என் மலர்
நீங்கள் தேடியது "தர்மலிங்கேஸ்வரர் கோவில்"
- தீர்த்தவாரியின் போது குளத்தில் கூட்டம் இறங்கியதும் ஆசைப்பட்ட சூர்யா, தனது தாயின் எச்சரிக்கையை மீறி தண்ணீரில் இறங்கினார்.
- தண்ணீரில் மூழ்கிய சூர்யா நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் அவரது சினிமா ஆசை கனவுகளுடன் பலியாகி விட்டார்.
சென்னை:
கோவில் குளத்தில் முழ்கி பலியான நங்கநல்லூரை சேர்ந்த சூர்யா(22) தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞராக இருந்தார். சினிமாவில் ஆர்வம் கொண்டு இருந்த அவர் சின்னத்திரையில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் சினிமா ஆசையில் இருந்த அவரது கனவு தண்ணீரோடு மூழ்கி போய் உள்ளது. அவரது வீட்டில் நடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தில் புன்சிரிப்புடன் இருக்கும் சூர்யாவின் காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்க செய்து உள்ளது.
சூர்யா நேற்று காலை தர்மலிங்கேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு செல்வதாக தனது தாய் கீதாவிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது சூர்யாவை தாய் கீதா எச்சரித்தார். உனக்கு நீச்சல் தெரியாது... அதனால் நீ குளத்தில் இறங்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். இதற்கு சூர்யா நான் தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று கூறி சென்று உள்ளார்.
ஆனால் தீர்த்தவாரியின் போது குளத்தில் கூட்டம் இறங்கியதும் ஆசைப்பட்ட சூர்யா, தனது தாயின் எச்சரிக்கையை மீறி தண்ணீரில் இறங்கினார். அப்போது தண்ணீரில் மூழ்கிய சூர்யா நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் அவரது சினிமா ஆசை கனவுகளுடன் பலியாகி விட்டார்.
இச்சம்பவம் அவரது குடும்பத்தினரை மிகவும் கலங்க வைத்து உள்ளது. எச்சரிக்கையையும் மீறி தண்ணீரில் மூழ்கி பலியான மகன் சூர்யாவின் நிலையை நினைத்து தாய் கீதா கண்ணீருடன் உள்ளார். அவருக்கு ஆறுதல் கூற வழியில்லாமல் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இதுகுறித்து சூர்யாவின் தாய் கீதா கூறும்போது, தண்ணீரில் இறங்க வேண்டாம் என்று குறிப்பிட்டு எச்சரிக்கை செய்து இருந்தேன். ஆனாலும் சூர்யா தண்ணீரில் இறங்கி மூழ்கி பலியாகிவிட்டான். நான் மட்டும் அங்கே இருந்திருந்தால் என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றி இருப்பேன். கடைசியில் அந்தக் கடவுள் கூட என் மகனை காப்பாற்றவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
பட்டப்படிப்பு முடித்த சூர்யா சினிமாவில் அதிக ஆசை கொண்டு இருந்தாலும் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வரும் தனது தந்தைக்கும் உதவியாக இருந்தார். வேலை இல்லாத சமயத்தில் தன்னுடைய தந்தைக்கு உதவி செய்வதிலும், உணவு ஆர்டர் கொடுத்தவர்களிடம் சரியான நேரத்தில் உணவுகளை கொண்டு போய் சேர்ப்பதிலும் முழு உற்சாகமாகவும் ஈடுபாடோடும் செய்ததாக அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
சூர்யாவின் அண்ணன் சந்தோஷ் கூறும்போது, நான் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போது சூர்யா வெளியே சென்றான். சூர்யா இறந்துவிட்டதை நம்ப முடியவில்லை என்றார்.
சூர்யாவின் பள்ளிகால நண்பர்கள் கூறும்போது, பங்குனி உற்சவம் தொடங்கிய நாள் முதல் சூர்யா மிகவும் பிசியாக இருந்தான். அவனை கடந்த ஒரு வாரமாக நாங்கள் சந்திக்கவில்லை. தற்போது அவன் இறந்து விட்டான் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. அவன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தான் என்றனர்.
சூர்யாவின் மறைவு அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதேபோல் மடிப்பாக்கம் பாலையா கார்டனில் வசித்த என்ஜினீயரிங் பட்டதாரியான யோகேஸ்வரன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும் ஆன்மீக சேவையில் எப்பொழுதும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் பங்குனி உற்சவம் உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆன்மிக சேவையாற்றுவார் என்று இவருடைய நண்பர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
கல்லூரி மாணவர்களான வானேஷ், ராகவ், ராகவன் ஆகியோரும் எதிர்கால வாழ்க்கை குறித்து பல்வேறு கனவுகளுடன் இருந்தனர். அவர்களது வாழ்க்கையும் ஒரே நேரத்தில் தண்ணீரில் மூழ்கி போய் விட்டது.
- கடந்த 3 ஆண்டுகளாக கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வந்து உள்ளது.
- முதல் ஆண்டு மட்டும் உரிய பாதுகாப்பு நடைமுறை கடைபிடிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த நங்கநல்லூர், எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக கோவிலில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உற்சவர் சாமி சிலையுடன் குளத்திற்குள் சென்று நீராடினர். அப்போது அர்ச்சகர்களுக்கு பாதுகாப்பு அரணாக சங்கிலிபோல் கைகோர்த்து நின்ற தன்னார்வலர்களில் ஒருவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
அவரை காப்பாற்ற முயன்ற அருகில் நின்ற 4 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர்.
இதில் நங்கநல்லூரை சேர்ந்த வனேஷ் (வயது 19), புழுதிவாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்த ராகவ் (19), புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ராகவன் (22), நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (22), மடிப்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (23) ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
கோவில் குளத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பலியானவர்களில் வனேசும், ராகவனும் சி.ஏ.மாணவர்கள், ராகவ் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வந்தார். சூர்யா தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞராக வேலை பார்த்தார். யோகேஸ்வரன் ஒரகடத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பலியானவர்கள் தண்ணீரில் மூழ்கும் வீடியோ காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வந்து உள்ளது. முதல் ஆண்டு மட்டும் உரிய பாதுகாப்பு நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளும் உரிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தீர்த்தவாரியின் போது 5 பேர் பலியான கங்கையம்மன் கோவில் குளத்தில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. குளத்திற்கு செல்லும் குளத்தின் முன்பகுதி கேட் மூடப்பட்டு உள்ளது. அதில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பங்குனி உத்திர விழா நடைபெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் நிறுத்தப்பட்டு உள்ளது. கோவில் நடை சாற்றப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.
அதில், தவிர்க்க முடியாத காரணத்தால் பொது தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.
கோவில் குளத்தில் 5 பேர் பலியான விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.