search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கை கால்"

    • பீகாரில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
    • ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகங்களையே போலீசார் சோதனை செய்தனர்.

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. 

    அண்மையில் கூட பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது செயற்கை கால்களுக்குள் மது பாட்டில்களை மறைத்து வைத்து கடத்திய போது போலீசில் பிடிபட்டுள்ள சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பங்கா மாவட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது மகேஷ்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்கூட்டியில் அவ்வழியே வந்துள்ளார்.

    போலீசாரை பார்தததும் பதட்டப்பட்ட அந்த இளைஞரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அணிந்திருந்த செயற்கை காலில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    பின்னர் அவரின் ஸ்கூட்டியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாசம்மா பசுவை குழந்தையை போல பாசம் காட்டி வந்தார்.
    • கால்முறிந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்த முடியுமா? என்று கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கொச்சியை அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் தாசம்மா. இவர், வீட்டில் 2 வயதான பசு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த பசு தினமும் 3 லிட்டர் அளவுக்கு பால் கொடுத்து வந்தது. இதனால் தாசம்மா, அந்த பசுவை குழந்தையை போல பாசம் காட்டி வந்தார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாட்டு கொட்டிலில் கட்டப்பட்டிருந்த பசு திடீரென கத்தியது. சத்தம் கேட்டு வெளியே வந்த தாசம்மா, அங்கு வந்த நாயை பார்த்து பசு கத்துவதை கண்டார். நாயிடம் இருந்து தப்பிக்க பசு ஓடியபோது அதன் பின்னங்கால் இடறிவிழுந்து முறிந்து விட்டது.

    இதனை கண்டு பதறிபோன தாசம்மா மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த பசுவை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பசுவை பரிசோதித்த டாக்டர், பசுவின் பின்னங்காலை வெட்டி அகற்றினால் மட்டுமே பசுவை காப்பாற்ற முடியும் எனக்கூறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர், அந்த பசுவை இறைச்சிக்கு விற்று விடும்படி கூறினர்.

    தாசம்மா அக்கம்பக்கத்தினரின் ஆலோசனையை கேட்க மறுத்தார். கால்முறிந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்த முடியுமா? என்று கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் செயற்கையாக பிளாஸ்டிக் கால் பொருத்தினால் பசுவை நடக்க வைக்க முடியும் என்று கூறினர்.

    உடனே தாசம்மாவும், அவரது குடும்பத்தினரும் தாங்கள் ஆசையாக வளர்த்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி கால்நடை டாக்டர், பசுவுக்கு செயற்கை கால் பொருத்தினார். பின்னர் அதற்கு நடக்கவும் பயிற்சி அளித்தார்.

    இதில் அந்த பசு மெல்ல மெல்ல எழுந்து நிற்க தொடங்கியது. இப்போது நடக்கவும் தொடங்கி உள்ளது. இதனை கண்ட தாசம்மாவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

    • தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • முகாமில் தகுதியான 162 நபர்களுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு செயற்கை கால்கள் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அவர்க ளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யும் சிகிச்சை முறை குறித்து கலெக்டர் பார்வையிட்டு தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில், சுயதொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுயவேலை வாய்ப்பினை உருவாக்கிட கணினி, கைபேசி போன்ற எண்ணற்ற பயிற்சிகள் மற்றும் சக்கர நாற்காலிகள், மின்கல சக்கர நாற்காலிகள்,

    இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கை மற்றும் கால், நவீன காதொலி கருவி, முடம் நீக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது.

    அதனடிப்படையில் மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகம் மற்றும் சென்னை பிரீடம் டிரஸ்ட் இணைந்து நடத்திய செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமில் தகுதியான 162 நபர்களுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு செயற்கை கால்கள் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    • செயற்கை கால் அளவீட்டு முகாம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் நாளை 18-ந்தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
    • கூடுதல் விவரங்களுக்கு 93630-32998 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    தனியார் அமைப்பு சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் நாளை 18-ந்தேதி( ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, செயற்கை கால் தேவைப்படுவோா் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளா் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம்.இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 93630-32998 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
    • மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை மற்றும் கால்களை இழந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

    பிற்படுத்தப்பட்டோர்,

    மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பேருக்கு மாவட்ட அலகில் இயங்கி வரும் விடுதிகளில், பகுதி நேர தொகுப்பூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளராக பணியாற்றி மரணமடைந்த செல்லேசுவரி என்பவரது வாரிசுதாரரான கவிதாவுக்கு அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சங்கர நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஞானவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×