search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை கிரிக்கெட்"

    • தென்ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.

    வாஷிங்டன்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிந்தது.

    சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.


    சூப்பர்-8 சுற்று நாளை தொடங்குகிறது. இதில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    அந்த அணி பேட்டிங்கில் டி காக்,ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், கிளாசன், ஸ்டெப்ஸ், டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் நார்ஜே, ரபடா, மார்கோ ஜேனசன் ஆகியோர் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

    முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்கா அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. லீக் சுற்றில் பாகிஸ்தான், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் தோற்றது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

    அந்த அணியில் ஸ்டீவன் டெய்லர், ஆரோன் ஜோன்ஸ், ஆண்ட்ரிஸ் கவுஸ், மோனாத் பட்டேல், நிதிஷ்குமார், கோரி ஆண்டர்சன், அலிகான், சவுரவ் நேத்ராவல்கர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.

    • பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
    • கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது.

    லாடர்ஹில்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

    அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை கனடாவுடன் மோதுகிறது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடக்கிறது.

    இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி பேட்டிங்கில் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பார்முக்கு திரும்ப வேண்டியது மிகவும் முக்கியம்.

    ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று ஏறக்குறைய முடிந்து விட்டது. அந்த அணியில் ஆரோன் ஜான்சன், கிர்ன், கார்டன், பர்கத்சிங், கலீம் சானா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    லாடர்ஹில்லில் மழை பெய்து வருகிறது. இதனால் இப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே இந்திய அணியுடன் மாற்று வீரர்களாக சென்ற சுப்மன்கில், அவேஷ்கான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் மற்ற மாற்று வீரர்களான ரிங்குசிங், கலீல் அகமது ஆகியோர் அணியுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கனடாவுக்கு எதிராக நாளைய போட்டி முடிந்தவுடன் சுப்மன்கில், அவேஷ்கான், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்புகிறார்கள்.

    • அபார பந்துவீச்சு காரணமாக 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐயர்லாந்து அணி இந்தியாவின் அபார பந்துவீச்சு காரணமாக 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இதன் மூலம் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரைசதம் கடந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

     


    அந்த வகையில், சர்வதேச டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இந்திய வீரர் விராட் கோலி, இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா, மூன்றாவது இடத்தில் பாபர் அசாம் உள்ளனர்.

    மேலும், 4 ஆயிரம் ரன்களை கடக்க குறைந்த பந்துகளை எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியிலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் 2 ஆயிரத்து 860 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி மற்றும் பாபர் அசாம் முறையே 2 ஆயிரத்து 900 மற்றும் 3 ஆயிரத்து 82 பந்துகளை எதிர்கொண்டு இந்த பட்டியிலில் இடம்பிடித்துள்ளனர்.

    இதுதவிர சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்சர்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மேலும், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவரைத் தொடர்ந்து கிரிஸ் கெயில் 553 சிக்சர்களை விளாசி 2-வது இடத்திலும், ஷாகித் அப்ரிடி 476 சிக்சர்களை அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். நேற்றைய வெற்றியின் மூலம் இவர் 300 போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்திய கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக 42 போட்டிகளில் ரோகித் சர்மா வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இரு இடங்களில் எம்.எஸ். டோனி மற்றும் விராட் கோலி உள்ளனர். இருவரும் முறையே 41 மற்றும் 30 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர்.

    • உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது
    • உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது.

    இந்திய அணியில் பினிஷராக ரிங்கு சிங் இடம் பெறுவாரா? இல்லை சிவம் துபே இடம் பெறுவாரா என்ற இழுபறி நீடித்தது. இந்த போட்டியில் முந்திய துபே அணியில் இடம் பெற்றுள்ளார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்திருந்த நிலையில் அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சீசனில் ரிங்கு சிங்கால் போதிய ரன்களை குவிக்க முடியவில்லை. அதனை காரணம் காட்டியே அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து ரிங்கு சிங் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். அந்த சீசனில் அவர் 474 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வழியாக பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை அவர் டி20 கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

    இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் இரண்டு அரைசதங்களுடன் 176 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் திலக் வர்மாவுக்கும் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 336 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
    • இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

    அணியில், குவிண்டின் டிகாக், மார்கோ யான்சன், ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி, ஒட்னியல் பார்ட்மேன், பிஜோர்ன் ஃபார்ட்யூன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும் காத்திருப்போர் பட்டியலில் பர்கர், லுங்கி இங்கிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

    • இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    நியூசிலாந்து மட்டுமே இதுவரை உலக கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. இந்திய அணியில் இடம் பெறப் போகும் 15 வீரர்கள் யார்-யார்? என்று நாள்தோறும் முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.

