவரது நண்பர்கள். இவர்கள் அனைவரும் பிரபல தொழில் அதிபர்கள். மேலும் அனகிதா மும்பையில் பிரபல மகப்பறு மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர்கள் குஜராத் மாநிலம் உடவா பகுதியில் உள்ள ஒரு பார்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மும்பை திரும்பி உள்ளனர். காரை பெண் டாக்டரான அனகிதா ஓட்டி உள்ளார். அவரது கணவர் டாரியஸ் முன் இருக்கையில் இருந்துள்ளார். சைரஸ் மிஸ்திரியும், ஜகாங்கிரும் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளனர்.

    கார் மும்பையை நெருங்கி கொண்டு இருந்தபோது பால்கர் அருகே ஆற்றுப்பால தடுப்புச்சுவரில் மோதியபோதுதான் இந்த துயர சம்பவம் நேர்ந்தது.

    இதற்கிடையே காரின் அதிவேகம், சீட் பெல்ட் அணியாதது, காரை ஓட்டிய பெண் டாக்டரின் தவறான கணிப்பு போன்ற காரணங்கள் சைரஸ் மிஸ்திரியின் உயிரை பறித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கார் அதிவேகமாக சென்று உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, கார் சரோட்டி சுங்கச்சாவடியில் இருந்து, விபத்து நடந்த பகுதிக்கு 20 கி.மீ. தூரத்தை 9 நிமிடங்களில் கடந்து உள்ளது. முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கர வேகத்தில் மோதி விட்டது.

    மோதிய வேகத்தில், பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜகாங்கிர் ஆகிய 2 பேரின் தலையும் முன் இருக்கையில் மோதி உள்ளது. இவர்கள் 2 பேரும் சீட் பெல்ட் அணியவில்லை. மேலும் உடனடியாக ஏர் பலூனும் விரியவில்லை. இதனால் முன் இருக்கையில் தலை மோதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.

    காரை ஓட்டிய பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் சீட் பெல்ட் அணிந்து உள்ளனர். மேலும் முன் இருக்கையில் ஏர் பலூன் விரிந்ததால் அவர்கள் உயிர் தப்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி பற்றி மராட்டிய முன்னாள் துணை கலெக்டரும், தொழில் அதிபருமான கணேஷ் ஜக்தாப் கூறியதாவது:-

    சைரஸ் மிஸ்திரி எனக்கு மிகவும் நெருக்கமானவர். விமான பயண வசதிகள் இருந்தாலும் அவர் சாலை பயணத்தையே அதிகம் விரும்புவார். அவர் விரும்பிய சாலை பயணமே அவரது உயிரை பறித்துள்ளது.

    பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் சாலையோர உணவு கடைகளில் விற்கப்படும் வடபாவ், பாவ் பாஜி ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவார். சாலையோர டீக்கடைகளில் டீ குடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×