search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி ஏழுமலையான் கோவில்"

    • மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம்.
    • திருப்பதியில் நேற்று 63,987 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு, குழு உறுப்பினர்கள் 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு கூறியதாவது:-

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட தற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண், மந்திரி லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறங்காவலர் குழு தலைவராக வேலை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்.

    கடந்த ஆட்சி காலத்தை போல் அல்லாமல் வெளிப்படை தன்மையாகவும் உண்மையாகவும் பாடுபடுவேன்.

    தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.

    தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்புவதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

    மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். இருப்பினும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 63,987 பேர் தரிசனம் செய்தனர். 20,902 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா.
    • கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 2-இரண்டாவது நாளான நேற்று காலை ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். நேற்று மாலை திடீரென 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்து அவதி அடைந்தனர். நேற்று இரவு ஏழுமலையான் வீணையை ஏந்தியபடி சரஸ்வதி அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    இன்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் ஏழுமலையானுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடன கலைஞர்கள் சாமி ஊர்வலத்தில் முன்பாக கண்ணைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 75 552 பேர் தரிசனம் செய்தனர் 35 885 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரிய கெங்கையம்மன் கோவில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது.
    • இறுதி தரிசனமும் கோபாலன் வாரிசுகளுக்கு தான்.

    பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது. திருமகள் கோபித்துக்கொண்டு பூமிக்கு வந்துவிட்டார். பின்னாலேயே பெருமாளும் வந்து அவரைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் லட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தவம் செய்தார்.

    நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட்டது. அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவர் தன்னுடைய பசுவைக்கொண்டு தினசரி அந்த புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை முதலில் தரிசனம் செய்யும் வரம் அளித்தார்.


    பெருமாளின் இந்த அருளால் கோபாலன் என்பவர் பரம்பரையில் வந்தவர்கள் தினமும் திருமலையில் முதலில் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.

    மூலஸ்தான நடை திறந்தவுடன் பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத்தான் கிடைக்கிறது. பின் இவர்கள் அர்ச்சகர்களின் வீடுகளுக்கு சென்று பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே அர்ச்சகர்கள் கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர்.


    இரவில் ஏகாந்த சேவை முடிந்தபின் பெருமாளின் அன்றைய இறுதி தரிசனமும் கோபாலன் வாரிசுகளுக்கு கிடைத்த பின் தான் நடை அடைக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
    • கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார்.

    திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது. தாயார் சன்னதி கூட கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.

    திருமலையின் ஆதிமூர்த்தியான வராக சாமி தெப்ப குளக்கரையில்தான் இருக்கிறார். ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே. திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    ராமானுஜர் 1017-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். 1137-ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார். திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுjஅர் தான்.


    அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவ கோவிலா? வைணவ கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

    ராமானுஜர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.

    ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார்.

    ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது.

    இன்றும் அங்கு 'ராமானுஜர் வீதி' இருக்கிறது. கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது 'ராமானுஜர் நந்தவனம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

    ஏழுமலை ஏறி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார். அதுவே 'ராமானுஜக் கூடம் ஆனது'. இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே 'சமபந்தி' சாப்பாட்டை ராமானுஜர் தொடங்கி வைத்து விட்டார்.

    ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுஜரே!


    ஏழுமலையானுக்கு பச்சை கற்பூர நாமம் சாத்தவும் ராமானுஜரே ஏற்பாடு செய்தார். சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.

    இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூஜையையும் ராமானுஜர் வகுத்துக் கொடுத்தார்.

    மலை அடிவாரத்தில் கீழ் திருப்பதி ஊரையும் உருவாக்கினார். இப்படி ஏழுமலையான் கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுஜர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.

    ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.

    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    • தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் நீராடுவார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 65,874 பேர் தரிசனம் செய்தனர். 23,782 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் மாதம் 4-ந்தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாள் அங்குள்ள தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் நீராடுவார்கள்.

    வருகிற 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை குளத்தை தூய்மைப்படுத்துதல், குளத்தில் உள்ள சேற்றை அகற்றுதல், குழாய்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ஒரு மாதத்திற்கு கோவில் தெப்பக்குளம் மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வேதப் பண்டிதர்கள் மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.
    • தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, அர்ச்சனை செய்யப்பட்டது. கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

     அப்போது வேதப் பண்டிதர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்தனர். புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.

    அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராமர், சிறப்பு அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதிகாலை சுப்ரபாதம், மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை திருப்பதியில் உள்ள பெரிய ஜீயர் சுவாமி மடத்தில் இருந்து அர்ச்சகர்கள் பட்டு வஸ்திரங்களை எடுத்து வந்து விமான பிரதட்சணம் செய்து மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சமர்ப்பித்தனர்.

    அதன்பிறகு ராமர் ஜென்ம புராணம், ஆஸ்தான நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 7 மணியில் 9 மணி வரை உற்சவர் ராமச்சந்திரமூர்த்தி தனது பிரியமான அனுமன் வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது. கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடக்கிறது. இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசல் அருகில் ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

    திருப்பதி கோவிலில் நேற்று 67 ஆயிரத்து 294 பேர் சாமி தரிசனம் செய்தனர். 22,765 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் வருகிற 22-ந்தேதியும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் 23-ந்தேதியும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் 23-ந்தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    • பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர்.
    • பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி உகாதி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி, விஷ்வக்சேனர் விசேஷ சமர்ப்பணம் செய்தனர். பின்னர் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர்.

    தங்க வாசலில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களை கொண்டு வந்தனர். உற்சவர்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் விஷ்வக்சேனரை கொண்டு வந்தனர். அதன்பின் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு புது வஸ்திரம் அணிவித்தனர்.

