search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரு ஸ்டேடியம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    • விளையாட்டுத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் இந்த நேரு ஸ்டேடியத்திற்கு வாரத்துக்கு மூன்று தடவை வந்து விடுகிறேன்.
    • விளையாட்டு போட்டிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.50 கோடி ஒதுக்கி இருக்கிறார்.

    சென்னை:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில் பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்களை தொடர்ந்து நடத்தி எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு லட்சமாவது பணி ஆணையை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் சமீபத்தில் வழங்கினார். தற்போது அந்த எண்ணிக்கை 1,44,000 ஆக உயர்ந்து வருகிறது. விரைவில் 1.5 லட்சம் மற்றும் 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இது எட்டப் போகிறது.

    அதிக எண்ணிக்கையிலான பயிற்சி முகாம்கள் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. எனது தொகுதியான திருவல்லிக்கேணியில் மட்டும் பல நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பு என்ற விஷயத்தை பெற முடியும். இந்நிலையில் மாவட்ட அளவிலான என்ற நிலையை கடந்து ஐடிஐ மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டி இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. 102 அரசு ஐடிஐ களில் 92 சதவீத மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இது தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஆகும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டும் வகையில் மாநில மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதுவரை பள்ளி கல்லூரிகளில் மட்டுமே விளையாட்டு போட்டிகள் நடந்து வந்த நிலையில் முதல் முறையாக மாநில அளவில் ஐடிஐ மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெறுவது மிக முக்கியமானது.

    விளையாட்டு போட்டிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.50 கோடி ஒதுக்கி இருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் இந்த நேரு ஸ்டேடியத்திற்கு வாரத்துக்கு மூன்று தடவை வந்து விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பின்பு அணி வகுப்பில் பங்கேற்று முதலிடம் பெற்ற சென்னை மண்டல மாணவ மாணவிகளுக்கு கோப்பையை பரிசாக வழங்கினார். பின்பு கேரம் போர்டு, செஸ், இறகு பந்து விளையாடி மாணவ மாணவிகளை ஊக்குவித்தார்

    ஆணையாளர் வீரராகவராவ் வரவேற்றார். அரசு கூடுதல் செயலாளர் முகமது நசிமுதீன் திட்ட விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சி.வி. கணேசன், அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன், எம்.பி, பரந்தாமன் எம் எல் ஏ ,மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், அரசு செயலாளர்கள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×