search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவரிங் வளையல்கள்"

    • ஊழியர் முருகன் வேலை முடிந்ததும், வளையல் பிரிவில் நகைகளை அடுக்கி வைக்கும் சமயத்தில் புதிய கவரிங் வளையல்களை அங்கு வைத்துவிட்டு, அதற்கு பதில் தங்க வளையல்கள் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.
    • போலீசார், முருகனை பிடித்து சென்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது 6 வளையல்கள் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அதனை ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவைகள் அனைத்தும் கவரிங் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தங்க வளையல்களை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகை வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த தங்க வளையல்களின் எடை 10 பவுன் ஆகும். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    இதுதொடர்பாக அந்த நகை கடையின் மேலாளர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார், இந்த நூதன திருட்டு குறித்து முதற்கட்டமாக நகைக்கடையின் தங்க வளையல் பிரிவில் வேலை பார்த்தவர் யார்? என விசாரணை நடத்தினர். அதில், சேலம் சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 40) என்பவர் தங்க வளையல் பிரிவில் ஊழியராக வேலைபார்த்து வருவது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம், தங்க வளையல் எங்கே? என கேட்டபோது தனக்கு இதுபற்றி தெரியாது என கூறினார். இதனை தொடர்ந்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கணினி மூலம் போலீசார் பார்த்தனர். அதில், ஊழியர் முருகன் வேலை முடிந்ததும், வளையல் பிரிவில் நகைகளை அடுக்கி வைக்கும் சமயத்தில் புதிய கவரிங் வளையல்கள் அங்கு வைத்துவிட்டு, அதற்கு பதில் தங்க வளையல்கள் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார், முருகனை பிடித்து சென்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன.

    இது குறித்து போலீசார் கூறியதாவது-

    நாங்கள், நகைக்கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினோம். இதில் ஊழியர் முருகன் தினமும் பணிக்கு வருவதால் முதலில் எங்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. இதையடுத்து நாங்கள், அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் நகைகளை முருகன் திருடுவது காட்டி கொடுத்தது.

    6 புதிய கவரிங் வளையல்கள் தயார் செய்து, அவற்றை கொண்டு வந்து வைத்துவிட்டு, 6 தங்க வளையல்கள் எடுத்துச் சென்றுள்ளார். திடீரென வேலையை விட்டு நின்று விட்டால், நகைகளை திருடியது நான் தான் என தெரிந்து விடும் என்று கருதி, தன் மீது சந்தேகம் வந்து விடக் கூடாது எனபதற்காக, விடுப்பு எடுக்காமல் தினமும் வேலை வந்துள்ளார்.

    நகைகளை மீட்பதற்காக நாங்கள் முருகனின் வீட்டில் சோதனை நடத்தினோம். திருடப்பட்ட வளையல்கள் அங்கு இல்லை. அவற்றை முருகன் விற்று பணத்தை செலவழித்துள்ளார்.

    இந்த நகை திருட்டுக்கு ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். கூட்டு சதி செய்து, இந்த நகைகள் திருடப்பட்டு இருக்கிறது. சக ஊழியர்கள் மற்றும் முருகன் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இதுபோல் போலி கவரிங் நகை வைத்து விட்டு தங்க நகைகள் திருடப்பட்டு இருக்கிறதா? என கண்டறிய மேலாளரிடம், அனைத்து நகைகளையும் பரிசோதிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    ×