என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெகதீஷ் ஷெட்டர்"

    • எனக்கு கவா்னர் ஆகும் ஆசை இல்லை.
    • வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக மக்கள் பிரதமர் மோடியின் தலைமையை விரும்புகிறார்கள். கர்நாடகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை இருக்கும். எந்த கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான போக்கு இருப்பது சகஜம். 60 சதவீத பணிகளை செய்து முடித்தாலும், செய்ய முடியாத பணிகள் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள்.

    காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பலவீனம் அடைந்துவிட்டது. கர்நாடகத்தில் அக்கட்சியில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். மேலும் அவர் கட்சியை பலப்படுத்தி மீண்டும் ஆட்சியில் அமர வைக்க பாடுபடப்போவதாக கூறியுள்ளார். முதல்-மந்திரி வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

    எனக்கு கவா்னர் ஆகும் ஆசை இல்லை. வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். எனது அனுபவத்தை, கட்சியை பலப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கூறினேன். ஆனால் என்னை கட்சி முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மோதல் விவகாரத்தில் ஒழுங்கீனமாக செயல்படும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜனதா தளம்(எஸ்) கட்சி சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. அந்த கட்சியால் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் தான் ஏற்படுகிறது. பா.ஜனதா, காங்கிரஸ் இடையே போட்டி உள்ள தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) போட்டியிடும்போது, அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    • ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
    • தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை என ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டமாக கூறினார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பாஜக எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர், கட்சிக்கு எதிராக தேர்தலில் குதிக்க உள்ளார். மற்றவர்களுக்கு வழிவிடும்படி கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் வருத்தம் அடைந்ததாகவும், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்றும் ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.

    தற்போதைய ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றிவாகை சூடி உள்ளார். 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் நல்வாட் என்பவரைவிட 21000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், 'கடந்த 6 தேர்தல்களில் நான் 21,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய மைனஸ் பாயின்ட் என்ன? கட்சியின் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நான் ஏற்கனவே எனது தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டேன். அதை மேலும் தீவிரப்படுத்துவேன். தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை' என திட்டவட்டமாக கூறினார்.

    • டிக்கெட் வழங்கும் விஷயத்தில் இன்று வரை கட்சி மேலிடத்தின் முடிவுக்காக காத்திருப்பேன்.
    • கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை இருக்கிறதா என்பதை யோசிக்க தோன்றுகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 212 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மூத்த தலைவர்கள் பலர் கழற்றி விடப்பட்டனர். அதில் முக்கியமானவர் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் ஆவார். பா.ஜனதாவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிராகரிக்கப்படுவதன் மூலம் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு மாநிலம் முழுவதும் 20 முதல் 25 தொகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு பா.ஜனதா சார்பில் டிக்கெட் வழங்கப்படும் என்றும் நம்புகிறேன். எனக்கு டிக்கெட் வழங்கும் விஷயத்தில் நாளை(அதாவது இன்று) வரை கட்சி மேலிடத்தின் முடிவுக்காக காத்திருப்பேன். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி உள்பட 12 முக்கிய தொகுதிகளுக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பார்கள். கட்சி மேலிடத்தின் முடிவை பொறுத்து நான் எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்.

    கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை இருக்கிறதா என்பதை யோசிக்க தோன்றுகிறது. இதன்மூலம் எதிர்மறையான நிகழ்வுகள் ஏதும் நடந்து விடாமல் இருப்பதை கட்சி மேலிடம் உறுதி செய்திட வேண்டும்.

    ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்றால், அதன் தாக்கம் ஒரு தொகுதியில் மட்டும் எதிரொலிக்காது. வட கர்நாடகத்தில் குறைந்தது 20 முதல் 25 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எடியூரப்பாவே சொல்லி இருக்கிறார். ஆனால் நான்(ஜெகதீஷ் ஷெட்டர்) சொல்கிறேன், 20 முதல் 25 தொகுதிகளில் மட்டுமல்ல, கர்நாடகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    இதற்கிடையே ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் வழங்கவில்லை என்றால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர்கள் 16 பேர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 49 பேர் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் கையெழுத்திட்ட ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி உள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், 'ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் கிடைக்காததால் நாங்கள் அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளோம். நாங்கள் எடுத்த முடிவு கோபத்தில் எடுத்தது அல்ல' என்று தெரிவித்தனர். இதுபோல் கர்நாடக சட்டசபை முன்னாள் சபாநாயகரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    தனது ஆதரவாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோருடன் ஜெகதீஷ் ஷெட்டர் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கண்டிப்பாக டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    • பா.ஜனதாவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை.
    • லட்சுமண் சவதியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    பெங்களூரு :

    பெலகாவியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பா.ஜனதாவின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வந்த அவரது நிலைமை தற்போது என்ன ஆகி இருக்கிறது. ஈசுவரப்பாவின் இந்த நிலைமையை பார்த்தாலே பா.ஜனதாவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

    பா.ஜனதாவின் முதல் மற்றும் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின்பு நிறைய தலைவர்கள் சீட் கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ளனர். சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருடன் நான் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. அவர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்.

    லட்சுமண் சவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதால், பெலகாவியில் எங்களுக்கு பெரிய சக்தி கிடைத்துள்ளது. பெலகாவியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லட்சுமண் சவதியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அந்த கட்சிக்குள் மோதல் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • கர்நாடக முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர்.
    • இவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்த பெருமைக்கு உரியவர் ஜெகதீஷ் ஷெட்டர். அடுத்த மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக கட்சிக்கு எதிராக சில விஷயங்களைக் கூறி வந்துள்ளார்.

    இதனால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    கட்சியின் மூத்த தலைவரான ஷெட்டர் 6 முறை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல் மந்திரி, சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் மந்திரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என கட்சி அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே, ஜெகதீஷ் ஷெட்டர் இன்று கூறுகையில், கட்சியை சில தலைவர்கள் தவறாக கையாளுகின்றனர். கட்சி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். தனக்கு எதிராக சதி நடக்கிறது. அதனால் கட்சியில் தனக்கு சீட் வழங்கவில்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் தனது பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அதற்கான பதவி விலகல் கடிதம் ஒன்றை சபாநாயகர் விஷ்வேஷ்வர் ஹெக்டே ககேரியை சிர்சி நகரில் வைத்து இன்று நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்து உள்ளார்.

    இதையடுத்து, அவரிடம் காங்கிரசில் சேருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, நான் இன்னும் முடிவு செய்யவில்லை என பதிலளித்தார்.

    • என்னை ஏன் ஓரங்கட்டினர் என்று புரியவில்லை.
    • என்னை அவமதித்தால் வேதனைக்கு உள்ளானேன்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நடந்த விழாவில் காங்கிரசில் சேர்ந்த பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான், தற்போது காங்கிரசில் சேர்ந்தது ஏன் என்று பலருக்கும் கேள்வி எழும். ஆனால் கடந்த சில மாதங்களாக நான் அனுபவித்த வேதனையை யாரும் புரிந்துகொள்ளவில்லை. நான் பா.ஜனதா கட்சியை கட்டமைத்தேன். வட கர்நாடகத்தில் கட்சியை வளர்த்தேன். எனக்கு பா.ஜனதா வழங்கிய பதவிகளுக்கான நான் விசுவாசமிக்க தொண்டராக கட்சியை பலப்படுத்தினேன். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் நான் 6 முறை எம்.எல்.ஏ. ஆகியுள்ளேன். 7-வது முறையாக போட்டியிட உள்ளேன்.

    கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு டிக்கெட் இல்லை என்று கூறியபோது அதிர்ச்சி அடைந்தேன். மூத்த தலைவரான எனக்கு உரிய கவுரவத்தை கட்சி வழங்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றால் ஒரு வாரம் முன்னதாகவே என்னிடம் பேசி இருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

    நான் எப்போதும் ஆட்சி அதிகாரத்திற்காக அரசியல் செய்தது கிடையாது. நான் சங்பரிவாரில் இருந்து வந்தவன். என்னை ஏன் ஓரங்கட்டினர் என்று புரியவில்லை. எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. என்னை அவமதித்தால் வேதனைக்கு உள்ளானேன். எனது தொகுதி மக்களின் சுயமரியாதைக்கு அவமரியாதை ஏற்பட்டதால், நான் வேறு வழியின்றி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளின் கருத்தை கேட்டு இந்த முடிவை எடுத்தேன்.

