என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேது சமுத்திர திட்டம்"
- சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
- மதுரையில் நடந்த மாநாட்டில் தலைவர்கள் பேசினார்கள்.
மதுரை
மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு நடந்தது.
இதில் தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் அழகிரி, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. கோ.தளபதி, பூமிநாதன் மற்றும் தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீ.வீரமணி பேசியதாவது:-
சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழகம் வளம் மிக்க மாநிலமாக மாறி இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் பா.ஜ.க. பிடிவாதம் பிடிக்கிறது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டிருப்பதால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி ஈரோட்டில் பிரசாரம் தொடங்கப்படும்.
அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.பாலு எம்.பி. பேசுகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். குழந்தையை பெற்றெடுத்து ஊனமாக்கியது போல் இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் செய்கிறது.
2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாது. சேது சமுத்திர திட்டத்திற்கு மத சாயம் பூசக்கூடாது என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசினர்.
- சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
- சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
நாகப்பட்டினம்:
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதை வரவேற்று நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சட்டமன்றத்தில் பேசியதாவது, ஒன்றிய அரசின் திட்டம் என்றாலே நாம் கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தரும் நல்ல திட்டங்கள் எதையும் நாம் எதிர்த்ததில்லை என்பதற்கு சேதுக் கால்வாய் திட்டம் ஒரு சான்று. எய்ம்ஸ் இன்னொரு சான்று.
தமிழ்நாட்டிற்கு நிறைய ரயில்கள் விடப்பட வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் தான் கேட்கிறோம். ஆனால் அவர்கள் தான் தர மறுக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக நாகை திருவாரூர் மாவட்டங்கள் ரயில்வேயால் புறக்கணிக்கப்பட்டு, அதன் காரணமாக போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.
சேது சமுத்திர திட்டம் நமது கனவுத் திட்டமாகும்.
பழவேற்காடு முதல் தேங்காய்பட்டணம் வரை தமிழரின் கடல் வழி வணிகமும் துறைமுகங்களும் சிறந்து விளங்கியிருந்தன. ஆனால் இப்போது அவை எல்லாம் செயலற்றுப் போய் விட்டன.
வரலாற்றுச் சிற்ப்புமிக்க நாகப்பட்டினம் துறைமுகம் செயலற்றுக் கிடக்கிறது.
எனவே சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்குணம் மிக்கவர்.
அவர் காலத்தில் இது கட்டாயம் நிறைவேறும். விசிக சார்பில் இந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.
இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்.
- சேது சமுத்திரத் திட்டம் 4 ஏ என்றால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.
- சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயனில்லை என்றார்.
நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயனில்லை . மத்திய அரசுடன் இணைந்து புதியதாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் பா.ஜ.க. ஆதரிக்கும். இத்திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது.
ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12 சதவீதம் வருமானம் தர வேண்டும். அரசியல் காரணத்திற்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது தவறானது. சேது சமுத்திரத் திட்டம் 4 ஏ என்றால் அதை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும்
காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீ கொலையா, தற்கொலையா என்பதைச் சொல்லிவிடுவேன்.
புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
- சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய கடல்வழி போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக, பாதுகாப்பானதாக அமையும்.
- மத்திய-மாநில அரசுகள் இத்திட்டத்தினை தொடர்வதற்கும், முடிப்பதற்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய கடல்வழி போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக, பாதுகாப்பானதாக அமையும். குறிப்பாக தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக்க பயனுள்ள திட்டமாக அமையும். தற்போது இத்திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
மத்திய-மாநில அரசுகள் இத்திட்டத்தினை தொடர்வதற்கும், முடிப்பதற்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்துக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்ற தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
150 ஆண்டுகாலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டு மென்ற தீர்மானத்தை இம்மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன்.
பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேதுசமுத்திரத் திட்டம்.
