search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் தொழில்"

    • மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழாவில் வழிகாட்ட வருகிறார்.
    • "Eco Green Unit" நிறுவனத்தின் மூலம் 25-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார்.

    "பசியில் இருப்போருக்கு மீன்களை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்" என்றொரு பழமொழி உண்டு.

    இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் "Eco Green Unit" நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.கே பாபு.

    இதுவரையில் 17,000-க்கும் மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்களை உருவாக்கி இருக்கிறார்.

    கோவை பொள்ளாச்சியில் அமைந்துள்ள சேத்துமடை இவரது சொந்த ஊர். நம்மாழ்வார் அவர்களின் உந்துதலாலும், ஊக்கத்தாலும் இயற்கை விவசாயத்தின் மீது இவருக்கு ஈர்ப்பு வந்துள்ளது. 1998-ஆம் ஆண்டு வெறும் மூன்று நபர்களுடன் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலை தொடங்கியிருக்கிறார்.

    அதனை தொடர்ந்து வேளாண் சார்ந்த பல பொருட்களை இவர் ஒவ்வொன்றாக தயாரித்து சந்தைப்படுத்தி வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று 160 பணியாளர்களுடன் இயங்கும் "Eco Green Unit" நிறுவனத்தின் மூலம் 25-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார்.

    மேலும் இந்நிறுவனத்தின் சேவையை 14 மாநிலங்கள் 7 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து கடல் கடந்து தன் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

    வேளாண் பொருள் உற்பத்தி, வேளாண் கருவிகள் கண்டுபிடிப்பு மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் என ஏராளமான செயல்பாடுகளை இவரின் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

    இது குறித்து அவரிடம் கேட்ட போது,"பாக்கு தட்டு தயாரிப்பதில் தொடங்கியது எங்கள் தொழில் வாழ்வு. பின் பாக்கு தட்டு தயாரிக்கும் இயந்திரத்தை நான் தான் கண்டுபிடித்தேன்.

    வெகு சமீபத்தில் வாழை பட்டையிலிருந்து டீ கப் தயரிக்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறோம். இது போலவே வாழை நார் பிரித்தெடுக்கும் இயந்திரம், சாணத்திலிருந்து பூந்தொட்டி தயாரிக்கும் இயந்திரம், மூங்கிலில் இருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் சாதனங்கள் என இதுவரையில் 5-க்கும் அதிகமான உபகரணங்களை நாங்கள் கண்டுப்பிடித்து உள்ளோம். இவற்றை வெற்றிகரமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

    இது போல் 17,000-த்திற்கும் மேற்பட்டோரை தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறோம்.. இயந்திரங்கள் விநியோகம், பயிற்சி, பொருட்கள் உற்பத்தி, தொழில் விரிவாக்கம், சமூகம் சார்ந்த வளர்ச்சி திட்டங்களை வகுத்தல் என பல தளங்களில் எங்கள் நிறுவனம் செயல்படுகிறது" என்றார்.

    இந்தத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வரும் இவரின் அனுபவ பகிர்வையும் வேளான் தொழில்கள் சார்ந்த வழிகாட்டுதல்களையும் கோவையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று மண் காப்போம் இயக்கம் நடத்தும் "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா"விலும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் விரிவாக விளக்குகிறார் TNAU ஏ.வி. ஞானசம்பந்தம்.
    • அனைவரையும் தொழிலதிபர்களாக்கும் நோக்கத்தோடு இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

    முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கனவுகள் காண்பதும், இலக்குகள் நிர்ணயிப்பதும் இயல்பு.

    அந்த வகையில் மக்களின் வேளாண் சார்ந்த தொழில் கனவுகள் நிறைவேற ஓர் அற்புத களத்தை உருவாக்கியுள்ளது ஈஷா மண் காப்போம் இயக்கம்.

    இவ்வியக்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று கோவையில் "அக்ரி ஸ்டார்ட்-அப்" திருவிழா நடைபெறுகிறது.

