என் மலர்
நீங்கள் தேடியது "ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் பள்ளி மாணவ-மாணவிகள்"
- அதிகப்படியான உபரி நீர் நாகாவதி ஆற்றில் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- ஆபத்தான முறையில் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் நத்தஅள்ளி. இக்கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1000-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய சாலை வசதி இல்லை.
இக்கிராம மக்கள் நாகாவதி ஆற்றினை கடந்து தான் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், பென்னாகரம், இண்டூர்,பகுதிகளில் பெய்த கனமழையால் பத்துக்கு மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதிகப்படியான உபரி நீர் நாகாவதி ஆற்றில் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் இக்கிராம மக்கள் ஆற்றின் ஒரு கரையிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு ஆபத்தான முறையில் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, எங்கள் கிராமத்தில் இருந்து ஆற்றின் இருபுறமும் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. ஒருபுறம் உயர்நிலைப்பள்ளி மற்றொருபுறம் துவக்கப்பள்ளி. மேலும் இண்டூர் பகுதியில் மேல்நிலை பள்ளி மற்றும், கல்லூரிகளுக்கு தினமும் 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.
இதேபோல் விவசாய கூலி வேலைக்கும், அறுவடை செய்த காய்கறிகளை சந்தைகளுக்கும், தினமும் பால் ஊற்றுவதற்கும் நாகாவதி ஆற்றினை கடந்து சென்று வர வேண்டும். தொடர்ந்து பெய்த கனமழையால் தரைப்பாலம் பழுதாகி அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றில் தண்ணீர் படிப்படியாக அதிகரித்து வருவதால் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சென்று வருகிறோம்.
எங்கள் கிராமத்துக்கு சாலை அமைத்தும், ஆற்றின் குறுக்கே சிறிய தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்குவதால் பள்ளி கட்டிடத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.