என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அண்ணாமலையார்"
- விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்.
- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும்.
சிவனுக்குரிய எட்டு வகையான விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. திரியோதசியும் சதுர்த்தசியும் இணையும் நாளை பிரதோஷம் என்கிறோம். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வீதம் வருடத்திற்கு மொத்தம் 24 பிரதோஷங்கள் வருகிறது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு உள்ள 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். தினமும் வருவதற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர்.
அப்படி வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அவர்களுடைய கோவிலுக்குச் சென்று அவரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று.
பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
இன்று ஆனி ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினம் என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.
- திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.
ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குல தெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக எது குலதெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே.
சரி குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?
உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்னத்தில்- ஜந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தபட்டு இருந்தால் சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம். ஐந்தில்- ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம்.
உங்கள் தாத்தா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் உரிய, முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெறவில்லை என்றால், உங்களுக்கு வாழ்நாள் முழுக்க, தடைகள், முட்டுக்கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான்.
உங்கள் பரம்பரையின், ஒட்டு மொத்த பாவக் கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து, அதன்பிறகு உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். குல தெய்வம்- உங்கள் வம்சா வழியில் பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க தன் உடல், பொருள் ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம்.
சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?
இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடு என்று பாருங்கள். பரம்பரையாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்பசாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவாயில்லை.
அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள்- மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம். இல்லையா, திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.
மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.
இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர்- குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
- ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இறைவனால் படைக்கப்பட்ட ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடப்பாகத்தை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு மலையே இறைவனாக காட்சியளிப்பது சிறப்பம்சமா கும்.
ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது, அவர்களின் அகங்காரத்தை அடக்கும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டறிகிறார்களோ அவர்களே பெரியவர் என்றார். இதனால் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனின் அடியை காண முயன்று தோற்றுப்போனார்.
அதன்பிறகு பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண முயன்றார். அப்போது சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து வந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவன்முடியை கண்டதாக பிரம்மா பொய் கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் அப்போது பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அவர்களின் ஆணவத்தை அழித்தார்.
இதன் காரணமாகவே பொய்யுரைத்த பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இல்லாமல் போனது. பொய் சாட்சி கூறிய தாழம்பூவும் சிவபெருமாள் பூஜையில் வைக்கும் தகுதியை இழந்தது என்பது ஐதீகம்.
- கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.
- நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும்.
நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்திற்கு நிகரான பேறு பெற்ற ஆலயம் திருவண்ணா மலை. முக்தி தலங்கள் ஐந்தினுள் அண்ணாமலை அப்பனே என அவரவர் இருந்த இடத்தில் இருந்தவாரே மனமுருகி நினைத்தவுடனே முக்தி அளிக்க வல்ல சிறப்புக்குரியது.
மகா சிவராத்திரி தோன்றிட காரணமாக திகழ்ந்ததும், தமது உடலில் பாதியை அன்னை பார்வதி தேவிக்கு அருளி உமையொரு பாகனாக காட்சியளித்த பெருமைக்குரியதும் இத்திருத்தலமே. முக்திபுரி, சிவலோகம், தலேச்சுரம், சுத்த நகரம், கவுரி நகரம், சோணாச்சலம், சோணாத்திரி, அருணாத்திரி, அருணாசலம், அக்னிகிரி, திருவருணை, திருவண்ணாமலை இப்படி பல திருநாமங்களை தாங்கி நிற்கும் தவபூமி.
இப்புண்ணிய சேத்திரத்தின் புராதன புனித பெயர் அண்ணா. இந்நகரை சுற்றியிருந்த பகுதிகளை சேர்த்து அக்காலத்தில் இதனை அண்ணாநாடு என மக்கள் அழைத்து வந்தனர். இதன் காரணமாகவே இங்குள்ள மலையும் அண்ணாமலை என்றும், இறையனார் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அருளாட்சி பூமி என்பதால் திருவண்ணாமலை எனவும் வழங்கப்படுகிறது.
கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், இக்கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.
- அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
- 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும்.
ஒவ்வொரு தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல் லிங்க வடிவாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரும் திருவீதி உலாவாக ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
அந்த நன்னாள் கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார்.
அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணா மலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது தீபாராதனைகள் நடைபெறும்.
கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும், அவைகளை விரட்டு வதற்காகவும் அண்ணாமலை யார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.
ஒளி கண்டு ஓடும் இருள் போல் திருவண்ணாமலை தீபம் கண்டவுடன் மாந்தர்களின் பாவங்கள் தீரும் என்பது திண்ணம்.
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!
இருள் ஒழிந்து இன்பம் ஈவாய் போற்றி!
நாமும் கிரிவலம் செல்வோம், மலையில் ஜோதியாய் தோன்றும் ஈசனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
- அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
- அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி.
