என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்னிகுவிக்"

    • கேரளாவில் ஒருசிலர் அரசியலுக்காக முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகின்றனர்.
    • பாலார்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் பொங்கல் வைத்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 182-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர்.

    தமிழக அரசின் சார்பில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கிற்கு லண்டனில் சிலை வைத்து உலகறிய செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம். கேரள அரசிடம் நட்பான முறையில் தமிழக அரசு பேசி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

    மேலும் பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். கேரளாவில் ஒருசிலர் அரசியலுக்காக முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகின்றனர். இது ஒருபோதும் நடக்காது. எந்த சூழ்நிலையிலும் அணைக்கான உரிமை மற்றும் கண்ணகி கோவிலின் உரிமையை தமிழக அரசு விட்டு கொடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.ஜக்கையன், பெரியாறு-வைகை பாசன ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ்பாபு மற்றும் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், கூடலூர் நீரிணைப் பயன்படுத்துவோர் சங்கம் நாம் தமிழர் கட்சி, பா.ஜ.கவினர், விவசாயிகள் விடுதலை முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சியினர் உள்பட ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    பாலார்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் பொங்கல் வைத்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
    • மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்ட மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்படுவதால் லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

    தேனி மாவட்டம் இயற்கை சூழல் மிகுந்ததாக உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். பசுமை மிகுந்த மாவட்டமாக என்றும் தேனி மாவட்டத்தை கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் லோகன்துரை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அ.தி.மு.க. சார்பில் ஜக்கையன், முருக்கோடை ராமர், கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்தனர்.

    பாலார்பட்டியில் பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலிகுண்டு, கிட்டி, மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் தப்பாட்டம், தேவராட்டம், கரகாட்டம், கிழவன்கிழவி, மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது.

    • விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரம் அளித்த பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது 184-வது பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
    • மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்களும் இணைந்து பொங்கல் பானை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான்பென்னிகுவிக். அவரது பிறந்தநாளான ஜனவரி 15-ந்தேதியை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி பென்னிகுவிக் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியில் அதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் ஷஜீவனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    தேனி மாவட்டம் பாலார் பட்டி கிராமத்தில் வருடம் தோறும் பென்னிகுவிக் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாளன்று ஊர் பொங்கல் வைத்து கொண்டாடுவது கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த முயற்சியில் கட்டித் தந்து 5 மாவட்டங்களுக்கு விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரம் அளித்த பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது 184-வது பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.

    பாலார் பட்டி கிராமத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தேவராட்டம், சிலம்பாட்டம் ஆடி காளை மாடுகளுடன் பென்னிகுவிக் உருவப்படத்தை சுமந்துகொண்டு பொங்கல் பானையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    அவர்களுடன் மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்களும் இணைந்து பொங்கல் பானை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து ஊரின் மையத்தில் உள்ள பென்னிகுவிக் நினைவு அரங்கம் முன்பு அனைவரும் ஒன்றாக பொங்கலிட்டு பென்னிகுவிக் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தீபாராதனை காட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    மலேசியாவில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கிராம பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இந்த கிராமத்து மக்கள் தொடர்ந்து 26 ஆண்டுகளாக பென்னிகுவிக் பிறந்தநாளில் பொங்கல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பென்னிகுவிக்கிற்கு பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் கூடி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதில் பங்கேற்ற மலேசிய தமிழர்கள் தாங்கள் இந்த அளவிற்கு மிகச் சிறப்பாக ஒரு பொங்கல் கொண்டாட்டத்தை கண்டதில்லை என்றும் பென்னிகுவிக் பற்றி தங்களுக்கு தெரியாத நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு மற்றும் அதன் வரலாறு குறித்து அறிந்து பிரமிப்பு அடைவதாக தெரிவித்தனர்.

    கிராமத்து மக்களுடைய தேவராட்டம் தங்களை கவர்ந்ததாகவும் தாங்கள் பழகி ஆட விரும்புவதாகவும் கூறினர். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்பதாக கூறி பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பென்னிகுவிக் மணிமண்டபத்தில் நடந்த பொங்கல் விழாவில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலெக்டர் ஷஜீவனா தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணி, உத்தமபாளையம் நகர்மன்ற தலைவர் பத்மாவதிலோகன்துரை, பி.ஆர்.ஓ. நல்லதம்பி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ×