search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேப்பாக்கம் மைதானம்"

    • பும்ரா 3 விக்கெட்டு வீழ்த்தியுள்ளார்.
    • அர்ஷ் தீப், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ரா மற்றும் அர்ஷ் தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்திருந்தது. ஷன்டோ 15 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முஷ்பிகுர் ரஹிம் மேலும் 4 ரன்கள் அடித்து 8 ரன்னில் ஆட்டிழந்தார். அதேவேளையில் ஷன்டோ 20 ரன்கள் எடுத்த நிழைலயில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 40 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. வங்கதேச அணியின் ஸ்கோர் 91 ரன்னாக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. லிட்டன் தாஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த உடனேயே, வங்கதேச ஸ்கோர் 92 ஆக இருந்தபோது ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விழுந்தார்.

    இதனால் வங்கதேசம் 2-வது நாள் மதிய தேநீர் இடைவேளை வரை 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மெஹிது ஹசன் மிராஸ் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், அர்ஷ் தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். முகமது சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சென்னை:

    இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்கா இந்திய அணியின் பந்துவீச்சில் சிக்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • தென் ஆபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
    • வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்ற மகளிர் டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வுல்வார்ட்- டன்ஸிம் பிரிட்ஸ் ஜோடி முதல் 7 ஓவரில் 50 ரன்கள் விளாசியது.

     

    தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சார்பில் முதலில் களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. 10 வது ஓவருக்கு பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்தினர்.

     

    வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார். ஆனால் கடைசி ஓவரில் 190 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்த போதிலும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. 

     

    • BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர்.
    • மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.

    ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டி நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. கடுமையாகப் போராடி பைனல்ஸ் வரை வந்த ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்றைய போட்டியில் வெற்றிக் கோப்பைக்கான வேட்டையில் ஆக்ரோஷமாக விளையாடின.

     

    அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வெனறு பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது.

     

    வெற்றிக்குப் பிறகு, BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர். கோப்பையை பெற்ற ஸ்ரேயாஸ் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றபோது செய்ததைப் போல பாவனை செய்து தனது அணியுடன் கோப்பையை உயர்த்திக்காட்டினார்.

    கடந்த 2022 டிசம்பரில் கத்தாரில் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான அசுர வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி வெற்றிக்களிப்பில் நடந்து வந்த தருணத்தை ஐபில் கோப்பையை பெற்றுக்கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் உருவாக்கியது அனைவரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர். 

    • நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது
    • பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் கேகேஆர் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்

    ஐபிஎல் தொடரில் நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. தொடக்கம் முதலே கொல்கத்தாவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பிர் விளங்குகிறார்.

    நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு கேகேஆர் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் கேகேஆர் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக் கான், மைதானத்துக்குள் வந்து அணியில் உள்ளவர்களைக் காட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கேகேஆர் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக கவுதம் கம்பீரின் நெற்றியில் ஷாருக் முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வாக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை கேகேஆர் அணி பயிற்சியாளராகவே நீடிக்க வலியுறுத்தி அவருக்கு ஷாருக் கான் பிளாங்க் செக் கொடுத்தாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

     

    • சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம்.
    • எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரனோடை செல்லும் பஸ்கள் சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் 2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கு வரும் மக்களின் நலன் கருதி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயண கட்டணம் பெற்று சில முன் ஏற்பாடுகளைச் செய்து உள்ளது.

    அதன்படி, பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணிநேரத்துக்கும் பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டிக்கும் மாநகர பஸ்களை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம்.

    இதற்காக பல பஸ்களைப் பயன்படுத்தியும் மைதானத்துக்கு வந்தடையலாம்.

    போட்டி முடிந்த பின்பு அடையாறு, மந்தவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பஸ்கள் அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோல பாரீஸ் கார்னர், சென்னை கடற்கரை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரனோடை செல்லும் பஸ்கள் சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    ராயப்பேட்டை, மந்தவெளி, நந்தனம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், எழும்பூர், கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவ்தத் படிக்கல் சதத்தால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன்கள் குவிப்பு.
    • தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஜெகதீசன் மட்டும் தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்தார்.

    தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் இடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் (151 ரன்) அடித்தார். அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 69.2 ஓவரில் 151 ரன்னில் சுருண்டது. இது கர்நாடகா அணியின் ஸ்கோரை விட 215 ரன் குறைவாகும்.

    தமிழக அணியில் பாபா அபரஜித் அதிகபட்சமாக 48 ரன்னும், என்.ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர். கர்நாடகா அணி தரப்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், சசிகுமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    215 ரன்கள் முன்னிலையில் கர்நாடகா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

    • உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது.
    • கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஐதராபாத்தில் நடந்த 2-வது போட்டி யில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது.

    நேற்று 2 போட்டி நடைபெற்றது. தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், டெல்லியில் நடந்த 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 102 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும் வீழ்த்தின.

    உலக கோப்பை போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருப்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. இதனால் வெற்றியுடன் தொடங்குவது அவசியமாகும்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியை பார்ப்பதற்காக காலையில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ரசிகர்கள் வர தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல ரசிகர், ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது. பெரும் அளவில் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் திரண்டனர்.

    மைதானத்துக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். 12 மணியளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஸ்டேடியத்துக்குள் சென்றனர். அவர்கள் எந்த வழியாக எந்த நுழைவு வாசலுக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊழியர்களும் அறிவுறுத்தினார்கள். கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு கொடிகள் அமோகமாக விற்பனையானது. ரசிகர்-ரசிகைகள் தேசிய கொடியை ஆர்வத்துடன் வாங்கி உற்சாகத்துடன் மைதானத்துக்குள் சென்றனர். இதேபோல வீரர்களின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.

    மேலும் ரசிகர், ரசிகைகள் தங்களது முகத்திலும் வர்ணம் பூசிக் கொண்டனர். இதற்கான பணியில் அதற்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். கிரிக்கெட் போட்டியால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

    கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்கான நுழைவு சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    • எப்போதும் நெருக்கடியாகவே காணப்படும் பெல்ஸ்ரோடு சந்திப்பு பகுதி புதிதாக சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கிறது.
    • சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இரவில் இருந்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் முதல்முறையாக டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மதியம் 2 மணியளவில் நடைபெறும் இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி வழக்கத்தைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக கிரிக்கெட் போட்டியை நடத்தும் அதிகாரிகள் குழுவினருடன் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இந்நிலையில், கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பணிக்காக சென்னையில் முதன் முறையாக டிரோன்களைப் பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வானில் இரவிலும் படம் பிடிக்கும் வீடியோ உள்ள டிரோன்களைப் பறக்கவிட்டு, அதில் உள்ள கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதவிர, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி உள்ள அனைத்து சாலை சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் கையடக்க அதி நவீன 10 கேமராக்கள் மூலம் கிரிக்கெட் போட்டி தொடக்கம் முதல் முடியும் வரை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர். கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்கள், அவர்களின் வாகனங்களும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட உள்ளது.

    இந்த காட்சிகள் அனைத்தையும் போலீஸ் அதிகாரிகள் தங்கள் செல்போனிலேயே பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, சென்னையில் நாளை நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

    கிரிக்கெட் மைதான வளாகத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தற்போது, போக்குவரத்து காவல் சார்பில் கையடக்க நவீன கேமராக்களும் தற்காலிகமாக பயன்படுத்தப்பட உள்ளன.

    மதியம் 2 மணிக்கு தொடங்கும் கிரிக்கெட் போட்டி, இரவு 10 மணி அளவிலேயே முடிவடைய வாய்ப்பு உள்ளது.

