search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மோசடி"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
    • இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அலங்காநல்லூர்:

    சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்தில் ராம்பாலாஜி பங்கேற்றார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த வித்யாஸ்ரீ (31) என்ற பெண்ணிடம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

    தானும் கணவருடன் விவாகரத்து பெற்று 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக ராம் பாலாஜியிடம், வித்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நாம் இருவரும் 2-வது திருமணம் செய்து கொள்ளலாம் என வித்யாஸ்ரீ, ராம்பாலாஜியுடன் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்தார். இதை பயன்படுத்தி அவரிடம் வித்யாஸ்ரீ அவ்வப்போது பணம் கேட்டுள்ளார்.

    இதன் காரணமாக ராம்பாலாஜி, வித்யாஸ்ரீயின் வங்கி கணக்கில் சிறிது சிறிதாக ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் நேரில் சந்திக்கும்போது வித்யாஸ்ரீக்கு நகைகளையும் கொடுத்துள்ளார்.

    பின்னர் திருமணம் குறித்து பேசும்போது வித்யாஸ்ரீ காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வித்யாஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விசாரித்த போது வித்யாஸ்ரீ வாடகை வீட்டையும் காலி செய்து தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனால் ராம் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னிடம் ரூ. 50 லட்சம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்த வித்யாஸ்ரீ குறித்து அலங்காநல்லூர் போலீசில் ராம்பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரூ.50 லட்சம், நகை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அஜித் குமாரும் இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    ×