search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில மோசடி வழக்கு"

    • தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
    • எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    சென்னை:

    கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரது சகோதரர் சேகர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.
    • நில மோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரைச் சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.

    இந்நிலையில், நிலமோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. நான்காவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    ஏற்கனவே பிப்ரவரி 24-ம், மார்ச் 4, 11 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி 3 சம்மன்களைத் தவிர்த்த நிலையில், தற்போது 4-வது முறையாக மார்ச் 25-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

    ×