என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை போலீஸ்"
- சென்னை மாநகர காவல் துறையில் முதியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கடந்த ஜனவரி மாதம் பந்தம் என்கிற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
- பந்தம் திட்டத்தின் மூலமாக முதியவர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் அதற்காக தனித்தனி காவலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள்.
வயசான காலத்துல என்னால வெளியில போய் காய்கறி வாங்க முடியல. எனக்கு தினமும் இரண்டு கீரை கட்டு வேணும். உங்களால வாங்கித் தர முடியுமா? என்று கேட்டதும் ஓடோடி சென்று உதவி செய்திருக்கிறார்கள் சென்னை போலீசார்.
என்னது... சென்னை போலீஸ் கீரை வாங்குவதற்கெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்களா? என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இதனை நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும். சென்னை போலீசார் முதியோர்களுக்காக அவர்களைத் தேடித் தேடி உதவி செய்து வருகிறார்கள். கரடு முரடான காக்கி சட்டைக்குள் இத்தனை கருணை உள்ளமா? என்று கண்களை ஆச்சரியத்துடன் விரிய வைக்கிறது சென்னை போலீசாருக்கும் முதியோர்களுக்கும் இடையேயான இந்த பந்த பாசப் பிணைப்பு.
கீரைக்கட்டு மட்டுமின்றி மருந்து மாத்திரைகளையும் கூட முதியவர்களுக்காக வாங்கி கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகர போலீசார். இப்படி முதியவர்களுக்காக அவர்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை தேடி தேடி கண்டறிந்து தனியாக இருக்கும் முதியவர்களின் குடும்பத்தில் ஒருவர் போல தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகர காவல் துறையினர்.
சென்னை மாநகர காவல் துறையில் முதியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கடந்த ஜனவரி மாதம் பந்தம் என்கிற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. பரபரப்பான சென்னை மாநகரில் சென்னை வாசிகள் பலர் பெற்றோர்களை தனியாகவே தவிக்க விட்டு இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆசை ஆசையாய் வளர்த்து அவர்களை பார்த்து பார்த்து கவனித்த தாய் தந்தையர் பலரை பிள்ளைகள் தவிக்க விட்டு விட்டு தனியாகவே பிரிந்து வாழ்வதை பார்க்க முடிகிறது.
இது போன்ற நேரங்களில் முதியோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு யாரும் இருப்பதில்லை. இதனால் பல்வேறு சிரமங்களை வயதானவர்கள் சந்தித்து வருகிறார்கள். தங்களுக்கு தேவையானதை யாராவது தினமும் வாங்கிக் கொடுக்கமாட்டார்களா? என்கிற ஏக்கம் தனியாக வசிக்கும் ஒவ்வொரு முதியவர்களின் மனதிலுமே மேலோங்கி காணப்படுகிறது. பெற்ற பிள்ளைகளே தவிக்க விட்டு விட்டு சென்று விடும் நிலையில் பக்கத்தில் இருப்பவர்களா ஓடோடி சென்று உதவி செய்துவிடப் போகிறார்கள்?
இப்படிப்பட்ட சூழலில் தான் முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பந்தம் என்கிற பெயரில் சென்னையில் வசிக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்காக புதிய திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும் கலந்து கொண்டார்.
இந்த பந்தம் திட்டத்தின் மூலமாக முதியவர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் அதற்காக தனித்தனி காவலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள். கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் இணை கமிஷனர் கயல்விழி தலைமையில் பெண் போலீஸ் படையினர் 24 மணி நேரமும் 75 வயதை தாண்டிய முதியவர்களுக்கு உதவுவதற்காக தயாராக இருக்கிறார்கள். தங்களது தேவைகளுக்காக முதியவர்கள் 9499957575 என்ற கட்டணமில்லா இலவச செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொலைபேசி எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு முதியவர்கள் எந்த நேரமும் அழைக்கலாம் என்று போலீசார் அறிவித்திருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே இந்த தொலைபேசி எண் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சென்னை மாநகரிலுள்ள வயதான தாத்தா பாட்டிகளில் தனியாக வசிப்பவர்கள் தினமும் சென்னை போலீசை அழைத்து உதவி கேட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 28 பேர் தொடர்பு கொண்டு பேசி உள்ள நிலையில் இதுவரை
150-க்கும் மேற்பட்டோர் உதவி கேட்டு நாடி இருக்கிறார்கள். இப்படி உதவி கேட்டு பேசும் முதியவர்களில் பலர் தங்களது உணவு தேவைகளை பூர்த்தி செய்யவும் மருந்து மாத்திரைகள் வாங்கி தரவும் போலீசாரின் உதவியை நாடி உள்ளனர்.