    புதிதாக வேளாண் சார்ந்த தொழில் தொடங்குபவர்களுக்கு தாங்கள் துவங்கப் போகும் தொழில் சார்ந்த தெளிவான பார்வை இருந்தாலும் கூட அதை நடைமுறைப் படுத்தும் போது பல சந்தேகங்கள் எழும்.

    ஒரு தொழிலை முறையாக எப்படி பதிவு செய்வது என்பது தொடங்கி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரையில் இருக்கும் அரசு நடைமுறைகள் மற்றும் அதற்கு ஆதரவாக இருக்கும் அரசுத் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கும்.

    இது அனைத்திற்கும் தீர்வளிக்கும் வகையில் TNAU தொழில் நுட்ப வணிக காப்பகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலர் அலுவலர் திரு.ஏ.வி. ஞான சம்பந்தம் அவர்கள் "வேளாணில் வணிக வாய்ப்புகள்" என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார்.

    இதில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்குவோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பேச உள்ளார். TNAU வில் செயல்படும் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் மூலம் வேளாண் சார் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

    வேளாண் சார் தொழில்களுக்கு அத்தியாவசியமான தொழிநுட்ப வழிகாட்டுதல்கள், வணிக மேலாண்மை பயிற்சிகள், சந்தை வாய்ப்புகள், தேசிய அளவிலான கண்காட்சிகள், வங்கி மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைப்பு ஆகிய பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.

    ஞான சம்பந்தம் இத்திட்டங்கள் குறித்தும் இவற்றை எப்படி பெறுவது என்பது குறித்தும் விரிவான தகவல்களை இந்த அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழாவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

    விவசாயிகள் மற்றும் வேளாண் சார் தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரையும் தொழிலதிபர்களாக்கும் நோக்கத்தோடு இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

    இதில் விவசாயியாக இருந்து தொழில் முனைவோராக ஜெயித்த பல முன்னனி தொழிலதிபர்கள், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்கிறார்கள். மேலும் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டுவது எப்படி, அதை பேக் மற்றும் பிராண்டிங் செய்வது, மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதி என அனைத்து அம்சங்களிலிலும் வழிகாட்ட வேளாண் வல்லுநர்கள் வருகை தருகிறார்கள்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • வேளாண்துறையில் இளைய தலைமுறையினருக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து பேசினர்.
    • நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே பல்லவராயன் பாளையத்தில், வேளாண்மை உழவர் நலத் துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில் 'வேளாண்மை அதிக லாபம் ஈட்டும் தொழில்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிசயம் திருமலை திருமூர்த்தி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் பொம்மராஜன், திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும், அரசின் உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்தும் பேசினார். பணிநிறைவு பெற்ற இணை வேளாண் இயக்குநரும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆலோசகருமான அரசப்பன், சிறுதானியங்களில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள், அவற்றை சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள், சிறுதானியங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது, சிறுதானியங்கள் மூலம் மனிதகுலத்திற்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து பேசினார்.

    சமண்ணதி அமைப்பின் இயக்குநர் சுரேஷ்பாபு, உழவர் உற்பத்தி நிறுவனங்களின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். வேளாண்மை அலுவலர் ரம்யாதேவி, வேளாண் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான நிதி திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் குறித்து எடுத்துக் கூறினார்.

    வேளாண்மை அறிவியல் மையத்தின்உதவி பேராசிரியர் கலையரசன், விதைச்சான்று அலுவலர் செந்தமிழ்செல்வன் ஆகியோர், வேளாண் வளர்ச்சிக்கான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் மகுடபதி விவசாய மேம்பாட்டிற்கான மத்திய அரசின் நிதி மற்றும் மானிய உதவிகள் குறித்தும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவர்கள், வேளாண்துறையில் இளைய தலைமுறையினருக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து பேசினர்.

    ஹர்ஷவர்தன் குப்தா, தியானத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், விவசாய பெருமக்களுக்கு தியானப் பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்றும் விளக்கி கூறினார். விவசாயிகள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது.  

    ×