search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினோத திருவிழா"

    • பாரம்பரிய வினோத காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • காளைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் 350-கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

    இங்கு 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரிய வினோத காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    கடந்த 48 நாட்களுக்கு முன்பு இருந்து அப்பகுதி மக்கள் காளியம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி ஊர் சீதனம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வழிப்பட்டனர்.

    மேலும் தொடந்து, மலைவாழ் மக்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த 'ஜாலாமரம்' என்றழைக்கப்படும் மரம், முன்னோர்கள் வைத்து வழிபட்டு வந்த கயிறு, மரக்கட்டையாலான கத்திகள், தோலால் செய்யப்பட்ட மேளம் வைத்து ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஒரு வாரமாக பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் 12 கிராமங்களின் பாரம்பரிய திருவிழாவான எருது கட்டும் திருவிழா தொங்குமலை கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக, சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகளை அங்கு அமைக்கப்பட்டிருந்த 4 பெரிய மந்தையில் அடைத்து வைத்திருந்தனர்.

    பின்னர், 12 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஊர் பெரியோர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாரம்பரிய முறையில் மந்தையில் அடைத்து வைத்திருந்த காளைகளை ஒவ்வொன்றாக கயிறுகட்டி மைதானத்திற்கு அழைத்து வந்து காளைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

    இந்த விழாவினைக் காண பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டு, கட்டியப்பட்டு, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, எல்லுப்பாறை உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

    ஆண்களுக்காக 5 நாள் ஒதுக்கப்பட்டு பெண்களுக்கு என்று கடைசியாக ஒரு நாள் திருவிழா நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவின் மங்கையர்களுக்காக கொடுக்கப்படும் மகத்துவமான மரியாதை என கூறி வருகின்றனர்.

    இன்று நடைபெறும் பெண்களுக்கான திருவிழாவில் ஆண்கள் யாரும் பங்கேற்க கூடாது அப்படி பங்கேற்றால் சாமி அவர்களை சும்மா விடாது என்று, அருள் வந்து ஆடிடும் பெண்கள் ஆண்களை ஓட ஓட விரட்டி அடிப்பது இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

    • ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரம் 1000 ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோவிலில் இருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சடையாண்டி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதன் பின் சுவாமி பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து சடையாண்டி கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்டஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. நள்ளிரவில் சடையாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழாவில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடந்தது.

    இந்த அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இந்த வினோத திருவிழாவை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    • தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் மாளவாள் எனப்படும் குடிபாட்டுகாரர்களுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ தங்கவேல் சாமி, நாகம்மாள் சாமி கோவில்கள் உள்ளன.
    • திருவிழா கடந்த 1980 -ம் ஆண்டும் அதன் பிறகு 1999 -ம் ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பரளி பஞ்சாயத்துக்குட்பட்ட நல்லையம்பட்டியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் மாளவாள் எனப்படும் குடிபாட்டுகாரர்களுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ தங்கவேல் சாமி, நாகம்மாள் சாமி கோவில்கள் உள்ளன.

    இந்த கோவிலில் விழா நாளன்று சாமி நீராட கோவில் முன்பு சிறிது குழி தோண்டினாலே தண்ணீர் வெளியே வரும். அந்த தண்ணீரை எடுத்து சாமியை நீராட செய்து வழிபடுவது வழக்கம். திருவிழா கடந்த 1980 -ம் ஆண்டும் அதன் பிறகு 1999 -ம் ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    அதே போல் இந்த ஆண்டும் அக்கோவிலுக்கு சொந்தமான குடிபாட்டுக்காரர்கள் ஒன்று கூடி ராசிபுரம் அருகே உள்ள அப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ரங்கநாதர் கோவிலில் சேர்வை கட்டி மேளம் தாளம் முழங்க குடிப்பாட்டுக்காரர்கள் உள்ள அனைத்து ஊர்களுக்கும் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். சேர்வையில் உள்ள சாமியின் பாதம் வீடுகளின் வாசலில் பட்டால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் தொட்டி நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த அனைத்து ஊர்களிலும் சேவைக்கு பூஜைகள் செய்து நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

    முதல் நாள் பச்சை பூஜை எனப்படும் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபடுவார்கள். இரண்டாம் நாள் அன்று சாமி நீராட கோவில் முன்பு சிறிது குழி தோண்டினாலே தண்ணீர் வந்து அந்த தண்ணீரை எடுத்து சாமிக்கு அபிசேகம் செய்யும் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 3-ம் நாள் மஞ்சுவிரட்டு நடைபெறும். சாமி நீராட குழி தோண்டி அதனில் தண்ணீர் எடுத்து சாமியே நீராட செய்யும் வினோத திருவிழாவை தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மட்டுமின்றி சுற்றுவட்டார அனைத்து சமுதாயத்தினரும் கண்டுகளிப்பதுடன் சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    ×