search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்3என்2 வைரஸ்"

    • பொது இடங்களுக்கு செல்வதையும், குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
    • இருமல் நீர்த்துளிகள் காற்றில் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 'இன்புளூயன்சா' வைரஸ் காய்ச்சல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    3 வகையான இந்த வைரசால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பருவமழை காலத்தில் வழக்கமாக இருக்கக்கூடிய இந்த காய்ச்சல் இந்த ஆண்டு குளிர்காலம் கடந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி வருவதால் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்றவற்றால் குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த வைரசை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுக்கு இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

    மத்திய சுகாதாரத்துறை புதிய வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ள நிலையில் அதனை பின்பற்ற தமிழக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

    இந்த வகை வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும், குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    இருமல் நீர்த்துளிகள் காற்றில் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 அடுக்கு முகக்கவசம் அணிவது நல்லது. மருத்துவமனையில் இருப்பவர்களும், மருத்துவ ஊழியர்களும் அத்தகைய முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும். சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்கள் இவ்வகை முகக்கவசத்தை அணிய அறிவுறுத்தப்படுகிறது.

    மருத்துவ பணியில் ஈடுபடும் அனைவரும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பரிசோதனை கூடங்களில் பணிபுரிவோர், மருத்துவம் சாரா பணியாளர்கள் பாதுகாப்பாக இதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது இலையுதிர் காலம் முடிந்து கோடை காலத்திற்குள் பிரவேசிக்க இருப்பதால் வெப்ப அலை பருவ நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முன்எச்சரிக்கை நட வடிக்கையை மேற்கொள்ள சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களையும் உஷார்படுத்தி உள்ளது.

    வெப்ப அலை தாக்கத்தால் குழந்தைகள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். உடல் வெப்பம் தொடர்பான நோய் பாதிப்பு இந்த பருவகாலத்தில் ஏற்படக்கூடும் என்பதால் நீர் சத்து உள்ள உணவுகள், பழங்களை அதிகம் சேர்க்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

    • புதிய வகை வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்த தொற்று பரவல் குறித்து பதற்றம் வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
    • தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்புளூயன்சா துணை வகை வைரசான எச்3என்2 பரவி வருகிறது. கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 450-க்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

    இதில் கர்நாடகா மற்றும் அரியானாவை சேர்ந்த தலா ஒருவர் சமீபத்தில் உயிரிழந்து உள்ளனர்.

    இது மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் மற்றுமொரு கொரோனா தாக்குதலாக இருக்குமோ? என அவர்கள் பதற்றமடைந்து வருகின்றனர்.

    ஆனால் இந்த புதிய வகை வைரஸ் குறித்து பதற்றமடைய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    அந்தவகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்னணி டாக்டர்களில் ஒருவரான தருண் சகானி கூறுகையில், 'இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் தேவை எழவில்லை. வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே தங்கி சிகிச்சை பெறுகின்றனர். எனவே பதற்றம் தேவையில்லை. கொரோனா காலத்தில் கடைப்பிடித்தது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும்' என்றார்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் இத்தகைய தொற்று பரவல் இயற்கைதான் எனக்கூறிய அவர், என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

    மற்றொரு டாக்டர் அகர்வால் கூறுகையில், 'காய்ச்சலுக்கான பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசிகள் இருப்பதால், ஒரு பெரிய அலையை நான் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் அனைத்துவிதமான தொற்று பரவலும், இறப்புகளும் கவலைக்குரியவைதான்' என தெரிவித்தார்.

    இந்த எச்3என்2 வைரஸ் பன்றிகள் மற்றும் தொற்றுக்கு ஆளானவர்கள் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு பிற புளூ வைரஸ் பாதிப்புகள் போல காய்ச்சல், சுவாச கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதேநேரம் உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளும் ஏற்படுகின்றன.

    இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    • நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் நடந்த பரிசோதனையில் 3 ஆயிரத்து 38 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • எச்3என்2 வைரஸ் உள்பட சிலவகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதம் 1245 பேருக்கும், பிப்ரவரி மாதம் 1307 பேருக்கும், இந்த மாதம் 9-ந்தேதி வரை 486 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மக்களை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

    சாதாரண பருவநிலை காய்ச்சலாக இருந்தாலும் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் குழந்தைகளையும், முதியவர்களையும் உயிரிழக்கும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது.

    இந்த காய்ச்சலுக்கு கர்நாடகா, அரியானா மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 2 பேர் இறந்து இருக்கிறார்கள். எனவே அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத்துறை உஷார்படுத்தி இருக்கிறது.

    சுகாதாரத்துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் நடந்த பரிசோதனையில் 3 ஆயிரத்து 38 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்3என்2 வைரஸ் உள்பட சிலவகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதம் 1245 பேருக்கும், பிப்ரவரி மாதம் 1307 பேருக்கும், இந்த மாதம் 9-ந்தேதி வரை 486 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    ஆண்டுதோறும் பருவ கால வைரஸ் காய்ச்சல் இரண்டு கட்டங்களாக பரவும். அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான பருவ காலத்தில் ஒரு பகுதியாகவும் அதன்பிறகு ஒரு பகுதியாகவும் பரவும்.

    தற்போது பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் இந்த மாத இறுதியில் குறைய தொடங்கும்.

    எச்3என்2 வைரசை தவிர எச்1என்1 வைரசும் அதிக அளவில் பரவி வருகிறது. இது மிக அதிகமாக தமிழ்நாட்டில் பரவி இருக்கிறது. இதுவரை 545 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் 170 பேருக்கும், குஜராத்தில் 74 பேருக்கும், கேரளாவில் 42 பேருக்கும், பஞ்சாபில் 28 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எச்1என்1 காய்ச்சலுக்கு ஆசெல்டாமிவிர் (Oseltamivir) என்ற மருந்தை உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது. இதே மருந்தை எச்3என்2 காய்ச்சலுக்கும் கொடுக்கலாம்.

    இந்தியாவில் இந்த மருந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தேவையான அளவு கையிருப்பிலும் உள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பெங்களூருவில் புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
    • வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பெங்களூரு:

    இந்தியாவில் 'எச்3.என்.2' என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வைரசின் முக்கிய அறிகுறிகள் ஒன்று, நீண்ட நாட்களுக்கு இருமல் இருக்கும் என்று சொல்கிறார்கள். அத்துடன் காய்ச்சலும் இருக்கும்.

    'எச்3.என்2.' வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகத்திலும் இந்த வைரசின் பரவல் அதிகரித்து உள்ளது.

    பெங்களூருவில் இந்த புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று கர்நாடகத்தில் 95 பேருக்கும், அதில் பெங்களூரு நகரில் மட்டும் 79 பேருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாட்களுக்கு பிறகு பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இது அரசுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 291 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

    'எச்3.என்2.' வைரஸ் மற்றும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கர்நாடக அரசு சுகாதரத்துறை சார்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ×