என் மலர்
நீங்கள் தேடியது "Madurai High Court தனியார் பஸ்"
- தனியார் பஸ்கள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.
- மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரை:
நாமக்கல்லை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு அனுமதி பெற்று தனியார் பஸ்சை இயக்கி வருகிறேன். எனது பஸ், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 3.24 மணிக்கு புறப்பட தமிழக அரசு போக்குவரத்து கழகம் நேரம் ஒதுக்கி உள்ளது.
இதேபோல் எனக்கு அடுத்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கரூருக்கு செல்ல வேண்டிய தனியார் பஸ் மதியம் 3.55 மணிக்கு புறப்பட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே 3.14 மணிக்கு இயக்கப்படுவதால் எனக்கும், மற்ற அரசு பஸ்களுக்கும் 17 ஆண்டுகளாக வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தனியார் பஸ்கள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு ஆவணங்களின்படி சரியாக உள்ளதால் தனியார் பஸ்களை உரிய நேரத்தில் இயக்க வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கரூரைச் சேர்ந்த மற்றொரு பஸ் உரிமையாளர் சுவாமி அப்பன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தனியார் பஸ் இயக்கும் நேரத்தை முறைப்படுத்தாத திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி கார்த்திகேயராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குறிப்பிடும் தனியார் பஸ் நேரத்தை மாற்றி முன்னதாக இயக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் திருச்சி மாவட்ட மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.