வயதான மூதாட்டி ஒருவர் எனக்கு தினமும் கீரை வேண்டும். வெளியில் சென்று என்னால் வாங்க முடிவதில்லை அது கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? என்று குழந்தைகள் தின்பண்டங்களை கேட்பது போல கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பந்தம் பிரிவு போலீசார் அதற்கென்னம்மா... ஏற்பாடு செய்து விட்டால் போச்சு எனக் கூறி தினமும் கீரை கட்டு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கீரை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவரிடம் சொல்லி மூதாட்டியின் வீட்டுக்கு தினமும் இரண்டு கட்டு கீரையை கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதேபோன்று மேலும் சிலர் தங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் ஆனால் அதற்கான மருந்து மாத்திரைகளை வெளியில் சென்று வாங்குவதற்கு சிரமமாக உள்ளது என்றும் அதனை யாராவது வீடு தேடி வந்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதற்கும் போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.
அதே நேரத்தில் இட பிரச்சினை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு உதவி செய்ய முடியுமா? என்றும் முதியவர்கள் பலர் உதவி கேட்டுள்ளனர். இது போன்ற பிரச்சினைகளுக்கும் போலீ சார் சட்ட ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இதுபோன்று தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ள சென்னை மாநகர காவல் துறையினர் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பந்தம் திட்டம் காவல்துறைக்கும் மூத்த குடிமக்களுக்கும் இடையேயான பாச பந்தம் என்று கூறி பெருமிதப்பட்டார் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர். ஆனால் சென்னை மாநகர காவல் துறையினர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதியவர்களை பாதுகாக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கியுள்ள இந்த பந்தம் சிறப்பு திட்டம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியதாகவே மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. முதியோருக்கும் போலீசுக்கும் இடையேயான இந்த பாச பந்தம் காவலர்களை உணர்வுப் பூர்வமான மகன்களாக... மகள்களாகவும் மாற்றி இருக்கிறது என்றே கூறலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அது 100 சதவீதம் உண்மைதான் என்பதையும் சென்னை போலீசாரின் செயல்பாடுகள் உணர்த்தியுள்ளன.
- பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்பு.
- வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசியபோது போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கார்த்திக், செல்வம் என்ற இருவரை எண்ணூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
- டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர்.
சென்னை:
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.
மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னம் அருகே டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கடற்கரை முழுவதும் சோதனை நடத்தினர். மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது.
மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எலியட்ஸ் கடற்கரை தவிர மற்ற 29 இடங்களில் உள்ள வெடிகுண்டுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 2500 பிட்காயின் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டும் எந்த வெடி பொருளும் சிக்காததால் காவல் துறையினர் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இருப்பினும் சென்னை போலீசாரை வெடிகுண்டு மிரட்டல் கலங்கடித்துவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் ஓட்டுனர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
- சிறப்பு சோதனையின் ஒரு பகுதியாக இன்று பகல் முழுவதும் ஒரு வழி பாதையில் செல்பவர்களை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மாநகர் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்ற பிறகு குற்ற செயல்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். அந்த வகையில் மாநகர் முழுவதும் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த அவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதன்படி இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் போலீஸ் சோதனை தீவிரமாக நடைபெற உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை முழுவதும் உள்ள 102 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற உள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி 306 இடங்களில் சோதனை நடைபெற உள்ளது. இந்த அதிரடி வேட்டையின் போது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எப்போதும் வார இறுதி நாட்களில் போலீசார் இரவு நேர சோதனைகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெற உள்ள சோதனையை எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். இதன்படி குடித்து விட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுமுறை நாட்களில் மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் ஓட்டுனர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இது போன்ற சிறு வயதுக்காரர்களால் அதிக அளவில் விபத்துகள் நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டிசென்று விபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதே நேரத்தில் வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் 3 பேராக பயணிப்பதும் சென்னையில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது போன்ற வாலிபர்கள் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சட்டம் -ஒழுங்கு போலீசாரும் சோதனையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் முழுவதும் ரவுடிகளை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது போலீசார் பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை வைத்துக் கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி சென்னை மாநகர் முழுவதும் போலீசார் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் சென்னையில் குற்ற செயல்கள் குறையும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு சோதனையின் ஒரு பகுதியாக இன்று பகல் முழுவதும் ஒரு வழி பாதையில் செல்பவர்களை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை போலீசாரின் இந்த நடவடிக்கையால் போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், சிறுவர்கள் அதிக அளவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- செந்தில் பாலாஜி உள்பட வழக்கில் தொடர்புடைய 120 பேருக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- வருகிற 6-ந்தேதி கமிஷனர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் உள்ளார்.
இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி உள்பட வழக்கில் தொடர்புடைய 120 பேருக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற 6-ந்தேதி கமிஷனர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பணம் கொடுத்து வேலையில் சேர்ந்த டிரைவர்-கண்டக்டர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் செந்தில் பாலாஜியை தவிர மற்றவர்கள் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- மதுப்பழக்கம் இல்லாதவரை குடிகாரனாக கருவி காட்டியது எப்படி? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
- 30 எம்.ஜி/100எம்.எல் என்ற அளவீடுக்கு குறைவாக காண்பிப்பவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படுவதில்லை.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு காரில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் 'பிரெத் அனலைசர்' கருவி மூலம் அவர் மது குடித்து உள்ளாரா? என்று சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாலிபர் 45 சதவீதம் மதுபோதையில் இருப்பதாக கருவி காட்டியது. இதனால் அபராதம் விதிப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தனக்கு மது குடிக்கும் பழக்கமே கிடையாது என்று போலீசாரிடம் கூறினார்.
மேலும் மீண்டும் பரிசோதிக்க ஆஸ்பத்திரிக்கு வருமாறு போலீசாரை அழைத்தார். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மேலும் மீண்டும் பரிசோதனை செய்ய முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.
இதனால் காரில் வந்த வாலிபருக்கும் போலீசாருக்கும் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுப்பழக்கம் இல்லாதவரை குடிகாரனாக கருவி காட்டியது எப்படி? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் போலீசார் சோதனையில் ஈடுபடும்போது போதையில் சிக்குபவர்கள் கேட்டுக்கொண்டால் 2-வது முறையாகவும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தினசரி வாகனத் தணிக்கை மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிரெத் அனலைசர் என்னும் சுவாசம் அறியும் கருவி மூலம் வாகன ஓட்டிகளிடம் சோதனைகள் மேற்கொண்டு, மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களை கண்டுபிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்தசோதனையின் போது இக்கருவியில் 30எம்.ஜி/100எம்.எல்-க்கு மேல் அளவீடு காண்பிக்கும் வாகன ஓட்டிகள் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து அவர்கள் ஓட்டி வந்த வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தாமாக விபத்து ஏற்படுத்திக் கொள்ளாமலும், மற்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திடாமலும், தடுக்கப்பட்டு மனித உயிர்களும் உடல் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
30 எம்.ஜி/100எம்.எல் என்ற அளவீடுக்கு குறைவாக காண்பிப்பவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படுவதில்லை.
