search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா தொடக்கம்
    X

    திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா தொடக்கம்

    • திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் வட ஆரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
    • வருகிற 5-ந் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் வட ஆரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் சிறப்பு பெற்ற இந்த கோவில் நடராஜ பெருமானின் 5 சபைகளில் முதலாவதாக உள்ள ரத்தின சபையாக திகழ்கிறது.

    இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவாலங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆருத்ரா தரிசன விழா இன்று காலை 5.45 மணிக்கு மாணிக்க வாசகர் உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விழாவையொட்டி வருகிற 5-ந் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள தல விருட்சகத்தின் கீழ் அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    அதைத்தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என 41 வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.

    மறுநாள் (6-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 7-ந் தேதி காலை, 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×