திருவண்ணாமலையை வல்லாள மகாராஜன் என்ற அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவருக்கு குழந்தை இல்லை. அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தனக்கு குழந்தை இல்லை என்று வருந்தியபோது இறைவன் அவர் கனவில் தோன்றி நானே உனக்கு மகனாக இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் அரசன் குழந்தை பாக்கியம் இல்லை என்ற வேதனையில் இருந்து விடுபட்டார். சில காலம் கழித்து வல்லாள மகாராஜன் இறந்து விட்டார்.
அரசன் இறந்ததை மாசி மாதம் பூச நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி செல்லும் அண்ணாமலையாரிடம் ஓலை மூலமாக தகவலை தெரிவிப்பார்கள். இதனையடுத்து அண்ணாமலையார் தீர்த்தவாரிக்கு செல்லாமல் மேளதாளம் இல்லாமல் கோவிலுக்கு திரும்பி வருவார். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அடுத்த பள்ளிக் கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள நதிக்கரையில் அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகின்றன.
- ஜோதி என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி.
கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் நீடாடுவது மிகவும் நல்லது.
அதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விடியற்காலை ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம்.
ஞாயிறுக்கு அடுத்த ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் சிவபூஜைக்கு விசேஷமாக சொல்லப் பட்டிருக்கிறது.
எப்படி சிவராத்திரி இரவு பூஜை விசேஷமோ, அப்படி கார்த்திகை மாதம் பகல் நாலு ஜாமமும் சிவ பூஜைக்கு விசேஷமாகும்.
கார்த்திகை மாதம் அமாவாசை சோமவாரமும் சேர்ந்தால் அன்று அரசமர பிரதட்சணம் செய்ய வேண்டும்.
அரச மர பிரதட்சணத்தின் மூலம் மும்மூர்த்திகளை பிரதட்சிணம் செய்த பலன் உண்டு.
இதையேதான் பகவானும் பகவத் கீதையில் மரங்களுள் அரசமரமாக நான் இருக்கிறேன் என்றார்.
கார்த்திகை பௌர்ணமியில் அன்னதானம் மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.
பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகின்றன.
பஞ்ச பூத தலங்களுள் ஜோதி தலமாக திருவண்ணாமலை தலம் திகழ்கிறது.
ஜோதி என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீபம் மாத்திரம் அல்ல, தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி.
இப்படிப்பட்ட தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் மலை மேல், தீபம் ஏற்றப்பட்டு ஜோதி வடிவமாக இறைவன் உள்ளதாக நாமெல்லாம் அறிகிறோம்.
ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட வேண்டும்.
புழுக்களுக்கும், கொசுக்களுக்கும், வண்டுகளுக்கும், மரங்களுக்கும், ஜலத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும்
ஆகாசத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும், நலல கதி கிடைக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து,
சிவ பூஜை முடிந்த பிறகு, குங்கிலியம் போட்டு ப்ரார்த்தனை செய்வார்கள்.
ஒவ்வொரு கோயிலிலும் பழமை எல்லாம் கழித்து பாபங்களை பொசுக்கும் நினைவாகவும், நல்ல சொர்க்க
லோகத்திற்கு செல்லும் நினைவாகவும் சொக்கபானை (ஸ்வர்க்கபானை) கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆகவே கார்த்திகை மாதம் புனித நீராடல், தானம், பூஜை, பிரார்த்தனை, ஞானம் இத்தனையும் வருகிறது.
இதனால் தான் மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் விசேஷமான மாதமாகிறது.
- தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
- இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
"இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.
இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.
கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள்.
சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர்,
அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.
- தானத்தில் சிறந்தது அன்ன தானம். அத்தானத்திற்கு சமமான தானம் மூவுலகிலும் இல்லை.
- பவுர்ணமி தோறும் எதை நினைத்து அன்னதானம் செய்தாலும், அவை நல்ல பயனைத் தரும்.
தானத்தில் சிறந்தது அன்ன தானம். அத்தானத்திற்கு சமமான தானம் மூவுலகிலும் இல்லை.
அன்னம் கொடுப்பவர் உயிரையே கொடுப்பவர் ஆகிறார்.
தென்னாட்டில் முன்னொரு காலத்தில் சிங்கத்வஜன் என்ற அரசன் இருந்தான்.
அவன் அன்னதானம் தவிர மற்ற தானங்கள் யாவையும் எக்காலமும் செய்து வந்தான்.
அவன் இறந்த பிறகு இந்திரலோகம் சென்றான். அரசனின் குமாரன் சித்திரகேது அரசபட்டம் சூட்டப் பெற்றான்.
நாரதர் அவனிடம், உன் தந்தை எல்லாவித தானங்களும் செய்திருந்த போதிலும் அன்னதானம் செய்யாததினால் அவர் மேலோகம் சென்றபோது அமிர்தம் கிடைக்கவில்லை.
ஆகவே உனக்கும் உன் தந்தைக்கும் அமிர்தம் கிடைக்கும் பொருட்டு நீ அன்னதானம் செய்வாயாக என அறிவுறுத்தினார்.
அரசனும் அதைக் கேட்டு அன்னதானம் செய்யத் தீர்மானித்தான்.