    2-வது விக்கெட் கீப்பர் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2-வது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், உள்ளனர். இதில் சாம்சனுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு அறிவிக்கும். இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 15 வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான் அல்லது முகமது சிராஜ்.

    கே.எல்.ராகுல், யசுவேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா ஆகியோரும் தேர்வுக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும், 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    • ஆஸ்திரேலிய அணி தங்களுக்கு என தனி செஃப்-ஐ பயன்படுத்தி வருகிறது
    • இந்திய வீரர்கள் சிலர் இதுபோன்று நியமித்துள்ளதால், தானும் வைத்துள்ளதாக ஸ்டோய்னிஸ் கூறுகிறார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. சுமார் ஒன்றரை மாத காலம் நடைபெறும் நீண்ட தொடர் என்பதால், வீரர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். அப்போதுதான் தொடர் முழுவதும் திறம்பட விளையாட முடியும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உணவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது, இந்தியாவின் வெப்பத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவதிப்படுவார்கள். அதேபோல் உணவும் அவர்களுக்கு ஏற்றபடி இருக்காது.

    இதனால் பெரும்பாலும் தங்களுக்கென தனி செஃப்-ஐ வைத்துக் கொள்வார்கள். தற்போது, இந்தியா வந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தங்களுக்கென தனியாக செஃப்-ஐ ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த நிலையில், தனது உடதற்குதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பிய அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனக்கென தனி செஃப்-ஐ நியமித்துள்ளார். இவர் போட்டிகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். அவருடன் அவரது செஃப்-வும் இந்தியாவை சுற்றி வருகிறார். இந்த செஃப் பிரெஞ்ச் உணவு தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

    "இந்திய வீரர்களின் சிலர் இதுபோன்று தனியாக செஃப் வைத்துள்ளனர். அதனால் எனக்கும் அதுபோன்று யோசனை தோன்றியது" என ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். மேலும், "நான் எப்போதும் எனது உணவு மற்றும் போட்டியாக்காக தன்னை தயார்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    சல்தான்ஹா என்ற அந்த செஃப், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள பிரபலமான ரெஸ்டாரன்டில் பணிபுரிந்தவர். லக்னோ அணியின் கே.எல். ராகுல் பரிந்துரை செய்ததன் பேரில், ஐ.பி.எல். போட்டியின்போது மார்கஸ் ஸ்டோய்னிஸ், இவரை சந்தித்துள்ளார். தற்போது உலகக் கோப்பையின்போது செஃப்-ஆக பயன்படுத்திக் கொண்டார்.

    ஸ்டோய்னிஸ் இந்த உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி 5, 20 (நாட்அவுட்), 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    • அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைராலாகியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களை குறிவைத்து முறையற்ற வகையில் ரசிகர்கள் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. 

    இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் நிலவும் தாமதம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் ஐசிசி-யிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களை டார்கெட் செய்து மைதானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
    • இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தனியார் விழாவில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தாண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும். விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
    • அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒரு கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் வெளியில் நடக்கும் விஷயங்களை பற்றி கவலைப்படாமல் மனதை நெருக்கடியின்றி எப்படி இயல்பாக வைத்துக் கொள்கிறேன் என்பதே முக்கியம். இன்னும் சொல்லப்போனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எத்தகைய மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலைக்கு செல்ல விரும்புகிறேன். அப்போது மனதளவில் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். போட்டிக்கும் சிறப்பாக தயாராகி (5 சதம் உள்பட 648 ரன் குவித்தார்) இருந்தேன். அந்த சமயம் என்னவெல்லாம் செய்தேனோ அதனை மீண்டும் நினைவுக்குள் கொண்டு வந்து, அதன்படி தயாராக முயற்சிக்கிறேன். அதை செய்ய எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.

