search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் மறியல்"

    • சிறிய மணல் பரப்பில் மொத்த படகுகளையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
    • வருவாய்த் துறை அதிகாரிகள் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    சேதராப்பட்டு:

    புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் மற்றும் சோதனைக்குப்பம் மீனவ கிராமங்கள் உள்ளது.

    நடுக்குப்பம் பகுதியில் சுமார் 120 மீன்பிடி விசைப்படகுகளும், சோதனைக்குப்பம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விசை படகுகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றத்தால் நடுக்குப்பம் மற்றும் சோதனைக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்ததால் மீனவர்களுடைய படகு, வலை மோட்டார் இயந்திரங்கள் பாதிப்படைந்தது.

    இதற்கு தீர்வுகாண தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே இது போன்ற பாதிப்புகளிலிருந்து மீனவ கிராமத்தை காப்பாற்ற முடியும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு கடற்கரையோரத்தில் அரசு சார்பில் தற்காலிகமாக கருங்கற்கள் கொட்டப்பட்டது. இதனால் கரையில் இருந்து கடலுக்கு படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதி அடைந்த னர்.

    சிறிய மணல் பரப்பில் மொத்த படகுகளையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடலிலிருந்து மீன் பிடித்து விட்டு மீனவ குப்பத்திற்கு திரும்பும் மீனவர்கள் காற்றின் விசையால் கடலில் கொட்டப்பட்ட கருங்கற்களில் படகு மோதி விபத்து ஏற்பட்டு நடுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கசாமி, முருகன், பூபாலன், மணிகண்டன் மற்றும் மதுரை ஆகிய 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    இதற்காக அரசு தரப்பில் நிதி உதவியும் வழங்கப்பட்டது. நடுகுப்பம் மற்றும் சோதனைக்குப்பம் மீனவப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் தடுக்கப்பட்டு கடல் மண் அரிப்பு தடுக்கப்படும் என்ற நோக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 2 மீனவ கிராம மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அமைச்சர் பொன்முடி, ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் அமைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை தூண்டில் வளைவு அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட ஃபெஞ்ஜல் புயலால் 2 மீனவ மக்களும் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று நடுக்குப்பம் மற்றும் சோதனைக்குப்பம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த போராட்டத்தினால் புதுவையில் இருந்து சென்னை சென்ற வாகனங்களும் அதுபோல் சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்களும் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நின்றன.

    இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
    • பொம்மையார்பாளையம் மீனவ கிராமம் வரை தான் செயல்படுத்தப்பட்டு மீனவர்கள் பயனடைந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி பிள்ளைசாவடி, கோட்டக்குப்பம், நடுகுப்பம், தந்திரியான்குப்பம், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றத்தின் காரணமாக கடற்கரை ஓரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் வசிக்கக்கூடிய மீனவர்களின் வீடுகள் மற்றும் படகு நிறுத்தும் இடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. இதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள மீனவர்களின் நலனுக்காக அரசு சார்பில் தூண்டில் வளைவு திட்டம் மூலம் கடற்கரை ஓரங்களில் கருங்கற்களை கொட்டி மண்ணரிப்பை தடுத்தனர். இந்த திட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமம் வரை தான் செயல்படுத்தப்பட்டு மீனவர்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் அதனை அடுத்துள்ள பிள்ளைசாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பிள்ளைசாவடி மீனவர்கள் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் 3 முறை சாலை மறியல் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    ஆத்திரமடைந்த பிள்ளைசாவடி மீனவ பொதுமக்கள் ஆண் பெண் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுவையில் இருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை பிள்ளை சாவடி மெயின் ரோட்டில் திடிரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் மற்றும் வானூர் தாசில்தார் கோவத்தனன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில் எங்களது பகுதியில் கடல் சீற்றத்தால் மன்னரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரமிருந்த வீடுகள் படகு நிறுத்துமிடம் அனைத்தும் சேதம் ஆனது. அதனால் எங்களது பகுதியில் அரசு சார்பில் தூண்டில் வளைவு திட்டம் செயல்படுத்தப்பட்டு கடற்கரை ஓரங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்கு கற்களை கொட்டி மண்ணரிப்பை தடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் முன்னிலையில் வானூர் தாசில்தார் மற்றும் உரிய அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உத்தரவு அளித்ததின் பெயரில் மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. திடீரென்று 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த இடம் பரபரப்பாக இருந்தது. 

    ×