search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டுப்பொங்கல்"

    • ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது.
    • நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது. மொத்தம் 20 டன் எடை உடையது. இந்த நந்தியெம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி மாட்டுப் பொங்கலான இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலையில் நந்தியெம் பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை உள்பட பல வகையான பழங்களாலும், பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது.

    பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

    • ராதாகிருஷ்ணர் அங்கு கோக்களுடனும், கோபிகைகளுடனும் ஆனந்தமாக வசிக்கின்றார்.
    • பகவானுடைய அபிஷேகத்திற்கு பால் முதலியவைகளும், பசுக்களிடமிருந்து கிடைக்கின்றன.

    பாற்கடலில் காமதேனு தோன்றினாள்.

    அவளுடைய சந்ததி இருக்கும் லோகம் கோ லோகம் எனப்படும்.

    ராதாகிருஷ்ணர் அங்கு கோக்களுடனும், கோபிகைகளுடனும் ஆனந்தமாக வசிக்கின்றார்.

    அந்த கோக்களின் பாலினாலும், நெய்யினாலும் வேத மந்திரத்தை கூறி யாகம் செய்கின்றனர்.

    யாகத்தினால் மழையும், மழையால் உலக சேமமும் உண்டாகிறது.

    பசு காமதேனு அம்சமானதால் அதன் ஒவ்வொரு உறுப்பும் மானிடர்களுக்குப் பேருபகாரம் செய்வது மிகவும் சிறப்புடையது.

    பகவானுடைய அபிஷேகத்திற்கு பால் முதலியவைகளும், பசுக்களிடமிருந்து கிடைக்கின்றன.

    சகல தேவர்களும் பசுவின் உடலில் வந்து தங்கியுள்ளனர்.

    ஸ்ரீதேவி, பசுவின் ப்ருஷ்ட பாகத்தில் வசிப்பதால் காலையில் எழுந்தவுடன் கோவின் பின்புறத்தை தரிசிக்க வேண்டும்.

    விருந்தாளி யாரும் அகப்படாத நாளில் கோவை அதிதியாக பாவித்து அன்னமளிக்கலாம்.

    பொங்கல் தினத்தன்று மாடுகளை வில்வ இலை, வெட்டி வேர், சிவப்பு பூசணி (பறங்கி)ப்பூ, முதல் நாள் சூரிய பூஜை செய்த புஷ்பம் ஆகியவை சேர்ந்த, சிறிது பன்னீர் விட்ட நீரில் மாடு கன்றுகளைக் குளிப்பாட்ட வேண்டும்.

    கொம்புகளுக்கு வர்ணம் பூசி, குப்பி அணிவித்து, துண்டையும் கட்டி, கழுத்திலும், கால்களிலும் சலங்கை அணிவித்து, நெற்றியிலும், உடம்பிலும் சந்தனம், மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, உடம்பில் கோடி வஸ்திரம் போட்டு, கோவை பூஜை செய்ய வேண்டும்.

    மேலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து கோலமிட்டு காவி பூசி சாணத்தால் பிள்ளையார் பிடித்து கணபதியையும் தேவேந்திரனையும், சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து பூஜை செய்ய வேண்டும்.

    பசு மாடுகளை புஷ்பம் போட்டு நமஸ்கரித்து பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    பசு மாட்டுக்கு புல் கொடுக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

    ஸெளரபேய: ஸர்வ ஹிதா: ஸர்வ பாப ப்ரணாஸிந:

    ப்ரதிக்ருஹ்ணந்து மே க்ராஸம் காவ: த்ரைலோக்ய மாதர:

    • மாட்டுப் பொங்கல் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
    • சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து `கணுப்பிடி’ வைப்பார்கள்.

    பொங்கலுக்கு அடுத்த நாள், மாட்டுப் பொங்கல் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை `கணுப் பொங்கல்' என்றும் சொல்வார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து `கணுப்பிடி' என்றும் வைப்பார்கள். (முதல் நாள் தைப் பொங்கல் அன்று, பொங்கல் வைத்த பானையில் இருந்து முழுவதையும் எடுத்து விடாமல், சிறிது மீதி வைத்திருப்பார்கள். அதனை கையால் பிடித்து வைப்பார்கள்.

    அந்த காலத்தில் நதிக்கரை, குளத்தங்கரையில் அல்லது திறந்தவெளியில் செம்மண் கோலம் போட்டு, மஞ்சள் இலை அல்லது வாழை இலையை கிழக்கு நுனியாக வைத்து முதல் நாள் சாதத்தில் சிறிது மஞ்சள், குங்குமம் சேர்த்து தனியாக மஞ்சள் சாதம், சிவப்பு சாதம், வெள்ளை சாதம் என்று ஒவ்வொன்றும் ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் உருண்டை பிடித்து வைப்பார்கள். பின்னர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஆரத்தி காட்டுவார்கள்.

