என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பூர்-சென்னை"
- தினமும் 15 ரெயில்கள் கோவையில் இருந்து சென்னைக்கு சென்று வருகிறது.
- தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திருப்பூர் :
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவையில் இருந்து தினமும் சென்னைக்கு இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் செல்கின்றன. இந்த ரெயில்கள் அனைத்தையும் சேர்த்து தினமும் 15 ரெயில்கள் கோவையில் இருந்து சென்னைக்கு சென்று வருகிறது. இந்திய ரெயில்வே வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவையை கோவை வழித்தடத்திலும் தொடங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த சூழலில் கோவை- சென்னை வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோவை- சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும். சென்னையில் இருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும் என உத்தேச தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜமீல் அகமது கூறியதாவது:- வந்தே பாரத் ரெயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பகல் நேரத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில் சேவையை போல் இரவிலும் படுக்கை வசதியுடன் கூடிய முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில் சேவையையும் தொடங்க வேண்டும். கோவையில் இருந்து மதுரை, பெங்களூருவுக்கும் இரவு நேரங்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் முறையில் ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கொங்கு குளோபல் போரம் இயக்குனர் நந்தகுமார் கூறும்போது, வந்தே பாரத் ரெயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேறுவது மகிழ்ச்சியாக உள்ளது. கோவை-சென்னை வழித்தடத்தில் பஸ்களை விட ரெயில்களில் பயணம் செய்யவே மக்கள் விரும்புகின்றனர். கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போத்தனூர் ரெயில் பயனாளர் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையில் இருந்து பல்வேறு வழித்தடங்களிலும் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கோவையில் இருந்து காலை 6மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் திருப்பூருக்கு காலை 6-30மணிக்கு வரும். 7.20 மணிக்கு ஈரோடு, 8-10மணிக்கு சேலம், 12-10மணிக்கு சென்னை சென்றடையும். பின்னர் மதியம் 2-20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் மாலை 6-05 மணிக்கு சேலம், 7-05 மணிக்கு ஈரோடு, 7-45மணிக்கு திருப்பூர், 8-30மணிக்கு கோவை சென்றடையும். இதன் மூலம் திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் 5½ மணி நேரத்தில் சென்றடையலாம்.