என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிட்டல் ரிசர்வே பெயரில் கேரளா அத்துமீறல்"

    • கேரள அரசு மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரிசர்வே செய்து வருகிறது.
    • எல்லைப்பகுதியில் டிரோன்கள் பறக்கவிடப்பட்டு எந்தெந்த இடங்களில் இதுபோன்ற பணிகள் நடைபெறுகிறது எனவும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள அரசு மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரிசர்வே செய்து வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் நடந்து வரும் இப்பணியில் ஆக்கிரமிப்பு அகற்றம், நிலம் வரையறை, இடங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான பணிகள் மேற்கொள்வதாக அம்மாநில முதல்-மந்திரி பிணராயிவிஜயன் தெரிவித்துள்ளார். இதில் 1500 சர்வேயர்கள் மற்றும் 3000-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இப்பணியை 4 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு அளவீடு செய்ய வேண்டுமானால் முதலில் தமிழக-கேரள எல்லையை அளவிட வேண்டும். அப்போதுதான் இப்பணி முழுமைபெறும். இதைச்செய்யாமல் வருவாய் நிலங்களை கேரள அரசு மறுஅளவீடு செய்வதன்மூலம் தமிழக வருவாய் நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை ஆகிய பகுதிகள் 1956-ம் ஆண்டு முதலே ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த தமிழக வனநிலங்கள் வருவாய் நிலங்களாகவும், பட்டா நிலங்களாகவும் மாநில அரசு மாற்றுவிட்டது.

    இதனை தமிழக அரசு ஆரம்பத்திலேயே எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள், சமூகஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே தமிழக எல்லை பகுதியில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழர்களால் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை.

    குமுளி சோதனைச்சாவடியில் தமிழக பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு கபளிகரம் செய்யப்பட்டது. இதேபோன்று இருமாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள வருவாய் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கேட்டபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிககை எடுக்கப்படும் என்றார்.

    இதனைதொடர்ந்து தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே தமிழக பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதன்விபரம் மற்றும் கேரள அதிகாரிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை போன்றவற்றை தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் எல்லைப்பகுதியில் டிரோன்கள் பறக்கவிடப்பட்டு எந்தெந்த இடங்களில் இதுபோன்ற பணிகள் நடைபெறுகிறது எனவும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×