    பொங்கல் பானையில் இருந்த மஞ்சளை எடுத்து வயதான பெண்களிடம் கொடுத்து திருமாங்கல்யத்திலும், நெற்றியிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் பின் தான் குளித்து புதுத் துணி அணிவார்கள். இவ்வாறு செய்வதால் தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பிக்கை. காக்கை உருவில் எமதர்மராஜா வந்து இந்த உணவை சாப்பிடுவதாக ஐதீகம்.

    சகோதரர்களும் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பணமோ அல்லது துணியோ பரிசாக அனுப்பி வைப்பார்கள். மாட்டுப் பொங்கல் அன்று காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோ பூஜை செய்ய நல்ல நேரம். பொதுவாக பசு மாடு வளர்ப்பவர்கள் பசுக்கொட்டிலில் பூஜை செய்வார்கள்.

    வீட்டில் பசு இல்லாதவர்கள் பசுவை வரவழைத்து பூஜிப்பது விசேஷத்தை தரும். பசுவையும், கன்றையும் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வாசனை பூக்களால் அர்ச்சிப்பது நன்மை தரும். பசு மாட்டிற்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், கரும்பு கொடுக்க வேண்டும். இது சகல தோஷங்களையும் விலக்கும்.

    கோபூஜை முடித்த பிறகு பசுவிற்கு பொங்கலும் கொடுப்பார்கள். அன்று மாலை பசுக்களை சந்தோஷமாக வைத்திருக்க எண்ணி, அவற்றின் இஷ்டம் போல் ஓட விடுவார்கள். இதற்கு `ஸ்வச்சந்த சாரம்' என்று பெயர் .

    மாட்டுப்பொங்கல் அன்று, கிராமங்களில் ஊர் கூடி ஊருக்கு வெளியே, ஒரு பெரிய மேடான இடத்தில் கள்ளிமரச் சுள்ளிகளைக் கொண்டு மிகப்பெரிய வட்டத்தை உருவாக்குவார்கள். அதில் சிறிது எண்ணெய் சேர்ப்பார்கள். இந்த மேட்டிற்கு `திட்டாணி மேடை' என்று பெயர். இதை பாதுகாக்க ஒருவரை நியமிப்பார்கள். அவரை `திட்டாணி காவலர்' என்பார்கள்.

    பின்னர் ஊரில் உள்ள மாடுகளை அந்த வட்டத்திற்குள் கொண்டு வந்து கலச தீர்த்தத்தை அதன் மேல் சிறிது தெளித்து, அதன்பிறகு ஆவாரம் பூ, பிரண்டை ஆகியவற்றை, கோரை புல்லால் மாலையாக தயார் செய்து பசு மாடுகளுக்கு அணிவிப்பார்கள். ஒருவர் சேகண்டி அடிப்பார். ஒருவர் தீச்சட்டி எடுப்பார். ஒருவர் சங்கு ஒலிப்பார். எல்லோரும் மகிழ்ச்சியாக விசேஷமாக பாடிக்கொண்டு திட்டாணி மேடையை சுற்றி வருவார்கள்.

    அப்போதும் `பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்' என்று அனைவரும் கூறுவார்கள். இதை மாலையில் தான் ஆரம்பித்து செய்வார்கள். இரவு நீண்ட நேரம் ஆகிவிடும். அப்பொழுது திட்டாணி மேடையில் ஊர் கூடி பொதுப்பொங்கல் வைப்பார்கள். ஒரு பெரிய வாழை இலையில் பொதுப் பொங்கலை கொட்டி கற்பூரம் காட்டி பூஜை செய்வார்கள். பொங்கலை பசுமாடுகளுக்கு கொடுப்பார்கள்.

    தாங்களும் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள். பின் அனைவரும் பசு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவரவர் வீட்டு வாசலில் நிற்க வைத்து வைகோலை கொளுத்தி திருஷ்டி கழிப்பார்கள்.

    கோ பூஜை மந்திரம்

    மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்யும் போதும், பசுவை பூஜிக்கும் பொழுதும் கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி பூக்களால் அர்ச்சிக்கவும். இதில் `நம' என்று வரும் இடத்தில் 'நமஹா' என்று உச்சரிக்கவும்.

    ஓம் காமதேனவேநம

    ஓம் பயஸ்வின்யை நம

    ஓம் ஹவ்யகவ்ய நம

    ஓம் பலப்ரதாயை நம

    ஓம் வ்ருஷப பத்ன்யை நம

    ஓம் ஸௌரபேய்யை நம

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம

    ஓம் ரோஹிண்யை நம

    ஓம் ச்ருங்கிண்யை நம

    ஓம் க்ஷுரதாரிண்யை நம

    ஓம் கம்போஜஜனகாயை நம

    ஒம் பப்லஜகாயை நம

    ஓம் யவனஜனகாயை நம

    ஓம் மாஹேய்யை நம

    ஓம் நைசிக்யை நம

    ஒம் சபள்யை நம

    நானாவித பரிமள பத்ர

    புஷ்பாணி சமர்ப்பயாமி

    • புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பொங்கல் வைப்பது வழக்கம்.
    • சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழர் திருநாள் என்று பெருமையோடு அழைக்கப்படும், `பொங்கல்' விழா, தைப் பொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகையில் இருந்து தொடங்குகிறது. 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி (திங்கட்கிழமை) தைப்பொங்கல், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி (புதன்கிழமை) காணும் பொங்கல் என்று 4 நாட்கள் பெரு விழாவாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    தைப் பொங்கல்

    நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு. உத்தராயனம் என சொல்லப்படும் தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் வரையான 6 மாத காலம், தேவர்களுக்கு பகல் நேரமாகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை, தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். `உத்தரம்' என்றால் `வடக்கு', `அயனம்' என்றால் `வழி'. சூரியன் சிறிது வடக்கு நோக்கி பயணிப்பதை உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி சிறிது நகர்வதை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம்.

    புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பால் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் பண்டிகையை பற்றி, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்த பொங்கல் விழாவை, `இந்திர விழா' என்று நம் முன்னோர்கள் சிறப்பித்துள்ளனா்.

    சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் அன்று கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து வாங்கி, மஞ்சளை சிறுசிறு துண்டாக நறுக்கி, மஞ்சள் கயிற்றில் கோர்த்து, புதுப்பானையில் கட்டி, அந்தப் பானையை அலங்கரிப்பார்கள்.

    பொங்கல் பொங்கும் பொழுது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள். அதேபோல் மேற்கு பக்கம் பொங்கினால் குடும்ப விருத்தி உண்டாகும். தெற்கு பக்கம் பொங்கினால் செலவு அதிகரிக்கும். வடக்கு பக்கம் பொங்கினால் பொருள் வரவு ஏற்படும் என்றும் சொல்வார்கள். பொங்கல் பொங்கும் பொழுது 'பொங்கலோ பொங்கல்...' என்று கூறி மகிழ்வார்கள்.

    இந்த வருடம் பொங்கல் வைக்க உகந்த நேரம்:

    காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், மதியம் 12.40 மணி முதல் 1.40 மணிக்குள்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல் போன்றவை வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகா னந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்தகேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அந்த கோசாலையில் உள்ள 50 பசு மாடுகளுக்கும் கழுத்தில் பூமாலை அணிவிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகம் இட்டு கொம்பில் பட்டு துணியி னால் பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல்போன்றவை 3 மண்பானைகளில் வைத்து பெண்களால் பொங்கல்இடப்பட்டது.

    அதன்பிறகு கோசாலையின் மத்தி யில்அமைக்கப்பட்டுஇருந்த கோமாதாவுடன் கூடிய கிருஷ்ணபகவான் சிலை முன்புகாய், கனிகள் மற்றும் பழவகைகள் படைக்கப்பட்டு பொங்கல் பானைகள் வைத்து பசு மாடுகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கேந்திர துணைத் தலைவர் அனுமந்தராவ், மூத்த ஆயுட்கால ஊழியர் அங்கி ராஸ், கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்ட செயலாளர் வாசுதேவ்,

    கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிதலைவர்முத்துக் குமார், தோவாளை பஞ்சாயத்து யூனியன் தலைவி சாந்தினி பகவதியப்பன், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி செய லாளர் ஜெயகோபால், தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் வெங்கடேஷ், தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர் சங்க நிர்வாகி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் பிரசாதமான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல் போன்றவை வழங்கப்பட்டது.

    • “பொங்கலோ பொங்கல்” கூறி பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
    • குடும்பமாக நின்று சாமி கும்பிட்டு ஒன்று கூடி சாப்பிட்டு மகிழ்வார்கள்.

    கடலூர்:

    தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா தமிழக முழுவதும் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வீடுகளிலும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வீட்டில் புது பானைகள் மற்றும் வெண்கல பானைகளில் பூசையிட்டு பொங்கலிட்டு குடும்பம் சகீதமாக புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் "பொங்கலோ பொங்கல்" கூறி பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வீடுகளில் இறைச்சி மற்றும் மீன்கள் வாங்கி சமைத்து அதனை படையலிட்டு குடும்பமாக நின்று சாமி கும்பிட்டு ஒன்று கூடி சாப்பிட்டு மகிழ்வார்கள். இதனை யொட்டி இன்று காலை முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர் இதனை தொடர்ந்து இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு அணிவகுத்து நின்று வாங்கி சென்றனர்

    மேலும் பலர் மீன் வாங்கும் இடத்தில் மீன்களை ஏலம் எடுத்து ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றதையும் காண முடிந்தது இது மட்டும் இன்றி கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கோழி ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதையும் காண முடிந்தது மேலும் நாளை காணும் பொங்கல் என்பதால் தங்களுக்கு தேவையான மீன்கள் மற்றும் இறைச்சிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றதையும் காண முடிந்தது.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகம் பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு காணப்பட்டதால் மாட்டுப் பொங்கல் விழா களைக்கட்டியது. இது மட்டுமின்றி மீன் வியாபாரிகள் இன்று பொதுமக்கள் அதிகளவில் மீன்கள் வாங்குவதால் அனைத்து வகையான மீன்களையும் வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றதையும் காண முடிந்தது.

    ×