    ஒரு போட்டியின் முடிவு அல்லது ஒரே ஒரு சாம்பியன்ஷிப் என்னை எந்த வகையிலும் மாற்றி விடாது. கடந்த 16 ஆண்டுகளாக எப்படி இருக்கிறேனோ அதே போல் தான் இப்போதும் இருக்கிறேன். எனக்குள் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. அடுத்த 2 மாதங்களில் எனது இலக்கை எப்படி நிறைவேற்ற போகிறேன் என்பதில் ஒரு வீரராகவும், அணியாகவும் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி ஒன்று அல்லது 2 மாதத்திற்காக ஒரு நபர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.

    சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுக்கு என்ன தரப்படுகிறதோ அதை உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும். எது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது என்பதை தான் நான் சிந்திக்கிறேன். என்னை பொறுத்தவரை சக வீரர்களுடன் இணக்கமான சூழலை கொண்டு வந்து, சிறந்த நினைவுகளை உருவாக்க வேண்டும். உங்களிடம் என்ன இருக்கிறது, என்ன கிடைக்கிறது என்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது. அந்த சமயத்தில் நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறோம். இதே போல் களம் காணும் 11 பேரை இறுதி செய்யும் போதும், வெளியில் இருக்கும் மற்ற வீரர்களிடம் நீங்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுவோம்.

    சில நேரங்களில் அவர்களது இடத்தில் என்னை வைத்து பார்ப்பேன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு என்னை தேர்வு செய்யாத போது, மனம் உடைந்து புலம்பி இருக்கிறேன். ஆனால் கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்கள் ஆகியோர் எதிரணி, ஆடுகளம், எங்களது பலம், பலவீனம் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே அணியை தேர்வு செய்கிறார்கள். ஆனால் எல்லா நேரமும் நமது தேர்வு சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் தவறு நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிரிசிற்குள் நில்லுங்கள் நிம்மதியாக வாழுங்கள் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    • நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷதாப் கானை பரூக்கி மன்கட் செய்தார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாபர் அசாம் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் ஆப்கான் சீனியர் வீரர் முகமது நபியுடன் நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். ஆப்கான் வீரர்களிடம் கைகுலுக்கவே மறுத்தார் ஷாஹின் ஷா அஃப்ரீடி.

    இந்தச் சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை அரையிறுதியில் அல்லது ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவுதான் நரகமே இடிந்து விழுந்தது போல் கூக்குரல்கள் எழும். இன்னும் பலரும் இதனை ஒரு அவுட் ஆக்கும் முறையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. எந்த பேட்டராக இருந்தாலும் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் பவுலர் கையை சுத்துவதை நெருக்கமாக கவனித்து அதன் பிறகே கிரீசிலிருந்து கிளம்ப வேண்டும். இதைச்செய்யாமல் முன்னாடியே கிரீசை விட்டு வெளியேறி மன்கட் செய்யப்பட்டு அவுட் ஆனால் அந்த பவுலரை கரகோஷம் செய்து பாராட்டி பேட்டரிடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்றுதான் கூற வேண்டும்.

    பவுலர் ஆக்ஷனை பூர்த்தி செய்யவே இல்லை. அவர் இதனை 5-வது அல்லது 6வது ஓவரில் செய்ய வேண்டியதுதானே" என்ற வாதங்கள் நொண்டிச்சாக்குதான். பவுலர் கையைச் சுழற்றி பந்தை டெலிவரி செய்யத் தயாராகி விட்டு ரன்னர் முனை பேட்டரை ரன் அவுட் செய்ய முடியாது. ஏனெனில், விதிப்படி அது தவறு.

    இப்போது எல்லா அணிகளும் இதைச் செய்வதில்லை. ஆனால் உலகக்கோப்பை வருவதால் நிச்சயம் இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. சும்மா ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் பேசி நாங்கள் என்ன ஆனாலும் அப்படிச் செய்ய மாட்டோம் என்று சொல்வதெல்லாம் எதிரணியினருக்கு ஒரு சாளரத்தை திறந்து விடுவதில்தான் போய் முடியும். எந்த ஒரு அணியும் தங்கள் வழியில் வரும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உலகக்கோப்பையை வெல்வதென்பது வாழ்நாள் சாதனையல்லவா.

    சிலருக்கு வெற்றி பெறுவதுதான் அனைத்தும். மற்ற சிலருக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். நாம் இரண்டு நிலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    கிரிசிற்குள் நில்லுங்கள்! நிம்மதியாக வாழுங்கள்!

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    • விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
    • விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.


    புதுடெல்லி:

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.

    ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

    இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.

    4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

     

    ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.

    அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.

    விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.

    காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.

    ×