என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்.கே"
- நந்தம்பாக்கத்தில் சினிமா துணை நடிகர் மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன், ரூ.2 லட்சத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் வேலை செய்த காவலாளி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12-வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). சினிமா துணை நடிகரான இவர், எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இவருடைய மனைவி ராஜி (48). இவர்களது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காவலாளியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் ராதாகிருஷ்ணன் வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவருடைய மனைவி ராஜி, தனியாக இருந்தபோது மர்மநபர்கள் 3 பேர் வீடு புகுந்து ராஜியை கட்டிப்போட்டு, பீரோவில் வைத்து இருந்த 200 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த ராதாகிருஷ்ணன், தனது மனைவி கட்டிப்போடப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காவலாளி ரமேஷ், வீட்டில் இ்ல்லை. அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அவரது வீட்டின் காவலாளி ரமேஷ் உள்பட 3 பேர் வீட்டுக்குள் புகுந்து, பின்னர் நகை, பணத்துடன் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே ரமேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவலாளி உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.