search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேசவன் பூங்கா"

    • திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில். சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி பரபரப்பு பேனர் ஒன்றை வைத்தார்.
    • பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கேசவன் பூங்கா இடத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான கேசவன் பூங்கா இருந்தது. தற்போது, அந்த பூங்கா முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பூங்க இருந்ததற்கான அடையாளம் இல்லாத அளவுக்கு உள்ளது.

    இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கேசவன் பூங்கா இடத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தொண்டன் சுப்பிரமணி என்பவர் கேசவன் பூங்கா மாயமாகி விட்டதாகவும், அதனை கண்டுபிடித்து தரும்படியும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுகளுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தார்.

    இதற்கிடையே திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில். சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி பரபரப்பு பேனர் ஒன்றை வைத்தார். அதில், கேசவன் பூங்காவைக் காணவில்லை. அதை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி அந்த பேனரை அதிரடியாக அகற்றினர்.

    இதுகுறித்து தொண்டன் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறுகையில், திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் அருகே வடக்கே 15 மீட்டர், தெற்கில் 15.2 மீட்டர், கிழக்கில் 8.5 மீட்டர், மேற்கில் 8.9மீட்டர் நீள, அகலத்தில் கேசவன் பூங்கா இருந்தது. தற்போது அந்த பூங்காவை காணவில்லை. நான் எனக்கு சொந்தமான இடத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பேனர் வைத்து இருந்தேன். அதனை அகற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பல இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றாதது ஏன் எனத் தெரியவில்லை என்றார்.

    ×