search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியை மறந்த கணவர்"

    • சாலைக்கு திரும்பி வந்த அம்னுவாய் சாய்மூன் அங்கு காரும், தனது கணவரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் நின்ற அம்னுவாய் மிகவும் அச்சமடைந்தார்.

    தாய்லாந்தில் உள்ள மகாசரகம் மாகாணத்தை சேர்ந்தவர் பூண்டோம் சாய்மூன் (வயது 55). இவரது மனைவி அம்னுவாய் சாய்மூன் (49). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு காரில் சென்றனர்.

    அதிகாலை 3 மணியளவில் காரை சாலையோரம் நிறுத்திய பூண்டோம் சாய்மூன் சிறுநீர் கழிக்க சென்றார். அங்கு பொதுக்கழிப்பறைகள் இல்லாததால் காரில் இருந்து இறங்கிய அம்னுவாய் சாய்மூன் அங்குள்ள காட்டுப்பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். ஆனால் அவர் காரில் இருந்து இறங்குவதை பூண்டோ சாய்மூன் கவனிக்கவில்லை. அவர் காரை எடுத்து சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் சாலைக்கு திரும்பி வந்த அம்னுவாய் சாய்மூன் அங்கு காரும், தனது கணவரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் நின்ற அம்னுவாய் மிகவும் அச்சமடைந்தார்.

    அவரது செல்போனும் காரில் சிக்கி கொண்டதால் அவருக்கு உடனடியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கபின்பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தை காலை 5 மணிக்கு அடைந்தார். அங்கிருந்து போன் மூலம் கணவரை தொடர்பு கொள்ள போலீஸ் உதவியை நாடினார். ஆனால் கணவரின் செல்போன் எண்ணும் அவருக்கு நினைவில் வரவில்லை. தன்னுடைய செல்போன் எண்ணுக்கே சுமார் 20 முறை அழைத்தும் எதிர் முனையில் அழைப்பை ஏற்கவில்லை.

    ஒரு வழியாக காலை 8 மணிக்கு போலீஸ் உதவியுடன் அம்னுவாய் சாய்மூன் தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. அப்போதுதான் பூண்டோம் சாய்மூனுக்கு தனது மனைவி காரில் இல்லை என்பது தெரியவந்தது. அதுவரை அவர் தனது மனைவி காரில் பின் சீட்டில் அயர்ந்து தூங்குகிறாள் என்ற நினைப்பிலேயே இருந்துள்ளார்.

    இடைப்பட்ட நேரத்தில் அவர் அங்கிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோரத் மாகாணத்துக்கு சென்று விட்டார். பின்னர் தனது காரில் திரும்பி சென்று மனைவியை கண்டார்.

    அப்போது நடந்த செயலுக்காக அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். இப்படி ஒரு சோதனையை சந்தித்த பிறகும் அந்த பெண் தனது கணவரிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. தங்களுக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், 26 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் அந்த பெண் கூறினார்.

    ×