என் மலர்
நீங்கள் தேடியது "இரு சக்கர வாகன ஓட்டிகள்"
- மற்ற வாகனங்களுடன் போதுமான இடைவெளி விட்டு, மெதுவாக இயக்க வேண்டும்.
- கனமழை நேரங்களில் சாலையில் போதிய 'விசிபிளிட்டி' இருக்காது.
திருப்பூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழைக்காலத்தில் விபத்துகளில் இருந்து பாதுகாக்க சிலவற்றை பின்பற்ற வேண்டுமென திருப்பூர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி ஈரமான சாலைகளில், போதுமான பிடிமானம் இருக்காது. வாகனங்கள் வழுக்குவதற்கு வாய்ப்புள்ளதால் மணிக்கு 30 - 40 கி.மீ., வேகத்தில் பயணிப்பது பாதுகாப்பானது. ஈரமான சாலையில் வண்டியை நிறுத்துவதற்கு தடுமாற்றம் ஏற்படும். மற்ற வாகனங்களுடன் போதுமான இடைவெளி விட்டு, மெதுவாக இயக்க வேண்டும்.
ஈரமான சாலைகளில் வண்டி ஓட்ட, டயர்கள் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். டயர்களில் நல்ல கிரப், போதுமான ட்ரெட் பட்டன்கள் இருப்பதை உறுதி செய்யவும். தேய்ந்த டயர்களால் வாகனங்கள் சறுக்கி, விபத்துகள் நிகழும். தினமும் இரண்டு டயர்களின் அழுத்தத்தையும் தவறாமல் சோதித்துக் கொள்ள வேண்டும்.
மழையில், சாலையின் மேற்பரப்பில் சிந்தியிருக்கும் வாகனங்களின் ஆயில் மற்றும் ஈரத்தால், வழுக்கும். 'சடன் பிரேக்' அடிக்கும்போது வண்டி உங்கள் கட்டுப்பாட்டை இழக்கலாம். இதேபோல் ஆக்சிலேட்டரை முறுக்கும்போதும், வளைவுகளில் திருப்பும்போதும் வண்டியை மெதுவாகவே இயக்க வேண்டும்.
கனமழை நேரங்களில் சாலையில் போதிய 'விசிபிளிட்டி' இருக்காது. மழைநேரத்தில் உங்கள் முகப்பு விளைக்கை எரியவிட்டபடி பயணிக்கவும். மழையால் விளக்குகளில் சேறு படியும் என்பதால், அவ்வப்போது ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்புகளை சுத்தம் செய்ய வேண்டும்.
தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் பைக்கை இயக்குவதை தவிர்க்கவும். பள்ளம் எந்தளவுக்கு ஆழம் என்பது நமக்கு தெரியாது. ஆழமாக இருப்பின் வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும். மழைநீர் உங்கள் பைக்கின் ஸ்பார்க் பிளக்கில் பட்டு, வண்டி பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென போலீசார் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.