    எனக்கு ஏற்பட்ட அவமானத்தை சரிசெய்யவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். 6 மாதம் கழித்து வேண்டுமானால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் அப்போது யாரை வேண்டுமானாலும் நிறுத்தி கொள்ளுங்கள் என்று பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் கூறினேன். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கர்நாடகத்தில் இன்று மாற்றத்திற்கான நாள் தொடங்கியுள்ளது. நான் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியை செய்வேன்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    • ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம்.
    • எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது. பா.ஜனதா மீது ஜெகதீஷ் ஷெட்டர் சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    பொதுவாக ஒருவர் கட்சியை விட்டு விலகி செல்லும்போது, இவ்வாறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கட்சி மீது சுமத்துகிறார்கள். அவரது 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கட்சி அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. அவரை ஓரங்கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் கட்சியை விட்டு சென்றுள்ளார்.

    அதனால் எங்கள் கட்சியை அவர் விமர்சித்துள்ளார். அவர் திரும்பி வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். அங்கு முதலில் வரவேற்று பாராட்டுவார்கள். அதன் பிறகு அவமதிப்பார்கள். அவரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • ஜெகதீஷ் ஷெட்டர் தனது சுயநலத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்றுவிட்டார்.
    • சட்டசபை தேர்தல் களத்தில் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம்.

    பெங்களூரு :

    உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் ஜெகதீஷ் ஷெட்டர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.

    இந்த நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா லிங்காயத் சமூக மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் நிராகரித்து அதன் மூலம் அந்த சமூகத்தை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் சொல்கிறது. உப்பள்ளி-தாா்வார் மத்திய தொகுதி பா.ஜனதாவின் பாரம்பரியமான வலுவான தொகுதி ஆகும். பா.ஜனதாவுக்கு அது பாதுகாப்பான தொகுதி. அது தொடர்ந்து அவ்வாறே இருக்கும். அதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டரின் தோல்வியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள்.

    வலுவான பா.ஜனதாவால் தான் ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். அவர் ஒன்றும் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர் கிடையாது. அவர் பா.ஜனதாவை ஏமாற்றிவிட்டு காங்கிரசுக்கு சென்றுள்ளார். இதனால் பா.ஜனதா தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் தெங்கினிகாயும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்.

    பா.ஜனதாவுக்கு லிங்காயத் சமூகத்தின் பெரிய தலைவர் எடியூரப்பா மற்றும் மந்திரி சோமண்ணா, பசனகவுடா பட்டீல் யத்னால் உள்ளிட்டோரின் ஆதரவு உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் அதே சமூகத்தை சேர்ந்தவர் தான். காங்கிரசில் சேர்ந்த லட்சுமண் சவதியால் கடந்த 2018-ம் ஆண்டு தனது தொகுதியான அதானியில் வெற்றி பெற முடியவில்லை.

    ஆனால் அவருக்கு எம்.எல்.சி. பதவி வழங்கி துணை முதல்-மந்திரி ஆக்கினோம். ஜெகதீஷ் ஷெட்டருக்கும் அனைத்து மரியாதையும் வழங்கினோம். ஆனால் அவர் தனது சுயநலத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்றுவிட்டார். சட்டசபை தேர்தல் களத்தில் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். இதனால் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

    இந்த முறை மைசூரு மண்டலத்திலும் பா.ஜனதா வெற்றி பெறும். அந்த மண்டலத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சி.டி.ரவி எம்.எல்.ஏ. போன்றோர் போட்டியிடுவதால், அது எங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். பல்வேறு வளர்ச்சி குறியீட்டில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. அதனால் இந்த தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கும். 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை நாங்கள் அடைவோம்.

    இவ்வாறு அருண்சிங் கூறினார்.

    • தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜ.க.வில் இருந்து விலகினார் ஜெகதீஷ் ஷெட்டர்.
    • பா.ஜ.க.வில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சமீபத்தில் இணைந்தார்.

    இதற்கிடையே, ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி-தர்பாத் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகா வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ஜெகதீஷ் ஷெட்டர்

    முதல் முறையாக இன்று சந்தித்தார். அப்போது தேர்தல் நிலவரம் குறித்து இருவரும் உரையாடினர்.

    • நான் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றுகிறேன்.
    • பா.ஜனதாவில் என்னை போன்ற தலைவர்களை வெளியே அனுப்புகிறார்கள்.