இந்தியாவினுடைய முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையில் 1963ம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. 1967ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா, 'தம்பிக்கு' எழுதிய மடலில் இத்திட்டதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும். இங்கேயுள்ள மீனவர்களின் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட நாடாக மாறும்.' என்று பேரறிஞர் அண்ணா எழுதினார். இத்திட்டத்தை நிறைவேற்றித் தருவதற்கு எழுச்சி நாள் கொண்டாடுவது என்றும் அறிவித்தார்கள்.
1972-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, அன்றைய முதலமைச்சர் கலைஞர் இதனை வலியுறுத்தினார்.
தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்திப் பேசினார்.
1998-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியினை ஒதுக்கினார். பா.ஜ.க. ஆட்சியில்தான் சேது சமுத்திரத் திட்டத்துக்கான பாதை எது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2004-ம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க.வை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்த பிறகு 2,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. சார்பில் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது என்பதும், இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இத்திட்டத்துக்கு எதிராக வழக்குப் போட்டார் என்பதையும் இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞர் சுட்டிக் காட்டியதைப் போல, நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும், தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும், கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்.
சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம். வாழ்க்கைத் தரம் உயரும்.
மீனவர்களுடைய பாதுகாப்பைக் கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தினுடைய காரியங்கள் நடைபெறுகின்றன. மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதி அளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும்.
நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தினால் மிக முக்கியமாக, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். இவை எல்லாம் தான் அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் சுட்டிக்காட்டியவை.
இவை அனைத்தும் நடந்திருக்கும். நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.
தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்லி இருக்கிறது.
ஆனால் 'ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்" என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப் பாட்டுக்கு பா.ஜ.க. அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும்.
பேரவைத் தலைவரே சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தீர்மானத்தை நான் இப்பொழுது முன்மொழிகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் முன்மொழிந்த அந்த தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.
1860-ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்தி ரசிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டுகாலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும்.
இதன்வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச் சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதன் செயலாக்க ஆய்வுக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது தான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.
தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் மூலம் 2004-ம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இத்திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 2.7.2005 அன்று தொடங்கி வைத்தார்.
திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலை நிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களை செழிக்க வைக்கும் இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும் வகையில் தற்போது 'ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்' என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.
இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு-வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.
இனியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது.
இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைவரையும் கேட்டு அமைகிறேன்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீது சட்டசபையில் உள்ள அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் வரவேற்று பேசினார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர் செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.), செல்வ பெருந்தகை (காங்கிரஸ்) நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள்) ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) உள்ளிட்ட அனைவரும் இந்த தீர்மானத்தை வரவேற்று பேசினார்கள்.
சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
நயினார் நாகேந்திரன் பேசும்போது, 'ராமர் பாலத்துக்கு சேதாரம் இன்றி சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுமானால் வரவேற்கிறோம். இந்த தீர்மானத்தையும் ஆதரிக்கிறோம்' என்றார்.
இதைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியது.
- சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து அன்றைக்கு தடுத்தது.
- கருணாநிதி டெல்லிக்கு அனுப்பிய ஆயுதம் டி.ஆர்.பாலு.
சென்னை:
தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து 'பாதை மாறாப் பயணம்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகத்தில் கருணாநிதியுடன் இருப்பது போன்றும், 2-ம் பாகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் இருப்பது போன்றும் நூலின் முகப்பு படம் உள்ளது. 'பாதை மாறாப் பயணம்' நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார். இதையடுத்து, 'பாதை மாறாப் பயணம்' நூலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பாகத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், 2-ம் பாகத்தை கவிஞர் வைரமுத்துவும் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திராவிட இயக்க தலைவர்களின் வரலாறு முழுமையாக கிடைத்திருந்தால், பல அரிய தகவல்கள் மக்களுக்கு கிடைத்திருக்கும். இந்த கட்சியில் உழைக்காமல் யாரும் எந்த பொறுப்புக்கும் வந்துவிட முடியாது. டி.ஆர்.பாலு போல, கட்சியின் முன்னோடிகள், நிர்வாகிகள் உங்களது போராட்டத்தை, உங்கள் தியாகத்தை தொகுத்து நூலாக பதிவு செய்திட வேண்டும்.
