என் மலர்
நீங்கள் தேடியது "இன்புளூயன்சா வைரஸ்"
- பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
- நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 6-ந் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிகிறது.
அதன்பிறகு 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஏப்ரல் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தற்போது நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் தகுந்த பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பல்வேறு மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த வைரஸ் காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என்பதால் தெலுங்கானா மாநிலத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன.
எனவே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்திருப்பதாலும் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வதாலும், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது. 24-ந் தேதி தொடங்க இருந்த தேர்வை ஒருவாரத்துக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 17-ந் தேதியே தொடங்கி 24-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மற்றும் இன்புளூயன்சா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
- கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் தமிழக அரசு அதிகாரிகள் விளக்கி கூறுகிறார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் குறைந்திருந்த நிலையில் இப்போது மீண்டும் கொரோனா பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான வழிமுறைகளை அறிவித்து உள்ளது.
பொது சுகாதாரத்துறையின் மரபணு பகுப்பாய்வில் தற்போது அதிகமாக பரவி வருவது எக்ஸ்பிபி மற்றும் பிஏ-2 வகை தொற்றுதான் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் இந்த வைரஸ் வேகமாக பரவுவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மற்றும் இன்புளூயன்சா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
டெல்லியில் இருந்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெறும் இந்த காணொலி ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உள்பட மருத்துவ துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
மாநிலத்தின் கொரோனா பாதிப்பு விகிதம் மற்றும் அதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் தமிழக அரசு அதிகாரிகள் விளக்கி கூறுவார்கள் என தெரிகிறது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார். மாநில பொது சுகாதாரத்துறை வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் வகையை அறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவுகளின்படி பார்க்கும் போது தற்போது அச்சப்படும் சூழல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் ஏராளமானோருக்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் 3 நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.

இந்த காய்ச்சல் எதனால் வருகிறது என்று மருத்துவர்கள் ஆராய்ந்த போது 75 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் காரணமாக காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பலருக்கு இன்புளூயன்சா ஏ வைரஸ் காரணமாகவும், சிலருக்கு இன்புளூயன்சா பி வைரஸ் காரணமாகவும் காய்ச்சல் பரவி உள்ளது. இன்னும் சிலருக்கு டெங்கு காய்ச்சலும் பரவி இருப்பது தெரியவந்து உள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும் சிலருக்கு அடினோவைரஸ் மற்றும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் பிற வைரஸ் தொற்றுகளும் பரவி இருப்பதை மாநில பொது சுகாதார ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
பருவமழை தமிழகம் முழுவதும் தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. சென்னையிலும் அதிகம்பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்பட்டு காய்ச்சல் ஏற்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற தொற்று நோய்கள் ஏற்படுகிறது.
குழந்தைகள் பள்ளி அல்லது பயிற்சி மையங்களுக்கு செல்லும் போது தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவுகிறது. நாங்கள் காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரைக்கிறோம். குழந்தைகளுக்கு இருமல் சிரப் சிறிய அளவில் நிவாரணம் தருகிறது.

பெரும்பாலானவர்கள் தொற்று நோய் அறிகுறிகளுக்கு மருந்து சாப்பிடாததால் தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அதனால் அவர்களுக்கு தடுப்பு ஊசிகளை எடுக்க நாங்கள் அறிவுறுத்துகிறோம். கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் முககவசம் அணிய வேண்டும்.
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இருமல், தும்மல் அல்லது பேசும்போது இந்த வைரஸ், சுவாச துளிகள் மூலம் பரவுகிறது. முககவசம் அணிவதால் தொற்று பரவுவது குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.