என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி பட்ஜெட்"

    • பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார்.
    • பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை வெளியிட்டார். அதனை மேயர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    2025- 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,522 கோடியே 7 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. செலவினம் 1,517 கோடியே 97 லட்சம். உபரி ரூ.4 கோடியே 10 லட்சம் என நிதி குழு தலைவர் கோமதி தெரிவித்தார்.

    இதன் பின்னர் பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார். மேலும் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:-

    புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய நீராதாரம் உருவாக்குதல், நீராதாரத்திலிருந்து தலைமை சுத்திகரிப்பு நிலையம் வரை 19.83 கி.மீ. நீளத்திற்கு பிரதான குழாய்கள் அமைத்தல், 196.00 மில்லியன் லிட்டர்கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாநகர் முழுமை பகுதிக்கும் 144.028 கி.மீ. நீளத்திற்கு நீருந்து குழாய் அமைத்தல், 29 இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், 1192.331 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் ஆகியவற்றில் பெரும்பான்மையான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள்பயன்பாட்டிற்கு நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 98சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது.

    இப்பணிகள் இவ்வாண்டில் முடிக்கப்பட்டு 3 நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் 544.281 கி.மீ.நீளத்திற்கு கழிவுநீர் சேகரிக்கும் குழாய்கள் அமைத்தல், 9 கழிவு நீரேற்று நிலையங்கள் கட்டுதல், 44.086 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், 71 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுதல், 62,835 வீட்டு இணைப்புகள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 97 சதவீத பணிகள் முடிவுற்றது. இப்பணிகள் இவ்வாண்டில் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை மண்டலத்துக்கு 2 வார்டு வீதம் பரிசோதனை அடிப்படையில் வீடு தோறும் தரம் பிரித்து வழங்க ஒவ்வொரு வீட்டுக்கும், பச்சை, சிவப்பு வண்ணங்களில் இரண்டு பக்கெட்டுகளை வழங்கிட உள்ளோம். பின்பு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 249.06 கி.மீ. நீளத்திற்கு ரூ.133.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் 18.18 கோடி மதிப்பீட்டில் 26.53 கி.மீ. நீளத்திற்கு மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றியமைக்கப்படும். பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலைகள் 90.00 கி.மீ. நீளத்திற்கு ரூ.30.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளாலும், இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளால் சேதம் ஏற்பட்டுள்ள சாலைகள் ரூ.7கோடி மதிப்பீட்டில் பழுது நீக்கப்படும். அவினாசி ரோடுமேம்பாலம் முதல் நல்லாத்துப்பாளையம் கேட் தோட்டம் வரையிலான பகுதிகளில் புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, உரிய அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
    • ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு, நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியாகி உள்ள அறிவிப்புகளில் சில... 

    * சென்னை மாநகராட்சியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த திட்டம். இதற்காக மின்னணு பலகைகள் வாங்க ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் வழங்கப்படும்.

    * சென்னையில் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி நோய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.

    * மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கப்படும்.

    * சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.

    * சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து வினாடி வினாப் போட்டிகள் நடத்திட பள்ளிகளில் குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கிட பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை, 211 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    * 81 சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000-முதல் ரூபாய் 1,50,000 வரை வழங்குதல்.

    * சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

    * பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/ என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள்.

    * 29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப்பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * 26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ,கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * 50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவமாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப்பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்.

    * முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன் மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30.00 இலட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.

    • மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
    • சென்னை மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் கீழ் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.

    சென்னை:

    2023-24-ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்கிறார்.

    இதற்காக மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களிடம் பட்ஜெட் தயாரிப்பு குறித்து தனித்தனி குழுக்களாக ஆலோசித்து உள்ளனர். வருகிற 25-ந்தேதி அனைத்து குழுக்களுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.

    மேலும் மண்டல குழு தலைவர்களிடம், வார்டு வாரியாக வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யவும், புதிய திட்டங்கள், தேவைகள் குறித்து விரிவான விவரங்கள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும், புதிய திட்டங்களும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து நிலைக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் கீழ் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை, மழைநீர், மேம்பாலம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன் மூலம் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    2022-23-ம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டும்.

    ஆனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை தவிர்க்கும் வகையிலும், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டும் வரும் நிதியாண்டில் சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
    • பள்ளி நிர்வாகக்குழு கூட்டத்தின் போது பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கல்வி மேம்பாடு குறித்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து மேல் நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று ஜே.இ.இ., நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன்மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஐ.ஐ.டி., எம்.எம்.சி, எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் இலவசம்.

    இந்த கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சியே செலுத்திவிடும். இதுதொடர்பாக தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.

    உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரையும் 4 குழுக்களாக அமைத்து அக்குழுக்களுக்கு அரக்கு, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய 4 வண்ணங்களில் டீசர்ட் வழங்கப்படும்.

    இத்திட்டத்திற்கு ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் காலை இறை வணக்க கூட்டத்தை ஆங்கிலத்தில் நிகழ்த்த அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படும்.

    ஆங்கிலத்தில் பேசும் புலமையை மேம்படுத்த, தலைமை பண்பை உயர்த்த வழிவகை செய்யப்படும்.

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன், இணையதள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள் தேவைப்படும் பள்ளிகளில் அமைக்கப்படும்.

    பள்ளி நிர்வாகக்குழு கூட்டத்தின் போது பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கல்வி மேம்பாடு குறித்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    • மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ரூ.30 லட்சம் செலவில் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
    • பழுதடைந்த பள்ளிக்கட்டிடங்களை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும், செய்முறை வகுப்புகளை சிறப்பான முறையில் நடத்திட ஆய்வகங்களின் கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

    முதல் கட்டமாக வருகிற கல்வி ஆண்டில் ரூ.2 கோடி செலவில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.

    சென்னை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்கவும், அனைத்து பகுதிகளையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக அனைத்து பள்ளிகளிலும் 'பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்' அமைத்து தரப்படும்.

    மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ரூ.30 லட்சம் செலவில் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். பழுதடைந்த பள்ளிக்கட்டிடங்களை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

    சென்னை மாநகராட்சி பள்ளியுடன் இணைந்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஸ்ருதி பெட்டி, ஆர்மோனியம், தாளம் உள்ளிட்ட இசைக் கருவிகள் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 லட்சம் செலவில் அமைக்கப்படும். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் பொதுத்தேர்வு முடியும் ஏப்ரல் மாதம் வரை அவித்த சுண்டல், பயிறு வகைகள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    ×