இந்த 60 ஆண்டு காலத்தில் கட்சி அடைந்த உயரமும் அதிகம், சந்தித்த சரிவுகளும் அதிகம். டி.ஆர்.பாலுவுக்கும், எனக்கும் 10 வயது வித்தியாசம். இப்போது வாங்க... போங்க... என்று பேசுகிறோம். ஆனால், 'யோவ்... வாயா... வாடா... போடா...' என்று பேசிய காலமெல்லாம் உண்டு. வீட்டில் இருந்த நேரத்தை விட டி.ஆர்.பாலு அலுவலகத்தில்தான் அதிக நேரம் நான் செலவிட்டு இருக்கிறேன். மிசாவில் நான் கைதாகும்போது டி.ஆர்.பாலு போன்றவர்கள் அந்த போலீஸ் வேனை வழிமறித்து தடுத்தனர். மிசா சட்டத்தில் கைதாகும்போது கருணாநிதிக்கு கார் ஓட்டியவர்கள் கைதானார்கள். அப்போது கருணாநிதிக்கு கார் ஓட்டியவர் டி.ஆர்.பாலு. அவரும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடிபட்டு, மிதிபட்டு, ரத்தம் சிந்திய நேரத்தில் டி.ஆர்.பாலுவும் கைதாகி சிறைக்கு வந்தார். அப்போது இலைகளை பறித்து மாலையாக கோர்த்து டி.ஆர்.பாலுவை வரவேற்ற காட்சி நினைவுக்கு வருகிறது. அப்போது அலுமினிய தட்டில்தான் சாப்பாடு கிடைக்கும். ஆனால் டி.ஆர்.பாலு அதை விரும்பவில்லை. ஆனால் பசி தாங்காமல் சாப்பிட்டார். சிறையிலேயே அண்ணா, கருணாநிதி பிறந்தநாளை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடினோம். நான் கூட்டங்களில் கலந்துகொள்ள செல்லும்போது, வழிச்செலவுக்கு கிடைக்கும் பணத்தில் பாதியை டி.ஆர்.பாலுவுக்கு கொடுப்பேன். எங்கள் நட்புறவு என்றைக்கும் மாறாது.
சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு முன்னெடுத்தார். ஆனால் அதனை பா.ஜ.க.தான் தடுத்து நிறுத்தியது. சேதுசமுத்திர பகுதியில் பாலம் இருந்ததற்கான ஆதாரமே இல்லை என்று ஒன்றிய அரசில் இருக்கும் மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் இப்போது சொல்லி இருக்கிறார்.
இந்த திட்டத்தை எப்படியும் செயல்படுத்த கருணாநிதி முனைந்தபோது, அப்போதைய மத்திய அரசும் இணைந்தது. இதற்கு காரணம் டி.ஆர்.பாலுதான். ஆனால் இந்த திட்டம் தடுக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் எத்தனையோ பயன்களை தமிழகம் அடைந்திருக்கும். இந்தியாவுக்கு பெருமை கிடைத்திருக்கும். தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகியிருக்கும். கடல்சார் வணிகம் மேம்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் மெருகேறியிருக்கும்.
ஆனால் சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து அன்றைக்கு தடுத்தது. இதனை மீண்டும் டி.ஆர்.பாலு கையில் எடுக்கவேண்டும். இது அண்ணாவின், கருணாநிதியின் கனவு திட்டம். எனவே இந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்றிடும் கடமை டி.ஆர்.பாலுவுக்கு இருக்கிறது. கருணாநிதி டெல்லிக்கு அனுப்பிய ஆயுதம் டி.ஆர்.பாலு. கருணாநிதியிடமே கணையாழி பெற்றவர், டி.ஆர்.பாலு. ஒரு மாவட்ட செயலாளராக எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அடையாளம் டி.ஆர்.பாலு.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் துரைமுருகன், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸடாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, டி.ஆர்.பாலு ஏற்புரை நிகழ்த்தினார். பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தொகுத்து வழங்கினார். விழாவில், தி.மு.க. முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்