என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டவாளத்தில் விரிசல்"

    • ரவிசங்கர் மட்டும் விரிசலை கண்டுபிடித்து சென்னை ரெயிலை நிறுத்தாமல் இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.
    • துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்திய ரவிசங்கர் மற்றும் அவரது நண்பர்களை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் சூரப்பகாசம் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் நேற்று காலை தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

    ரேணிகுண்டா அருகே உள்ள புடி ரெயில் நிலையம் அருகே மாடுகளை ஓட்டிச்சென்றபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டார்.

    சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழித்தடத்தில் வர இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர் கிராமத்தில் உள்ள வாலிபர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சிவப்பு நிற துணியை கொண்டு வருமாறு கூறினார். அவர்களும் துரிதமாக செயல்பட்டு சிவப்பு நிற துணியை கொண்டு வந்தனர்.

    ரவி சங்கர் சிவப்பு துணியை காட்டியபடி தண்டவாள விரிசல் உள்ள இடத்தில் இருந்து ரெயில் வந்த திசையை நோக்கி சிறிது தூரம் ஓடினார்.

    அவர்கள் எதிர்பார்த்ததை போலவே ரேணிகுண்டா ரெயில் நிலையத்திலிருந்து மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிக வேகத்தில் வந்து கொண்டு இருந்தது.

    தண்டவாளத்தின் நடுவில் நின்று கொண்டிருந்த ரவிசங்கர் தன்னிடமிருந்த சிகப்பு துணியை உயர்த்தி காட்டினார்.

    இதனைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ஏதோ ஆபத்து உள்ளதாக கருதி உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதுகுறித்து புடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாள விரிசலை சரி செய்தனர்.

    இதையடுத்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

    ரவிசங்கர் மட்டும் விரிசலை கண்டுபிடித்து சென்னை ரெயிலை நிறுத்தாமல் இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்திய ரவிசங்கர் மற்றும் அவரது நண்பர்களை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.

    • தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

    திண்டிவனம்:

    சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி ரெயில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பாண்டிச்சேரி ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர்.

    தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்டவாளத்தை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்த பின் திண்டிவம் நோக்கி ரெயில் வந்து கொண்டிருக்கிறது. என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

    • கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
    • ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை.

    கரூர்:

    கரூர்-திருச்சி ரெயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனை அப்பகுதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கலியமூர்த்தி பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறுதி செய்து கொண்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அதனை விரைவாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் சீரமைக்கும் இடத்திற்கு அருகிலும், வாஸ்கோடகாமா-வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் மாயனூர் ரெயில் நிலையத்திலும், கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் பாதி வழியிலும் நிறுத்தப்பட்டன.

    சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு தண்டாவாளம் சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள் புறப்பட்டுச் சென்றன. ரெயில்வே பாதையில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கடந்த மாதம் கரூர்-திண்டுக்கல் ரெயில் பாதையில் மர்ம நபர்கள் இரும்பு துண்டு வைத்து தண்டாவாளத்தை சேதப்படுத்திய நிலையில், இன்று தண்டாவாளத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் சதி செயல் உள்ளதா என ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×