அரசன் நாரதரை நோக்கி, "இப்பூவுலகில் எவ்விடத்தில் எந்த நாளில் அன்னதானம் செய்தால் பிற இடங்களில் செய்வதை விட அதிகப்பலன் அடையலாம்" என்று கேட்டான்.
அதற்கு நாரதர் மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு அன்னமளிப்பது காசியில் ஒருவருக்கு அன்னமளிப்பதற்கு ஈடாகும்.
காசியில் கோடி பேருக்கு அன்னமளிப்பது திருவண்ணாமலையில் ஒருவருக்கு அன்னமளிப்பதற்கு சமமாகும்.
அப்பேற்றை பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் அளவிட முடியாது.
திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் வேறெங்கும் கிடையாது என்று கூறினார்.
சித்ரகேது அண்ணாமலையாரை ஆராதித்து தினமும் அன்ன தானம் செய்து வழிபட்டான்.
இவன் அன்னதானம் ஆரம்பித்த உடனே இந்திரன் கொடுத்த அமிர்தத்தை அவன் தந்தை அருந்தி சிவலோகம் அடைந்தார்.
எனவே நீங்கள் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் எதை நினைத்து அன்னதானம் செய்தாலும், அவை நல்ல பயனைத் தரும்.
கல்வி, திருமணம், புத்திரம், வேலை, பதவி உயர்வு, அரசியல், வெற்றி, பிறந்தநாள், திருமண நாள், முன்னோர்கள் திதி, ஆரோக்கியம் போன்ற எல்லா வகையான பயனை பெற தாங்களால் இயன்ற சிறுதொகையை அன்னதானத்திற்கு அளிக்கலாம்.
- நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளது.
- சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது.
* நினைக்க முக்தியருளும் தலம்.
* அருணகிரி நாதரின் வாழ்வில் அருள்திருப்பம் ஏற்படக்காரணமாக இருந்த பதி.
* ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது)
* இத்திருக்கோவிலின் கிழக்குக்கோபுரம் 217 அடி உயரம், தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.
தெற்கு கோபுரம்-திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம்- பேய்க்கோபுரம், வடக்கு கோபுரம்-அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.
* கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும், பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
* கோவிலுனுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலதுப்புறம் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி-ரமணர் தவம் செய்த இடம் தரிசிக்கத்தக்கது.
* உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சன்னதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன. திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சன்னதி.
* வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானுக்குச் சாத்திய வேல் இன்றுமுள்ளது.
* சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது.
* அம்பாள் சந்நிதியில் சம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுகள் உள்ளன.
* விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ர பாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
* மூவர்-அருணாசலப்பெரு மான், தங்கக்கவச நாகா பரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.
* 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் திருவெம் பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.
* தலபுராணம் -அருணாசல புராணம் அருணைக்கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.
* அண்ணாமலை வெண்பா குரு நமச்சிவாயர் பாடியது.
* குருநாமசிவாயர்,குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்யஞானதேசிகர், தெய்வ சிகாமணி தேசிகர், முதலியோர் இப்பகுதியில் வாழ்ந்த அருளாளர்கள்.
இவர்களுள் பெரும் யோகியாக திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பவர்
ராமேஸ்வரத்துக்கு யாத்திரையாக சென்ற போது ராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று
ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோவில்களின் நிர்வாகத்தை தாம் மேற்கொண்டதோடு
குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர்ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்.
அதுவே குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் என்று வழங்கப்பட்டு வருகின்றது.
* நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளது.
இவை தமிழ், சமஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன.
- திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.
- இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.
அதில் ஒன்று ஒரு முறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள்.
அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது.
உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது.
விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.
இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.
தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம் மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள்.
பௌர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது.
இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
அந்த தினமே கார்த்திகை தீப திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம்,
ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது,
அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது.
நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது.
தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது.
ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார்.
அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார்.
முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியல் மகாபலி சக்கரவர்த்தியா பிறந்தார்.
எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.
ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோவிலுக்குச் சென்றார்.
பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நட ந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி
சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று.
செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகை கூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார்.
தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கி அருளுமாறு வேண்டினார்.
"தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோவிலில் தீப வரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா.
காலப் போக்கில் உன் நோய் நீங்கும்" என்று இறைவன் அசரீரியாக சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான்.
நாள்தோறும் கோவிலுக்கு சென்று வரிசை வரிசையாக நெய்த் தீபங்கள் ஏற்றி வழிபட்டான்.
இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய
பௌர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது.
இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது.
இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.
காலப்போக்கில் அனைத்து இனத்தவர்களும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது.
சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்க செய்யும்
வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும்.
எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும்.
என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும்
எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது,
அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அபிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது
கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின்,
இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
- அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.
- வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.
தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி),
பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.
திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.
எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.
இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில்
சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.
எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,
கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும்
எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி,
அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான,
வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும்
சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்