என் மலர்
நீங்கள் தேடியது "இலங்கை கடற்கொள்ளையர்கள்"
- மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, முருகேசன், மகாலிங்கம், ராஜகோபால் உள்ளிட்ட 5 பேரும் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதேப்போல், மற்றொரு படகில் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், சண்முகவேல், முருகானந்தம், செல்வம் ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தம் 2 பைபர் படகுகளில் 9 மீனவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென 2 விசைபடகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் சுப்பிரமணியன் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலை மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உள்ளிட்ட பொருட்களை கேட்டுள்ளனர். அவர்கள் அதனை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் 5 மீனவர்களையும் சராமாரியாக தாக்கினர். பின்னர், அங்கிருந்த சுமார் 600 கிலோ மீன்பிடிவலையை எடுத்து கொண்டு படகையும் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்கொள்ளையர்கள் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகிற்கு சென்று அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்ததால் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 4 மீனவர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு படகில் இருந்த மீன்கள், தொழில் நுட்ப கருவிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.
இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 9 மீனவர்களும் விழுந்தமாவடி கடற்கரைக்கு வந்தனர். காயங்களுடன் அவர்களை கண்ட சக மீனவர்கள் அவர்களிடம் கேட்கையில் தாங்கள் தாக்கப்பட்டு குறித்து கூறினர். தொடர்ந்து, கீழையூர் கடலோர காவல் படையில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் தாக்குதலால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கோடியக்கரை 7 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் 5 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
- கொடூர தாக்குதலில் மீனவர் ராமன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுறையில் இருந்து மீனவர்கள் ராமன் (வயது 51), ரமேஷ் (28), சிவக்குமார்(41) ஆகியோர் ஒரு பைபர் படகிலும், பொன்னுத்துரை (51), ஜெயசந்திரன் (40) ஆகியோர் மற்றொரு பைபர் படகு என 2 படகுகளில் நேற்று மாலை மீன்பிடிக்க புறப்பட்டனர்.
இன்று அதிகாலை கோடியக்கரை 7 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் 5 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி மீனவர்களின் 2 படகுகளிலும் ஏறினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனவர்களை கத்தியால் குத்தி ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன், நண்டு, ஜி.பி.எஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பினர்.
இந்த கொடூர தாக்குதலில் மீனவர் ராமன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து வேக வேகமாக கரைக்கு திரும்பிய அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுபுள்ளி வைத்து கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
- இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.
நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் முருகன் மற்றும் அக்கரைபேட்டையை சேர்ந்த முத்து, முருகவேல், சின்னையன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 28-ம் தேதி காலை 11 மணியளவில் மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்றனர். அவர்கள் கோடியக்கரையில் தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு திடீரென படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் முருகன் உள்ளிட்ட மீனவர்களிடம் பிடித்து வைத்துள்ள மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை கேட்டு மிரட்டினர். ஆனால் மீனவர்கள் அவற்றை கொடுக்க மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கினர். இதில் படகின் உரிமையாளர் முருகனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய மீன் வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, டார்ச் லைட், செல்போன், உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.
பலத்த காயங்களுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்களை செருதூர் மீனவர்கள் மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீன்பிடி தடையை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
- மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே தமிழக எல்லையில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த விபரம் வருமாறு:-
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்களின் படகை வழிமறித்தனர். பின்னர், மீனவர்களின் படகுக்கு சென்று அவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த தாக்குதலில் மீனவர் ராஜேந்திரனுக்கு தலையில் வெட்டுக்காயமும், ராஜ்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் கட்டையால் அடித்ததில் காயமும் ஏற்பட்டது. மற்றொரு மீனவரான நாகலிங்கத்திற்கு உள்காயம் ஏற்பட்டது.
மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்து, உடலில் பலத்த காயங்களுடன் இன்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அவர்களை கண்ட சக மீனவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.
இதேபோல், வேதாரண்யம் அடுத்துள்ள பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமார், லட்சுமணன், ஜெகன் ஆகிய 3 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பொருட்களையும் இழந்து, உடலில் காயங்களுடன் இன்று காலை பெருமாள்பேட்டை மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பினர். பின்னர் நடந்தது குறித்து சக மீனவர்களிடம் கூறி வேதனை தெரிவித்தனர்.
காற்றழுத்த தாழ்வு பகுதி, கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை மீனவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் கடலுக்கு சென்றனர். அவ்வாறு சென்ற மீனவர்களை அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறித்த சம்பவம் கோடியக்கரை மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
- கோடியக்கரை அருகே நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அங்கு படகில் வந்தனர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தனசீலன். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றார்.
இவருடன் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணியன், அய்யப்பன், சதீஷ், மணிபாலன், அபினேஷ், மாதேஷ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இவர்கள் கோடியக்கரை அருகே நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அங்கு படகில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
பின்னர் இரும்பு பைப், பட்டாக்கத்தி ஆகியவற்றால் காரைக்கால் மீனவர்கள் 7 பேரையும் கொடூரமாக தாக்கினர். இதனால் அவர்கள் வேதனையால் அலறி துடித்தனர். என்றாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கி விட்டு படகில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள், வலை, செல்போன், திசை காட்டும் கருவி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் காரைக்கால் மீனவர்கள் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவசரம் அவசரமாக மீனவர்கள் படகை கரைக்கு ஓட்டி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஊருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கிராம மக்கள் மீனவர்கள் 7 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மீனவர்கள் ஒன்று திரண்டனர். இதன் காரணமாக அங்கு பதட்டம் நிலவியது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக புதுவை மாநில அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்றனர்.