search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு தீ விபத்து"

    • தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது.

    பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும்போது சென்னையில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், திருச்சியில் 3 பேரும் தீக்காயத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

    தஞ்சாவூரில் 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 4 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோவில் விழாவை கண்டுகளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கதர்கள் வளாகத்தில் கூடியிருந்தனர்.
    • பட்டாசு வெடிக்கும்போது மொத்தமாக வைக்கப்பட்ட இடத்தில் தீப்பொறி விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் பகுதியில் வீரராகவர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலமாகும். இதில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா நடந்து வந்தது. இதையடுத்து நேற்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அதனை கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு 12:30 மணியளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசுகள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெடித்து சிதறிய பட்டாசுகளில் இருந்து தெறித்த தீப்பொறிகள் விழுந்தன.

    இதையடுத்து மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தால் கடும் தீப்பிளம்பு ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்களின் மீது தீப்பிடித்தது. இந்த விபத்தில் 154 பேர் காயம் அடைந்துள்ளனர். 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த தீ விபத்து செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காசர்கோடு பட்டாசு வெடிவிபத்தால் 154 பேர் காயம் அடைந்த நிலையில், 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்ற செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் என்னுடைய நினைவும் மற்றும் பிரார்த்தனை காயம் அடைந்தவர்கள் மற்றம் அவர்களுடைய குடும்பத்தினரோடு உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் முழு மனதுடன் ஒன்றுகூடி மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
    • ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவருமே ராக்கெட் பட்டாசுகளையும் வெடிக்க செய்தனர்.

    நேற்று சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன.

    வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன.

    இந்த தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 20 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள் ஆவர்.

    தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் தீக்காய சிகிச்சை பிரிவு செயல்பட்டது. அங்கு சென்றும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் தீபாவளி பட்டாசு தீவிபத்தில் பெரிய அளவில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிப்பதாக இருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×