search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் அதிகாரி கைது"

    • கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது.
    • 52 வயதான அவர் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    சீனாவில் பெண் அதிகாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ரூ,1.18 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    கைதான ஜாங் யாங், தனது தோற்றத்திற்காக "அழகான கவர்னர்" என்று செல்லப்பெயர் பெற்றார். கியானன் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) ஆளுநராகவும் துணை செயலாளராகவும் பணியாற்றினார். இந்நிலையில், அவர் உடன் பணிபுரியும் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், கிட்டத்தட்ட 60 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    52 வயதான அவர் 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இறுதியில் தேசிய மக்கள் காங்கிரஸில் (NPC) துணை பதவிக்கு உயர்ந்தார். விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவராக இருந்ததால் பிரபலமாக அறியப்பட்டார். அதேபோல் உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு ஆதரவாக தனது சொந்த பணத்தை செலவழித்தார் என்றும் கூறப்படுகிறது.

    கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது. அதில் ஜாங் லஞ்சம் பெற்றதாகவும், தனது விருப்பமான நிறுவனங்களை தனது பதவியைப் பயன்படுத்தை லாபகரமான ஒப்பந்தங்களை பெற்றுத்தந்ததாகவும் கூறப்பட்டடது. மேலும் தன்னுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த ஒரு தொழிலதிபருக்கு உயர் தொழில்நுட்ப தொழிற்பேட்டையில் நிலத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

    மேலும், 52 வயதான அவர் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரால் பெற்ற பலன் காரணமாக சிலர் அவரது காதலராகத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது, மற்றவர்கள் அவருடைய அதிகாரத்திற்கு பயந்து தயக்கத்துடன் உறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    • ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 48). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கமாடத்தெரு பகுதியில் உள்ளது. அதில் வீடு கட்ட அவர் முடிவு செய்தார்.

    இதையடுத்து நகராட்சியில் கட்டிட பிளான் அலுவலகத்தில் கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதி மணி (56) என்பவரிடம் முறையாக அனுமதி கோரி மனு செய்துள்ளார். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் முறைப்படி செலுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக நேற்று கட்டிட அமைப்பு வரைபட ஆய்வாளர் ஜோதி மணியை அணுகியபோது, அவர் கட்டிட வரைபட அனுமதி கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன் லஞ்சம் கொடுக்க விருப்பமின்றி விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சால்வன் துரை ஆகியோரிடம் புகார் அளித்தார்.

    அந்த புகார் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் அறிவுரைப்படி ரசாயணம் தடவிய பணத்தை வாசுதேவனிடம் கொடுத்து அனுப்பினர். இந்தநிலையில் இன்று காலை வாசுதேவன் லஞ்ச பணத்துடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஜோதிமணி, நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரூ.10 ஆயிரம் பணத்தை ஜோதிமணி பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் தனி அறையில் வைத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பெண் அதிகாரி ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார்.
    • சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.

    காட்டாங்கொளத்தூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 36). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலருக்கு விண்ணப்பித்திருந்தார்.

    இது தொடர்பாக சமூக நல அலுவலர் கஸ்தூரியை நேரில் சந்தித்து விண்ணப்ப நிலை குறித்து கேட்டார். அப்போது கஸ்தூரி ரூ.2 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என்று சுப்பிரமணியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர், ரூ.1,800 தருகிறேன் என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவிய 1,800 ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை நேற்று மாலை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலர் கஸ்தூரியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் சமூக நலத்துறை அறையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்தனர். சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.

    • வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் கேட்டார்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா சீலப்பந்தல் மதுரா மோட்டூர் கிராமம் கொளக்கரைவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 80). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இவரது இளைய மகன் அதே பகுதியில் மெத்தை வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி வெங்கடாசலம் அவரது மகனுடன் கடந்த 21-ந்தேதி மல்லவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தை அணுகும் போது அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் தேவி, அவர்கள் கொண்டு வந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு இந்த வேலையை நான் முடித்து தருகிறேன்.

    எனக்கு ரூ.16 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னதாக தெரிகிறது. மேலும் ஆன்லைன் பரிவர்த்தனை முழுவதும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் அவர் சொல்லி அனுப்பி உள்ளார்.

    இதனையடுத்து தேவி தனது உதவியாளருடன் 24-ந்தேதி மதுரா மோட்டூர் கிராமத்திற்கு சென்று மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட மெத்தை வீட்டை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெங்கடாசலம் 27-ந்தேதி மல்லவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தேவியிடம் கேட்ட போது ரூ.16 ஆயிரம் இல்லாமல் என்னால் மின் இணைப்பு வழங்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிா்ச்சி அடைந்த வெங்டாசலம் லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி, மைதிலி மற்றும் போலீசார் மல்லாவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து வணிக ஆய்வாளர் தேவி லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    கடந்த மாதம் இதே மின்சார துறையில் திருவண்ணாமலையில் போர்மேன் ரேணு என்பவர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து மின்வாரிய துறையில் லஞ்சம் வாங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மின்சாரத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×