search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆருத்ரா விழா"

    • திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • பக்தர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-

    திருஉத்தரகோசமங்கை மங்களநாதசாமி கோவில் வளாகத்தில் மரகதத்திலான நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் இந்த நடராஜர் சிலை ஆருத்ரா தரிசனத்தை யொட்டி சந்தனக்காப்பு களையப்படும்.

    நாளை மறுநாள் (5-ந் தேதி) காலை 8 மணிக்கு சந்தனம் களைதலும், 9 மணிக்கு மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 1.50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி சந்தன பாக்கெட் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பக்தர்கள் சிரமமில்லாமல் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பொது தரிசனம், ரூ.10, ரூ.100, ரூ.250 என 4 பிரிவுகளாக மரத்தடுப்புகள் அமைத்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வி. ஐ, பி, வி.வி.ஐ.பி.க்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சிரமமின்றி வெளியில் செல்ல 2 புதிய பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ரூ.100, ரூ.250 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலை யில்லா சந்தனம் வழங்கப்படும். மேலும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 28 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 20 காமிரா கூடுதலாக பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் 12 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரிசையில் நீண்ட நேரமாக நிற்கும் பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் குறிப்பிட்ட இடத்திற்கே சென்று சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கிட கோவில் நிர்வாகத்தால் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்படும்.

    மதுரை, காரைக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்பட முக்கிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள புதிய கலையரங்கத்தில் வருகிற 5-ந்தேதி காலை 9 மணி முதல் 6-ந் தேதி காலை 9 மணி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 26 குழுவினர் பங்கேற்க உள்ளனர். ராமநாதபுரம் சமஸ்தா னம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் அறிவுரையின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் வட ஆரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
    • வருகிற 5-ந் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் வட ஆரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் சிறப்பு பெற்ற இந்த கோவில் நடராஜ பெருமானின் 5 சபைகளில் முதலாவதாக உள்ள ரத்தின சபையாக திகழ்கிறது.

    இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவாலங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆருத்ரா தரிசன விழா இன்று காலை 5.45 மணிக்கு மாணிக்க வாசகர் உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விழாவையொட்டி வருகிற 5-ந் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள தல விருட்சகத்தின் கீழ் அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    அதைத்தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என 41 வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.

    மறுநாள் (6-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 7-ந் தேதி காலை, 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×