என் மலர்
நீங்கள் தேடியது "அவினாசி- அத்திக்கடவு"
- தி.மு.க., ஆட்சியில், 10 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
- பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதற்கான காரணத்தை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
அவினாசி:
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டச் செய்யும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி நடந்து வருகிறது. 94 சதவீத பணிகள் இதுவரை முடிந்துள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்துக்காக விவசாயிகள் சிலருக்கு இழப்பீடு தொகை வழங்குவதில், நிர்வாக அனுமதி வழங்கப்படாததால் பணியில் தொய்வு தென்பட்டுள்ளது.
இது குறித்து அத்திக்கடவு-அவிநாசி திட்ட பேராட்டக்குழுவினர் கூறியதாவது:-
கடந்த 2021 ஜனவரி மாதம் பணி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு, கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பணியில் தாமதம் ஏற்பட்டது. கொரோனாவுக்கு பின் பணி வேகமெடுத்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், முடியவில்லை.
இந்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் பணி முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டும் பணியில் தொய்வு நீடிக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில், 84 சதவீத பணிகள் முடிந்த நிலையில் தி.மு.க., ஆட்சியில், 10 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
எந்த திட்டமும் நிறைவுபெறும் தருவாயில் நுணுக்கமான வேலைகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படுவது இயல்புதான் என்ற காரணத்தை நீர்வளத்துறையினர் முன்வைக்கின்றனர். இது, விவசாயிகளை சமாதானப்படுத்த கூறப்படும் காரணமாகவே தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து வரும் 17-ந்தேதி துவங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் குரல் எழுப்ப கொங்கு மண்டல அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் - ஈரோடு எல்லையில் உள்ள வரப்பாளையத்தில் திட்டப்பணியை பார்வையிட்ட கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், அத்திக்கடவு திட்டப்பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சட்டசபையில் பேசுவோம் என தெரிவித்துள்ளார்.
அவிநாசி எம்.எல்.ஏ., தனபால் கூறுகையில், அத்திக்கடவு திட்டம் தாமதம் குறித்து ஏற்கனவே அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இம்முறை பேச வாய்ப்பு கிடைத்தால், அத்திக்கடவு பிரச்னையை எழுப்புவேன். பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதற்கான காரணத்தை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.