    அதன்பின் பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது. தங்கவாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர். இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி, முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பதி லட்டு பிரசாதமாக கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா?
    • பல்லவர் ஆட்சியில் பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கும் திட்டம் தொடங்கியது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா?

    கி.பி.830-ம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர் ஆட்சியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல பல நாட்கள் ஆகும்.

    தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்த பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீட்டுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதனால், முதலில் திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னால், கி.பி.1445-ம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455-ம் ஆண்டு அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460-ம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468-ம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547-ம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.

    1803-ம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது. 1940-ம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.

    ஆரம்பத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு ஒன்று எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. இதுதவிர, கல்யாண உற்சவ லட்டு, கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

    • ரத சப்தமி விழா வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    திருப்பதி:

    ரத சப்தமியையொட்டி தேவஸ்தானம் சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன்படி 4 மாட வீதிகளில் வண்ணம் தீட்டுதல், திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்துதல், பூங்காக்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை. சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், முத்து பந்தல் வாகனம், தங்க கருட சேவை உள்ளிட்ட 7 வாகனங்களில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    4 மாடவீதிகளில் ஏழுமலையான் உலா வரும்போது முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    வருகிற 16-ந் தேதி திருச்சானூரிலும் ரதசப்தமி விழா நடைபெற உள்ளதால் திருப்பதி, திருப்பதி மலை ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத சப்தமி விழாவிற்காக திருப்பதியிலும், திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சிபாரிசு கடிதம் கொண்டு வருவோருக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்.
    • தரிசன டிக்கெட் செல்போனில் வந்துவிடும்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருவோருக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது.

    இவர்கள் திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி (ஜே.இ.ஓ.) அலுவலகம் சென்று, சிபாரிசு கடிதத்துடன் தங்களின் ஆதார் விவரத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு அன்று மாலை 4 மணிக்கு பிறகு செல்போனில் குறுஞ்செய்தி வரும். இவர்கள் திருமலையில் உள்ள எம்.பி.சி.-34 எனும் இடத்திற்கு சென்று, அந்த குறுந்தகவலை காண்பித்து மறுநாள் காலை தரிசனத்துக்கான வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை பணம் செலுத்தி பெறவேண்டும்.

    இந்த முறையில், மறுநாள் காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், முந்தைய நாள் இரவு எம்.பி.சி.-34 கட்டிடத்தின் அருகே நூற்றுக்கணக்கில் காத்திருப்பார்கள். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெறவேண்டி இருக்கும்.

    சில நேரங்களில் சிபாரிசு கடிதம் கூட ரத்தாகி, டிக்கெட்டுக்கான குறுஞ்செய்தி வராமல் போவதும் உண்டு. இதைக்கூட அறிந்து கொள்ள முடியாமல் பலர் திருமலையிலேயே காத்திருப்பது வழக்கம்.

    இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை தேவஸ்தானம் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி அமல்படுத்தி உள்ளது.

    அதாவது, திருமலையில் சிபாரிசு கடிதத்தை, ஆதாருடன் விண்ணப்பித்த பக்தர்கள் டிக்கெட்டுக்காக அன்று இரவு வரை காத்திருக்க தேவையில்லை. சிபாரிசு கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு மாலை 4 மணிக்குபிறகு செல்போனில் குறுஞ்செய்தியும், டிக்கெட் தொகையை செலுத்துவதற்காக பே லிங்க்கும் வரும்.

    இதன் மூலம் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தினால், உடனே தரிசன டிக்கெட் செல்போனில் வந்துவிடும். இதை வைத்து மறுநாள் காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு பக்தர்கள் செல்லலாம். இந்த புதிய திட்டத்துக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    • ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் ‘தண்ணீரமுது’ உற்சவம் நடந்தது.
    • நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. ஆகாசகங்கை தீர்த்தத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாள் `ஆத்யாயன உற்சவம்' கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்கியது.

    அதையொட்டி தினமும் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்துக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து ஜீயர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

    உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. இந்தத் தண்ணீரமுது உற்சவம் நடப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ராமானுஜரின் தாய் மாமனான பெரிய திருமலைநம்பி ஆவார்.

    இவர், திருப்பதி ஏழுமலையானுக்கு செய்த சேவையின் நினைவாக ஆண்டுதோறும் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில், `தண்ணீரமுது' உற்சவம் நடத்தப்படுகிறது.

    முன்னதாக நேற்று முன்தினம் மாலை கோவிலில் நடந்த சஹஸ்ர தீபலங்காரச் சேவைக்குப் பின், உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    பெரிய திருமலைநம்பி வம்சத்தினர் கோவில் பிரகாரத்தில் ஒரு குடத்தில் பிடித்த 'ஆகாச கங்கை' தீர்த்தத்தை தலையின் மேல் வைத்து மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க வாகன மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர்.

    அங்கிருந்து பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள், ஆச்சாரியார்கள், பிரபந்த பண்டிதர்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட தீர்த்த குடத்தை கோவிலுக்குக் கொண்டு சென்றனர்.

    வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க கோவில் அர்ச்சகர்கள் மூலவர் ஏழுமலையானுக்கு குடத்தில் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கை புனிதத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர். உற்சவத்தில் பங்கேற்றவர்கள் பெரிய திருமலைநம்பி எழுதிய 'திருமொழி பாசுரங்களை' பாராயணம் செய்தனர். உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆத்யாயன உற்சவம் முடிந்ததும் மறுநாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள பெரிய திருமலைநம்பி சன்னதிக்கு எழுந்தருளினர்.

    ×