என் மலர்
நீங்கள் தேடியது "இளநீர்- நுங்கு விற்பனை"
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 9 மணிக்கே இளநீர் விற்பனை துவங்கி விடுகிறது.
- குடும்பத்தினருக்கும் சேர்த்து பலர் வாங்கி செல்வதால் அரை பழம், முழு பழம் அப்படியே விற்று தீருகிறது.
திருப்பூர்:
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் திருப்பூரில் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே இருப்பதால், உடல் சூட்டை தணிக்க கூடிய இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி, உடுமலை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆட்டோக்களில் வியாபாரிகள் பலர் இளநீரை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
சிறிய ரகம் 15 ரூபாய், நடுத்தரம் 20 முதல் 25 ரூபாய், டி.ஜே., எனப்படும் பெரிய ரகம் 35 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வழக்கமான நாட்களில் மதியம் தான் இளநீர் விற்பனை சுறுசுறுப்பாக இருக்கும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 9 மணிக்கே இளநீர் விற்பனை துவங்கி விடுகிறது. மாலை 5 மணி வரை நடக்கிறது.
இளநீருக்கு அடுத்து வெயிலுக்கு அதிகம் விற்பனையாவது தர்பூசணி. சேலம், விருத்தாச்சலம் பகுதியில் இருந்து தர்பூசணி லாரிகளில் வந்து குவிவதால் ஒரு பீஸ் 10 ரூபாய், கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குடும்பத்தினருக்கும் சேர்த்து பலர் வாங்கி செல்வதால் அரை பழம், முழு பழம் அப்படியே விற்று தீருகிறது.
பகலில் மட்டுமின்றி இரவிலும் இப்பழத்தை விரும்பி வீட்டுக்கு வாங்கிச் செல்வோர் பலர் இருப்பதால் இரவு 9மணி வரை பழங்களை விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள்.நம்பியூர், புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து நுங்கு விற்பனைக்கு வருகிறது. குறைந்தளவே வருவதால் சீக்கிரம் விற்று விடுகிறது. 10 ரூபாய், 20 மற்றும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வணிக கடைகள், சமூக நல பொது அமைப்புகள் சார்பில் நீர்மோர் வழங்குவதால் மோர் விற்பனையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. கம்மங்கூழ் விற்பனையே செய்கின்றனர். சிறிய சொம்பில் ஒரு சொம்பு 20 ரூபாய், பார்சல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தள்ளுவண்டி கடைகளில் விற்பனை என்றாலும், ஆண்டு முழுவதும் விற்பனை என்பதால் கம்மங்கூழை தேடிச் சென்று குடிப்பவர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பழத்தை விட ஜூஸ் தயாரித்து அதனை 20 ரூபாய், 30 ரூபாய், 50 ரூபாய்க்கு பழக்கடைகள் விற்பனை செய்கின்றனர்.