search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்பு ஜோதி ஆசிரம வழக்கு"

    • விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
    • ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தி வந்தார்.

    இதனை அனுமதியின்றி நடத்தியதாகவும், அங்கு தங்கி உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், பலர் மாயமானது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    இதில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சுனில் குமார் மீனா தலைமையில் மோனியோ உப்பல், சந்தோஷ் குமார், பிஜூவ் ஆகியோர் அடங்கிய 4 பேர் குழுவினர் இன்று விக்கிரவாண்டி வந்தனர்.

    அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கலெக்டர் பழனி உடன் இருந்தார்.

    • ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தி கைப்பற்றிய ஆவணங்களையும் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
    • கெடார் போலீசாரிடமிருந்து ஆவணங்களை வாங்கி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவாக விசாரணை நடத்த உள்ளனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட 143 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் ஆசிரமம் குறித்த பல புகாரின் அடிப்படையில் பாலியல் மற்றும் மனநலம் பாதிக்கபட்டவர்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நிர்வாகி ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜு பின், மேலாளர் பிஜிமோன் உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நாடி முத்துவின் மனைவி பத்மா (வயது 47) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி ஆசிரமத்தில் அவரது குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.

    ஆசிரமம் பற்றிய தகவலை கேள்விப்பட்ட அவரது மகன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தனது தாயை தேடினார்.

    அங்கு தனது தாய் பத்மா இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மகன் அருண் தனது தாயை காணவில்லை என்று கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புதுச்சேரி மாநிலம் தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது அண்ணன் நடராஜனை காணவில்லை எனவும், அவரை கண்டு பிடித்து தருமாறும் போலீஸ் நிலையத்தில் மற்றொரு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஆசிரமத்தில் செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பதிவேடுகளை ஆய்வு செய்தோம். அங்கு தங்கி இருந்தவர்களுக்கு கொடுத்த மருந்துகள் குறித்தும், ஆய்வு செய்து வருகிறோம்.

    விழுப்புரம் டி.ஜ.ஜி. அறிவுறுத்தலின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆசிரமத்தில் காணாமல் போனவர் குறித்து பெங்களூர் சென்று விசாரணை செய்துள்ளோம். அங்கு 15 பேர் சென்றதற்கான பதிவேடுகள் உள்ளன. மேலும் 15 பேர் காணாமல் போனது குறித்து போலீசில் அவர்கள் புகார்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஜாபருல்லா காணாமல் போனது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தி கைப்பற்றிய ஆவணங்களையும் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

    இதற்கிடையே அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கெடார் போலீசாரிடமிருந்து ஆவணங்களை வாங்கி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி உள்ளிட்ட 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    ×