எனவே போலீசாரின் சோதனையின்போது வாகன ஓட்டிகளுக்கு 30எம்.ஜி/100எம்.எல்-க்கு மேற்பட்ட அளவீடு காண்பித்தால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு முறை இக்கருவியின் மூலம் பரிசோதனை செய்ய கேட்டுக்கொண்டால் காவல் குழுவினர் அந்த வாகன ஓட்டியை மீண்டும் பிரெத் அனலைசர் கருவி மூலம் சோதனை மேற்கொள்ள போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் சந்தேகத்தின் பேரில் மீண்டும் சோதனை மேற்கோள்ள கேட்டுக்கொண்டால் மறுமுறையும் இக்கருவி மூலம் சோதனை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 185-வது பிரிவின் கீழ் வழக்கு போடப்படுகிறது.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் மோட்டார் வாகன சட்டம் 188-ன் கீழ் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் முறையை சென்னை மாநகர போலீசார் நள்ளிரவு முதல் அமல்படுத்தி உள்ளனர்.
மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 185-வது பிரிவின் கீழ் வழக்கு போடப்படுகிறது. அதே நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் மோட்டார் வாகன சட்டம் 188-ன் கீழ் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறும்போது, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை மேலும் கட்டுப்படுத்தும் எண்ணத்திலேயே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
சென்னை போலீசாரின் இந்த நடவடிக்கையால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மது குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுபோதையில் சுய நினைவின்றி நடனமாடிய 30 பெண்களையும் போலீசார் மீட்டனர்.
- போதையில் இருந்த 30 இளம்பெண்களின் முகவரி, செல்போன் எண்கள் ஆகியவற்றை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை எச்சரித்து ஆட்டோவில் போலீசார் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. மேலும் ஓட்டல்கள், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தடை உள்ளது.
ஆனால் சென்னையில் பல இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி நள்ளிரவு மது விருந்து மற்றும் அரைகுறை ஆடையுடன் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் நள்ளிரவில் மது விருந்துகளுடன் பெண்கள் ஆபாச நடனம் மற்றும் குத்தாட்டம் போடுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டு இருந்தனர். குடிபோதை தலைக்கேறி மதுமயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண்கள் அங்கு இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடி குத்தாட்டம் போட்டனர்.
இதைப்பார்த்த போலீசார் உடனடியாக அங்கு இசைக்கப்பட்ட ஆடியோவை நிறுத்தினார்கள். அங்கு மதுபோதையில் சுய நினைவின்றி நடனமாடிய 30 பெண்களையும் போலீசார் மீட்டனர்.
போதையில் இருந்த 30 இளம்பெண்களின் முகவரி, செல்போன் எண்கள் ஆகியவற்றை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை எச்சரித்து ஆட்டோவில் போலீசார் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கு போதையில் இருந்த வாலிபர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள். அதன் பிறகு தடை செய்யப்பட்ட நள்ளிரவு நடன மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த தனியார் விடுதி உரிமையாளர், மேலாளரை போலீஸ் நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு போலீசார் கூறிவிட்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட இரவு நடன விருந்து நடத்திய தனியார் விடுதி நிர்வாகம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ராங் ரூட்டில் வாகனம் ஓட்டுவதினால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவது தெரியவந்து உள்ளது.
- ராங் ரூட்டில் வாகனங்கள் செல்வதினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் போக்குவரத்து பிரிவுக்கு தெரியவந்துள்ளது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அண்மையில் கியூஆர் கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த முடியாமல் இருந்த காவல்துறை இப்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட 8 போக்குவரத்து விதிமுறைகளை மீறு பவர்கள் மீது அதிக அளவில் வழக்கு பதியப்படுகிறது.
இதன் அடுத்த கட்டமாக 'ராங் ரூட்டில் வாகனம் ஓட்டுவதினால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவது தெரியவந்து உள்ளது. அதேவேளையில் ராங் ரூட்டில் வாகனங்கள் செல்வதினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் போக்குவரத்து பிரிவுக்கு தெரியவந்துள்ளது.
ஆனால் ராங்ரூட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.100 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த தொகையை எளிதாக செலுத்துவதாக கருதப்பட்டது.
இதையடுத்து மோட்டார் வாகன சட்டம் புதிய திருத்தத்தின்படி ராங் ரூட்டில் பயணிப்பவர்களுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்க சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்த முடிவின்படி திங்கட்கிழமை முதல் ராங் ரூட்டில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் திங்கட்கிழமை மட்டும் 1,300 வாகன ஓட்டிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என சென்னை காவல் துறையின் போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்