என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கிம் விபத்து"

    • ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் விபத்துக்கு உள்ளானது.

    சாட்டன் என்ற பகுதியிலிருந்து 3 ராணுவ வாகனம், தாங்கு என்ற பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெமா என்ற பகுதியில் உள்ள வளைவு பாதையில் செல்லும்போது ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த வீரர்கள் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தச் சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.

    உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×