என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி மேம்பாடு"
- இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர்,அக்.30-
மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியபடி பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் செயலியில் (TNSED Parent App) வருகை பதிவு, பள்ளிகளில் திட்டமிடுதல் சார்ந்த விவரங்களை பதிவேற்றினர்.
இதன்மூலமே பள்ளி வளர்ச்சிக்கு விவாதிக்கப்பட்ட பொருள், தீர்மானங்கள் பெற்றோர்களுக்கு பகிரப்பட்டன. மேலும் பெற்றோர்களிடம் காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரங்களை பகிர்ந்து கற்றல் அடைவு சார்ந்த கலந்தாலோசனை நடைபெற்றது.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்த ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவ வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து, அதற்கான தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே பிளஸ் 2 முடித்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களில் உயர்கல்வி முகாமில் பங்கேற்ற 47 பேர் உயர்கல்வி சேர முன்வந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா, என்று பள்ளி கல்வித்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவ்வகையில் திருப்பூரில் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் 150 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்வியை தொடரவில்லை.
இவர்கள் உயர் கல்வியை தொடர உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களில், 47 பேர் உயர்கல்வி சேர்வதற்கான வாய்ப்புகளை கேட்டறிந்தனர். இதில் 8 பேர் ஐ.டி.ஐ., தொழிற்கல்வியில் சேரவும், 3 பேர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கை நீட்டிப்பு செய்தால், விண்ணப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.பலர் நீட், வேளாண் படிப்பு கலந்தாய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும், நிச்சயம் உயர்கல்வி தொடர்வதாக உறுதியளித்தனர். இவ்வாறு மொத்தம் 47 பேர் உயர்கல்வி தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தேர்ச்சியடையாத மாணவர்கள் பலர் பியூட்டிஷியன், டெய்லரிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். 2 கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டறிந்தனர்.கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி முகாமில் பங்கேற்க தவறியவர்கள் வெள்ளிக்கிழமை நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுள்ளனர்.