search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்க வாசல்"

    • 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2-ந் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

    வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது. இதையடுத்து அர்ச்சகர்கள் சாஸ்திரப்படி வைகுண்ட வாசலை அடைத்தனர்.

    வைகுண்ட ஏகாதசி நாட்களான 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட்டில் 25 ஆயிரம் பேரும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    வைகுண்ட ஏகாதசி முதல் நாள் அன்று முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதனால் அன்று ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது.

    இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களில் 2.50 லட்சம் பேர் தரிசனத்திற்கு வரவில்லை. இதனால் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    வைகுண்ட ஏகாதசி 10 நாட்களில் 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் நேற்று 68,855 பேர் தரிசனம் செய்தனர். 21,280 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி விழா நடைபெறும். அதன்படி நேற்று துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் திருமாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் முக மண்டபத்தில் உள்ள பூவராஹ சுவாமியை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. இதில் விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.

    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி
    • தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதையடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வரும் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பேரும், இலவச தரிசன டிக்கெட்டில் 50 ஆயிரம் பேரும், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் சார்பில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 8 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி முதல் நாளான நேற்று இலவச தரிசன டிக்கெட் மற்றும் பல்வேறு சேவை டிக்கெட்களை பெற்ற 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. 13 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு வராததால் தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நேற்று நாடு முழுவதிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்ததால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் திருப்பதி வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூலானது. 69,414 பேர் தரிசனம் செய்தனர். 18,612 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு மேல் உண்டியல் வசூலாகியிருந்தது.

    • தங்கத்தேரை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    • 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கோவில் உள்ளே அதிகாலை 1.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வி.ஐ.பி. பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு காலை 6 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதைத் தொடர்ந்து காலை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்கத்தேரை தேவஸ்தான பெண் ஊழியர்கள், ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் திருமலையில் உள்ள அன்னமயபவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    ஸ்ரீவாணி டோக்கன்கள் நேரில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் 9 இடங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் திருமலையை அடைந்து, அங்குள்ள தரிசன வரிசைக்கு சென்று விட வேண்டும். பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    பக்தர்கள் சிரமமின்றி வைகுண்டம் துவார தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகளும், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் சேவை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினா்ா.

    • நவதிருப்பதி கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சுற்றி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த தலங்களில் சூரியனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், சந்திரனுக்கு அதிபதியாக நத்தம் விஜயாசனப் பெருமாள், புதனுக்கு அதிபதியாக திருப்புளிங்குடி காய்சின வேந்த பெருமாள், கேதுவுக்கு அதிபதியாக இரட்டை திருப்பதி அரவிந்தலோசன பெருமாள், ராகுக்கு அதிபதியாக தேவர்பிரான், சனிக்கு அதிபதியாக பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், சுக்கிரனுக்கு அதிபதியாக தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், செவ்வாய்க்கு அதிபதியாக திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், குருவுக்கு அதிபதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகியோர் சிறப்பு பெற்று விளங்குகின்றனர்.

    இந்த நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி தினமான நேற்று அனைத்து நவத்திருப்பதி தலங்களிலும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர், தேவியருடன் அலங்கரிக்கப்பட்டு சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒரே நாளில் 9 பெருமாளையும் தரிசனம் செய்வது சிறப்பாகும். எனவே 9 நவத்திருப்பதி தலங்களிலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் சயனக்கோலம் கலைத்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

    ஸ்ரீவைகுண்டத்தில் இரவு 7.30 மணியளவிலும், தென்திருப்பேரை மற்றும் ஆழ்வார்திருநகரியில் இரவு 10 மணியளவிலும் நடந்தது. இதில் ஸ்ரீவைகுண்டம் கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஆழ்வார்திருநகரி கோவில் செயல் அலுவலர் அஜித், தென்திருப்பேரை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீவைகுண்டம் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும்.
    • ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும்.

    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கை யாழ்வாரின் பக்தியிலும், திருப்பணியிலும் மகிழ்ச்சியடைந்த ரெங்கநாதர் அவர் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு திருமங்கையாழ்வார், பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருவிழாவாக கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதனை ரெங்கநாதரும் ஏற்றுக்கொண்டு அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

    மற்றொரு தகவலும் உண்டு. என்னவென்றால், கலியுகம் பிறந்ததால் வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனை கண்ட பெருமாள் காவலர்களிடம் வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்? என்று கேட்டார். அதற்கு காவலர்கள் கலியுகம் பிறந்துவிட்டது, இனிமேல் அதர்மம் தலை தூக்கும், தர்மம் நிலைகுலையும், பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்த சூழலில் இருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது.

    அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள் என்றனர். உடனே பெருமாள் சொன்னார், கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில்தான். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும் வைகுண்ட ஏகாதசியன்று சாஸ்திர, சம்பிரதாயப்படி விரதம் கடைபிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும். இந்த வாசல் வடக்கு நோக்கி இருப்பதை காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    வேணு சீனிவாசன் தலைவர், டி.வி.எஸ். குழுமம்

    • இன்று அதிகாலை 2 மணிக்கு பிறகு கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியது.
    • பஜனை குழுவினர் தேவபாராயணம் பாடினார்கள்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவத் திருத்தலங்களான பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கோவிந்தா... கோவிந்தா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக நேற்று இரவு 10 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு பிறகு கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியது.

    சொர்க்க வாசல் திறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கே பரமபதவாசலுக்கு வெளியே நம்மாழ்வார் நிறுத்தி வைக்கப்பட்டார். 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் வாசல் வழியாக பெருமாள் வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வெளியே வந்த பெருமாள் அங்கு நின்றிருந்த நம்மாழ்வாரை பார்த்தார். அதன் பிறகு அங்கிருந்த பஜனை குழுவினர் தேவபாராயணம் பாடினார்கள்.

    பின்னர் பெருமாள் கோவிலில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புரசைவாக்கத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.

    அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

    தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நள்ளிரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினார்கள்.

    அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். அதன் பிறகு பக்தர்கள் தொடர்ந்து வரிசையில் நின்று சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அப்போது கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை மண்டபத்தில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்கும்.

    திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை கருட சேவை நடைபெற உள்ளது.

    திருத்தணி விஜயலட்சுமி சமேத விஜயராகவா பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி உற்சவர் பிரகலாத வரதர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கருட சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூரில் 108 திவ்ய தேசங்களில் 58வது திருத்தலமாக அமைந்துள்ள ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆராதனை செய்து சொர்க்க வாசல் வழியே சுவாமி வெளியே வந்ததும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    மூலவர் சன்னதிக்கு பிரம்மாண்ட ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் ஸ்ரீ வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலையிலேயே காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, பரமபத வாசல் வழியாக சென்று லஷ்மி தேவியுடன் சயன கோலத்தில் காட்சி அளிக்கும் ஸ்ரீ அரங்கநாத பெருமாளையும்,கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் வைகுண்ட பெருமாளையும், பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா, என்று கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    பொன்னேரி அடுத்த திரு ஆயர்பாடியில் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக மன்னன் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட ஹரி கிருஷ்ணா பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மற்றும் விசேஷ பூஜைகள் இன்று அதிகாலை நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
    • தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் மலர்கள், பல வகையான பழங்கள் கொண்டு கோவில் வெளிப்புறம், உள்புறம் மற்றும் கொடிமரம், பலிபீடம், வைகுண்ட வாசல் உள்ளிட்ட இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது.

    அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், எம்.எல்.சி.கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். இதையடுத்து 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    6 மணிக்கு மேல் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும்.

    வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.

    தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பக்தர்களும் 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2000 பக்தர்களும் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் வழங்கி உள்ளது.

    தரிசன டிக்கெட் பெறாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் டிக்கெட் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை திருப்பதியில் உள்ள ராமா நாயுடு அரசு பள்ளி வளாகத்தில் உள்ள கவுண்டரில் அதிகாலை 2.45 மணிக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டது.

    அப்போது தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசாரால், பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் கீழே விழுந்ததில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பக்தர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர்.

    இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பக்தர்களை ஒழுங்குப்படுத்தி காயமடைந்த பக்தர்கள் மற்றும் போலீசாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    திருப்பதியில் நேற்று 53,101 பேர் தரிசனம் செய்தனர்.23,843 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி கடந்த 23 ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று 1-ந் தேதி பகல்பத்து உற்சவம் முடிவடைந்தது. இன்று 2-ந் தேதி (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சொர்க்கவாசல் (பரமபத வாசல்) முன்பு மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. இதைமுன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    இதன் பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) வழியாக எழுந்தருளினார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் திரளாக திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கோஷங்களை எழுப்பி தேவநாதசுவாமியை தரிசித்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக, இன்ஸ் பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இதனை தொடர்ந்து தேவநாதசாமி வெளிப் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து மூலவரை தரிசிக்க பொதுமக்களை அனுமதித்தனர்.

    பின்னர் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. மேலும் ஜனவரி 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஆரணி பஸ் நிறுத்தம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று பெருமாள் அலங்கார ஸ்தாபன திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு எம்பெருமான் அதன் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், ஆரணி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதன் பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும்.
    • பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.

    இந்துக்களின் மிக முக்கிய விசேஷங்கள், பண்டிகைகளில் ஒன்று தான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம்.

    இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், 'வைகுண்ட ஏகாதசி' என இந்துக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைபெறுகிறது.

    பகல் பத்து, இரா பத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    • சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
    • கோவில்களில் உற்சவமூர்த்தி பவனியும் நடக்கிறது.

    பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி 2-ந்தேதி (நாளை) நடக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

    பிரசித்தி பெற்ற 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை கோவில்களில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். திருப்பதி சாரம் திருவாழி மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் உற்சவமூர்த்தி பவனியும் நடக்கிறது.

    ×