    அதன் பிறகே குடும்பத்தோடு கிரிக்கெட் பார்ப்பதற்கு வருகை தந்தவர்கள் வீடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள். எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு சென்னை ரசிகர்கள் குடும்பத்தோடு செல்வார்கள். குறிப்பாக பெண் ரசிகைகள் அதிக அளவில் காணப்படுவார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கிரிக்கெட் மைதானத்தை சுற்றி இருள் சூழ்ந்து காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருட்டை பயன்படுத்தி திருட்டு, பாலியல் சீண்டல் போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். எரியாத மின்விளக்குகள் பழுது பார்க்கப்பட்டிருப்பதுடன் 50 இடங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கிரிக்கெட் போட்டியை காண வருபவர்கள் கார்-மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் இடத்திலும் கிரிக்கெட் போட்டியை பார்த்து முடித்து ரசிகர்கள் வீடு திரும்பும் சாலைகளை குறிவைத்து புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இதுபோன்ற முக்கிய சாலைகளில் மொத்தம் 55 புதிய கேமராக்கள் நிறுவப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கூட்டங்களை பயன்படுத்தி பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எப்போதும் நெருக்கடியாகவே காணப்படும் பெல்ஸ்ரோடு சந்திப்பு பகுதி புதிதாக சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் நடைமேடை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இரவில் இருந்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    • நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    பெங்களூரு:

    பெங்களூரு அணி வெளியேறுவதற்கு குஜராத் தொடக்க வீரர் சுப்மன்கில் காரணமாக இருந்தார். அவரது அதிரடி சதத்தால் குஜராத் 198 ரன் இலக்கை எடுத்து பெற்றது. அவர் 52 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சுப்மன்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை சென்னையில் சந்திக்கிறோம். சி.எஸ்.கே.வை சென்னையில் எதிர்கொள்வது பரபரப்பாக இருக்கும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான சதம் சிறப்பானது. எனது ஷாட் மிகுந்த திருப்தியை அளித்தது.

    இவ்வாறு சுப்மன்கில் கூறியுள்ளார். அவர் இந்த சீசனில் 680 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 'லீக்' ஆட்டங்களும், 'பிளேஆப்' சுற்றின் 2 போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி 'லீக்' ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெற்றி பெற்றன. மூன்றில் தோற்றது.

    'பிளேஆப்' சுற்றின் 2 ஆட்டங்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) 23-ந்தேதியும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) போட்டி 24-ந்தேதியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-இரண்டாவது இடத்தை பிடித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். குஜராத் அணிக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும்.

    புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன. லக்னோ 3-வது இடத்தை பிடித்து உள்ளது. 4-வதாக நுழையும் அணி இன்று இரவு தெரியும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத் தில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    • ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் கூறினர்.
    • குழந்தையின் தாயை காவல்துறையினர் கடுமையாக கண்டித்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையே ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் நேற்று நள்ளிரவு முதலாகவே ஏராளமானோர் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்தனர்.

    இந்நிலையில் டிக்கெட் கவுண்டருக்கு வெளியே மூதாட்டி ஒருவர் ஒரு கையில் 6 மாத கை குழந்தையும் மற்றொரு கையில், இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையும் பிடித்தபடி நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக பதட்டமாக யாரையோ தேடிக் கொண்டிருந்தார்.

    இதுபற்றி மூதாட்டியிடம் விசாரித்தபோது, டிக்கெட் கவுண்டரில் இருந்த ஒரு பெண் இந்த இரு குழந்தைகளும் அந்த மூதாட்டியிடம் சிறிது நேரம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் இரு குழந்தைகளையும் பெற யாரும் வராத நிலையில் மூதாட்டியின் கையில் இருந்த அந்த பச்சிளம் குழந்தை பசியால் அழுதது. மூதாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

    இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் காவல் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதனைக் கேட்டு அங்கு வந்த பெண் ஒருவர் மூதாட்டியின் கையில் இருந்த குழந்தையை பெற்றுக்கொண்டு இரு குழந்தைகளும் தனது பேரப்பிள்ளைகள் எனக்கூறி வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டார். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த பெண் காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை கோபமாக தலையில் தட்டினார்.

    மேலும் அந்த குழந்தையின் தாய் வந்தால் மட்டுமே குழந்தை ஒப்படைக்கப்படும் என அங்கிருந்த காவலர்கள் கூறியதை அடுத்து டிக்கெட் கவுண்டரின் வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த இரு குழந்தைகளின் தாயை அந்த பெண்மணி அழைத்து வந்தார்.

    பின்னர் குழந்தையின் தாயை கடுமையாக கண்டித்த காவல்துறையினர் அந்த இரு பெண்களின் முகவரியையும் பெற்றுக் கொண்டு விசாரணைக்கு பின்னர் குழந்தையை ஒப்படைத்தனர்.

    ×