என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் சபாநாயகர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
    • முத்தப்பன்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நலம் பாதித்து காலமானார்.

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி முத்தையா (வயது 77). முன்னாள் சபாநாயகரான இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 2 மாதமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சி பணியாற்றி வந்தார். கடந்த 1991-ம் ஆண்டு சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சட்டசபை சபாநாயகரானார்.

    1991 முதல் 1996-ம் ஆண்டு வரை சபாநாயக ராக பொறுப்பு வகித்தார். 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.

    தரைவழி போக்குவரத்து இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அந்த நேரத்தில் வாஜ்பாயின் அரசு ஒரு ஓட்டில் கவிழ்ந்தது. அப்போது சேடப்பட்டி முத்தையாவின் நடவடிக்கையில் ஜெயலலிதாவுக்குஅதிருப்தி ஏற்பட்டது. அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்.

    இதனை தொடர்ந்து சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தற்போது வரை தி.மு.க.வில் இருந்து வந்தார். சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நலம் பாதித்து காலமானார்.

    சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும் 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகன் மணிமாறன் தி.மு.க. மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேடப்பட்டி முத்தையாவின் இறுதி சடங்கு ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    ×