என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 ஆயிரம் ரூபாய் நோட்டு"

    • ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • அதிக அளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் என்றால் வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக தொலைக்காட்சியில் தோன்றி பேசிய அவர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.500, 1000 நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பும் வெளியானது.

    இதனால் தங்களிடம் இருக்கும் பணத்தை மாற்ற பொதுமக்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை அப்போது ஏற்பட்டது. இதன் பின்னர் ரூ.2 ஆயிரம் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    ஆனால் நாட்கள் செல்ல செல்ல ரூ.2 ஆயிரம் நோட்டின் புழக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பார்ப்பதே அரிதாகி விட்டது.

    இந்த நிலையில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 30-ந்தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் அனைத்தும் புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ஒரு நபர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் என்றால் வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகிறார்கள். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கடைக்கு எடுத்து வந்தால் அந்த நோட்டுகளை வாங்க மறுக்கும் வியாபாரிகள், வங்கிகளில் போய் மாற்றிக் கொள்ளுங்கள்.

    உங்கள் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு தாங்கள் போய் மாற்றினால் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று கூறி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு பொருட்கள் எதையும் கொடுக்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இன்று இதனை காண முடிந்தது.

    ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் என அனைத்து இடங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்தாலே வியாபாரிகள் பொதுமக்களிடம் இருந்து அதனை வாங்காமல் திருப்பி அனுப்பிய நிலையே காணப்பட்டது.

    இது தொடர்பாக ஆவடி அய்யர் பவன் ஓட்டல் அதிபர் அய்யா துரை கூறும்போது, "கடந்த முறை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டபோது பொதுமக்களின் நலன் கருதி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்கினோம்.

    அதுபோன்று வாங்கிய அதிகப்படியான பணத்தை வங்கிகளில் சென்று வியாபாரிகள் மாற்றியபோது நிறைய சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. அதிகப்படியான பணத்துக்கு வங்கி அதிகாரிகள் கணக்கு கேட்டு தொல்லை கொடுத்தனர். அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

    இதன் காரணமாகவே இந்த முறை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் தயங்குகிறார்கள். இதனால் கடைக்கு வரும் பொது மக்களிடம் வங்கிகளுக்கு சென்று நீங்களே 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளுங்கள், மற்ற ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி வருகிறோம்" என்றார்.

    இது தொடர்பாக வியாபாரிகள் சங்க அமைப்பினர் வாட்ஸ்அப் குழு மற்றும் சமூக வலைதளங்களில் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி உள்ளனர். அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    நமது வியாபாரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து யாரும் ஒவ்வொரு 2 ஆயிரம் ரூபாய் தானே தருகிறார்கள் என்று வாங்காதீர்கள். நீங்கள் அதை வங்கியில் தான் மாற்ற வேண்டும். ஆகையினால் உங்களது வங்கிக் கணக்கு வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஆகையினால் யாரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம். வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளுங்கள். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு எந்த அக்கவுண்டில் ஏறுகிறதோ அவர்கள் வருமான வரித்துறைக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டி வரும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பொதுமக்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு இன்றில் இருந்தே எந்த பலனும் இல்லை என்கிற நிலையே ஏற்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து பொதுமக்கள் எந்த பொருளையும் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வருகிற 23-ந்தேதி முதல் வங்கிகளுக்கு சென்று பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்பதால் வருகிற செவ்வாய்க்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கு மக்கள் வங்கிகளில் முண்டியடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கும் இன்னும் 4 மாதங்கள் வரை அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×