    உப்பள்ளி :

    கர்நாடக சட்டசபை தேர்தலிலில் போட்டியிட வாய்ப்பு நிராகரித்ததை அடுத்து சமீபத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்து, உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். உப்பள்ளியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜனதா காரணமே இல்லாமல் எனக்கு திடீரென டிக்கெட் வழங்க மறுத்தது எனது சுயமரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும் எனது தொகுதி மக்களுக்கும் அது வேதனையை ஏற்படுத்தியது. எனக்கு மந்திரி பதவியோ அல்லது முதல்-மந்திரி பதவியோ வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் இதை பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. அதனால் பா.ஜனதாவில் இருந்து விலகினேன்.

    நான் தேசிய கட்சியில் இருந்தவன் என்பதால் இன்னொரு தேசிய கட்சியான காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று காங்கிரசில் கேட்டு கொண்டேன். தற்போது காங்கிரசார் எனக்கு அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளிக்கிறார்கள். நான் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றுகிறேன். சமத்துவம், நல்லிணக்க கொள்கைகளை பின்பற்றுகிறவர்களுக்கு எந்த கட்சியிலும் பிரச்சினை ஏற்படாது.

    ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரசில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை வரவேற்றது. அப்போது அந்த கட்சியில் கொள்கை எங்கே போனது?. நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவன் என்றாலும், காங்கிரசில் இருப்பதால் எனக்கு எந்த இக்கட்டான நிலையை ஏற்படவில்லை. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மீது எனக்கு மரியாதை உள்ளது.

    ஆனால் கர்நாடக பா.ஜனதா பி.எல்.சந்தோஷ் என்ற ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் மீண்டும் பா.ஜனதாவில் சேருவது என்பது முடிந்துபோன அத்தியாயம். பிரதமர் மோடியே அழைத்தாலும் நான் மீண்டும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன். இந்த பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்து நடந்து முடிந்த கடைசி சட்டசபை கூட்டத்தொடரில் பேசினேன். மதவாதம் குறித்த விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

    பா.ஜனதாவில் என்னை போன்ற தலைவர்களை வெளியே அனுப்புகிறார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகார நாற்காலியில் அமர சிலர் முயற்சி செய்கிறார்கள். 25 முதல் 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதாக லிங்காயத் சமூகத்தினர் கூறியுள்ளனர். இது பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    • எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர்.
    • எடியூரப்பா எனக்கு டிக்கெட் கிடைக்க கடைசி வரை போராடினார்.

    உப்பள்ளி :

    உப்பள்ளி டவுனில் நேற்று உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு லிங்காயத் தலைவரை ஒழிக்க இன்னொரு லிங்காயத் தலைவர் முதுகில் துப்பாக்கி வைத்து மிரட்டும் வேலையை பா.ஜனதா தற்போது செய்து வருகிறது. இவ்வாறு எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர். பா.ஜனதா சமுதாயத்தில் பிரிவினையை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.

    எனக்கு பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு பி.எல்.சந்தோஷ் தான் காரணம் என்றேன். இதுவரை அவர் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் வேறொருவர் மூலம் என்னை விமர்சிக்க வைக்கிறார். போர் என்றால் அவர் என்னுடன் நேருக்குநேர் மோத வரட்டும்.

    எடியூரப்பா எனக்கு டிக்கெட் கிடைக்க கடைசி வரை போராடினார். எனக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சிக்கு பாதிப்பு வரும் என கூறினார். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் பற்றி நான் ஒரு போதும் தவறாக பேசவில்லை. இதை எடியூரப்பா புரிந்துகொள்ள வேண்டும். உப்பள்ளியில் 50-60 உறுப்பினர்களை கூட்டி எடியூரப்பா என்னை விமர்சித்துள்ளார். அதை நான் ஆசீர்வாதமாக தான் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் நான் இந்த அளவுக்கு வளர்வதற்கு அவரும் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    • கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடக்கிறது.

    உப்பள்ளி

    பா.ஜனதா மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் தனக்கு டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை வீழ்த்த பா.ஜனதா தலைவர்கள் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் துரோகி என்றும், எனது ரத்தத்தில் எழுதுகிறேன் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைவார் என்றும் கூறியிருந்தார். இது பெரும் விவாதப்பொருளாகி வருகிறது.

    இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டரான மஞ்சுநாத் என்.யந்துருவி, ஜெகதீஷ் ஷெட்டர் மீதான அபிமானத்தில் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் வெற்றி பெறுவார் என ரத்தத்தில் எழுகிறேன். இந்த முறை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும். ஜெய் காங்கிரஸ் என குறிப்பிட்டுள்ளார்.

    ×