search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில்"

    • மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    • அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது.

    பூதப்பாண்டியில் சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடந்த திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 24-ந் தேதி முதல் கால யாக வேள்வி தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, 5.30 மணிக்கு தீபாராதனை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.

    காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாலையில் திருக்கல்யாண வைபோக முகூர்த்தம், இரவு பஞ்சமூர்த்தி உலா வருதல் போன்றவை நடந்தது.

    • இன்று இரவு பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி நடக்கிறது.
    • நாளை இரவு பஞ்சமூர்த்தி தரிசனம் உலா நடக்கிறது.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காலையில் பழையாற்றில் இருந்து யானை மீது புனிதநீர் எடுத்த வரும் நிகழ்ச்சி நடந்தது. புனிதநீர் நான்கு ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல ஆறுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர்களுடன் கும்பங்களில் புனித நீர் வைக்கப்பட்டது. நேற்று இரவு முதல் கால யாக வேள்வி தொடங்கியது.

    விழாவின் 4-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு பாவனாபிஷேகம், தொடர்ந்து 2-ம் யாகசாலை பூஜை, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சமய சொற்பொழிவு, மாலை 6.30 மணிக்கு மேல் 3-ம் கால யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி ஆகியவை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து பூர்ணகுதி, தீபாராதனை, காலை 6.30 மணிக்கு யாத்ராதானம், 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல், 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மூலஸ்தானம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, 10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக மூகூர்த்தம், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம் உலா ஆகியவை நடக்கிறது.

    • கும்பாபிஷேக கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
    • கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.

    பூதப்பாண்டியில் பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி ஜூலை மாதமும், பாலாலயம் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14-ந் தேதிகளில் நடந்தது.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு கோவிலை சுற்றி பார்த்து கோவில் பராமரிப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்த ரூ.1 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஜனவரி மாதம் 26-ந்தேதி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை 7.30 மணி அளவில் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக கால் நாட்டு நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது.

    இதற்கான பூஜைகளை தந்திரிகள் கே.ஜி.எஸ்.மணி நம்பியார், சிவசுப்பிரமணியம் நம்பியார் ஆகியோர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ஆறுமுகம் நயினார், திருப்பணி மற்றும் கும்பாபிஷேக உபயதாரர்கள் நாகமணி, நாகராஜன் பக்தர் சங்கத்தை சேர்ந்த பாக்கியம் பிள்ளை, ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.68 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்மாள் கோவிலில் ரூ.68 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மேல்சாந்தியிடம் கோவிலின் நிறை, குறைகளை கேட்டறிந்தார். கோவில் பணியாளர்களிடம் ஊதியம் சரியாக கிடைக்கிறதா எனவும் கேட்டறிந்தார்.

    மேலும் அம்பாள் தேர், சாமி தேர்களை பார்வையிட்டு பழுது ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அமைச்சரிடம், தேர் நிலை நிறுத்தும் பகுதியை மழைநீர் தேங்காதவாறு உயர்த்த வேண்டும். பெரிய தேருக்கு கண்ணாடி இழை கூடாரம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குமரி மாவட்ட அறநிலையத்துறையில் ரூ.15 கோடி மீதம் இருப்பதாகவும், அந்த ரூபாயை வைத்து உடனடியாக அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவிலில் சாமி மற்றும் சிவகாமி அம்மன் சன்னதிகள், விமானங்கள், கொடிமர மண்டபம், அர்த்த மண்டபம், நமஸ்கார மண்டபம் போன்றவற்றை பழுது பார்த்தல், மின் இணைப்புகளை சரிசெய்தல், மேலவாசல் கோபுர திருப்பணிகள், சாமி உலா வரும் வாகனங்களை செப்பனிடுதல், மதிற்சுவரை சீரமைத்தல், முகப்பில் நிழற்கூடம் அமைத்தல், கோவிலுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நிர்வாகத்தின் மூலமும் உபயதாரர்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான உதவிகளை செய்திடவும் தயாராக உள்ளோம். இந்த பணிகள் நிறைவுற்ற பிறகு வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், குமரி மாவட்ட இணைக்கப்பட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் நகைகள் பாதுகாப்பு அலுவலர் பாரதி மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×